வெள்ளி, 17 மார்ச், 2017

காளையின் சந்தையில் எந்த துறை பங்குகளில் முதலீடு செய்யலாம்?

தற்போது சந்தை 29,500 சென்செக்ஸ் புள்ளிகளையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.


ஒரு பக்கம் 35,000 புள்ளிகள் வரை செல்லும் என்று சொல்லுமளவு கூட காளையின் பிடியில் சந்தை உள்ளது.



ஆனாலும் ஒரே விதமான ஏற்றம் என்பது அரிதானது தான். குறைந்த பட்சம் தற்போதைய நிலையில் இருந்து 2% அளவாவது கீழே வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் சந்தை இரண்டு வருடங்களுக்கு முன்பு 29,000 புள்ளிகளுக்கு சென்றது. மீண்டும் அதே 29,000 நிலைக்கு தற்போதைக்கு வந்துள்ளது.

ஆனாலும் இந்த சம இடைவெளியில் சில பங்குகள் ஒன்று முதல் மூன்று மடங்கு வரை கூடி உள்ளது என்பதை கவனிக்கலாம்.

அதில் நாம் இலவச போர்ட்போலியோவில் பரிந்துரை செய்த AEGIS Logistics என்ற பங்கும் ஒன்று.

நாம் 13 ரூபாய்க்கு பரிந்துரை செய்த இந்த பங்கு இன்று 200 ரூபாயை தாண்டியுள்ளது. (எளிதான கணக்கிற்காக ஒன்றிற்கு பத்து என்ற பங்கு பிரித்தலை தவிர்த்துள்ளோம்.)

பார்க்க:
முதலீடு இலவச போர்ட்போலியோ பரிந்துரை

அப்படியானால் இன்டெக்ஸ் புள்ளிகள் என்பது அதில் இருக்கும் 50 அல்லது 100 நிறுவனங்களை மட்டும் அதிகம் சார்ந்து இருக்கிறது என்பதை உணர்த்தும்.

தனிப்பட்ட முறையில் நன்றாக செயல்படும் பங்குகள் அல்லது Cyclical Stocks என்று சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படும் பங்குகள் சென்செக்ஸ், நிப்டி போன்றவற்றில் இருந்து வித்தியாசமான போக்கையே காண்பித்துள்ளன என்பதை உணரலாம்.

அந்த வகையில் தற்போது புள்ளிகள் உயர்வில் இருக்கிறதோ அல்லது தாழ்வில் இருக்கிறதோ என்று கவலைப்படாமல் முதலீடு செய்ய சில துறைகளை பகிர்கிறோம்.

முதலில் சீனா ஒரு வித்தியாசமான நிலைப்பாடை எடுத்துள்ளது.

சீனாவில் திடீர் என்று ஏற்பட்ட மதிப்பு இழப்பு காரணமாக கடந்த இரு வருடங்களில் மிகக் குறைவான விலையில் சீனா டயர் நிறுவனங்கள் தங்கள் உற்பத்திகளை இங்கு கொட்டி வந்தன.

இது உள்நாட்டு இந்திய நிறுவனங்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.

ஆனால் தற்போது இந்த நிறுவனங்கள் அமெரிக்காவை நோக்கி கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன.

இது தவிர தாய்லாந்தில் ஏற்பட்ட கடுமையான மழை காரணமாக சர்வதேச சந்தையில் ரப்பர் விலையும் கூடியது. இதனால் இந்திய நிறுவனங்களுக்கு மூலப் பொருள் செலவும் கூடி இருந்தது.

தற்போது இந்த இரண்டும் கட்டுக்குள் வர இருப்பதால் இந்திய டயர் நிறுவனங்களுக்கு எல்லாம் கூடி வருகிறது.

அடுத்து,

வெயில். இந்த வருடம் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று சொல்கிறார்கள். சென்னையில் நேரிலே அதிகமாக பார்க்க முடிகிறது.

இதனை சாதகமாக பயன்படுத்தும் நிறுவனங்களும் உள்ளன என்பதை நாம் உணரலாம்.

ஏசி போன்ற குளிர்சாதன நிறுவனங்கள் அதிக அளவில் பலன் பெற வாய்ப்பு உள்ளது. அது போல், மின் விசிறி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், குளிர்பானங்கள் நிறுவனங்கள் போன்றவற்றில் முதலீடு செய்தால் அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இறுதியாக,

மருந்து நிறுவனங்களின் பங்குகள் பாதாளத்தில் விழுந்து பல மாதங்கள் ஆகி விட்டன. ஆனாலும் சீண்டுவார் இல்லை என்பதற்காக நாம் விட வேண்டியவில்லை.

கண்டிப்பாக மீண்டும் எழும் நிறுவனங்களில் இவையும் ஒன்றாகும் என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.

பொதுவாக சந்தை வீழ்ச்சியில் இருக்கும் போது வற்றிய நீரில் மீன் பிடிப்பதை போல் எளிதாக பங்குகளை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் உச்சத்தில் அவ்வளவு எளிதில்லை.

அதற்காக முற்றிலும் ஒதுங்கி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்பதையும் நாம் உணர வேண்டும்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக