வியாழன், 2 மார்ச், 2017

ஏற்றம் காணும் சந்தையில் என்ன செய்வது?

நாமும் பல நாட்களாக பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்காக காத்திருக்கிறோம்.


ஒவ்வொரு முறையும் சில பரபரப்பான விடயங்கள் வரும் போது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதினால் அதற்கு நேர்மாறாக நடந்து விடுகிறது.அந்த வகையில் மோடி அதிர்ஷ்டசாலி தான். தொட்டதெல்லாம் ஏதோ ஒரு விதத்தில் துலங்கி விடுகிறது.

ரூபாய் ஒழிப்பின் காரணமாக நிறுவனங்களின் மூன்றாவது காலாண்டு நிதி அறிக்கை அவ்வளவு நன்றாக இருக்காது என்று எதிர்பார்த்தால் நடக்கவில்லை.

அடுத்து, பட்ஜெட் பங்குச்சந்தைக்கு எதிரமறையாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் நடக்கவில்லை.

அடுத்து நேற்று ஜிடிபி எண்களை அதிகம் சந்தையில் எதிர்பார்த்து இருந்தனர். ஏனென்றால் ரூபாய் ஒழிப்பு நடந்த காலாண்டின் ஜிடிபி அறிக்கை என்பதால் முக்கியத்துவம் பெற்றது.

உலக அளவில் பெயர் பெற்ற நிதி நிறுவனங்கள் கூட மூன்றாவது காலாண்டு ஜிடிபி ஆறு சதவீத அளவிலே இருக்கும் என்று கணித்து இருந்தன.

அதுவும் நேற்று பொய்த்து விட்டது.

மூன்றாவது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.1 சதவீத அளவில் இருந்தது. இது சந்தையின் எதிர்பார்ப்பை விட மிக அதிகம்.

அதனால் இந்திய பங்குச்சந்தை கடந்த ஒரு வருட உயர்வை இன்று எட்டியது.

மும்பை குண்டு வெடிப்பு நடந்த பிறகு அடுத்த நாளிலே மக்கள் எலெக்ட்ரிக் ட்ரெயினில் பயணிக்க ஆரம்பித்து விட்டனர்.

அது போல், ரூபாய் ஒழிப்பு போன்ற எதிர்மறை பொருளாதார நிகழ்வுகளையும் தாங்கும் பக்குவத்தை மக்கள் பெற்று விட்டார்களோ என்று தோன்றுகிறது.

இந்த எதையும் தாங்கும் இதயம் இந்திய மக்களுக்கு இருப்பது ஒரு வகையில் அரசிற்கு பலம் தான்.

இன்னும் வெளியிடப்பட்ட ஜிடிபி அறிக்கையை கூர்ந்து நோக்கினால் உலோகம், சுரங்கம், விவசாயம் போன்றவை அதிகப்படியான நேர்மறை வளர்ச்சியை பெற்று இருக்கிறது.

மற்ற நுகர்வோர், மருந்து, உற்பத்தி போன்றவை எதிர்மறை வளர்ச்சியையே கொடுத்துள்ளன.

இவற்றிக்கு உள்ள இடைவெளி அதிகமாக இருக்கிறது என்பதை மட்டும் தான் இப்போதைக்கு பலவீனமாக சொல்ல முடியும்.

ஆனாலும் மார்ச் 11ல் வரவிருக்கும் உத்திரபிரதேச தேர்தல் முடிவுகள் நீண்ட காலமாக உச்சத்தில் இருக்கும் சந்தையை கீழே இழுத்து செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது, அப்பொழுது வாங்கும் வாய்ப்புகள் உருவாகலாம் என்று எதிர்பார்க்கலாம்.

மொத்தத்தில் முதலீட்டிற்காக சந்தையை பார்ப்பவர்கள் உச்சத்தில் இருக்கும் சந்தையை தற்போது தவிர்க்கலாம்.

ஆப்சன்ஸ் போன்ற குறுகிய கால வர்த்தகத்தில் இருப்பவர்கள் PUT வழியை பயன்படுத்துவது பலனளிக்கும்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக