செவ்வாய், 10 ஜூலை, 2018

MSP விலை விவசாயிகளுக்கு எவ்வளவு பலன் தரும்?

கடந்த வாரம் மத்திய அரசு விவசாய விளை பொருட்களுக்கான குறைந்த பட்ச விலைகளை உயர்த்தியுள்ளது.


அது விவசாயிகளுக்கு மற்றும் சந்தைக்கு என்ன மாற்றத்தைக் கொடுக்கலாம் என்பதை பார்ப்போம்.



MSP என்பது Minimum Support Price என்பதன் சுருக்கமாகும்.

26 வகையான விவசாய விளை பொருட்கள் இந்த பிரிவில் வருகிறது.

இந்த விலையானது கிட்டத்தட்ட இன்சுரன்ஸ் போன்றது.

சாகுபடி காலத்திற்கு முன்னால் இருக்கும் விலையானது சாகுபடி நேரத்தில் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.

அறுவடை நேரத்தில் மிக அதிகமாக சந்தைக்கு வரும் விளை பொருட்களால் விலை அதிக அளவில் குறைந்து விடுகிறது.

அந்த நேரத்தில் விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்பதற்காக குறைந்த பட்ச விலை என்பது பசுமை புரட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

உதாரணத்திற்கு நெல்லின் குறைந்த பட்ச அரசு விலை  1750 ரூபாய் என்று 100 கிலோவிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சந்தை விலை இதற்கு மேல் சென்றால் விவசாயிகள் வெளிச்சந்தைகளில் விற்றுக் கொள்ளலாம்.

அதே நேரத்தில் அறுவடை காலத்தில் கீழே சென்றால் அரசிடம் விற்றுக் கொள்ளலாம்.

அரசு இவ்வாறு பெற்ற தானியங்களை ரேஷன் மற்றும் அவசர காலங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும்.

உலக வர்த்தக சபையின் விதிகள் படி இந்த மாதிரியான மானியங்களை கொடுக்க முடியாது. ஆனால் அரசு அதனை மீறி உள்ளது.

ட்ரம்பின் நியாமற்ற வர்த்தக போரை தடுக்க முடியாத வர்த்தக சபை தற்போது இந்த மாதிரியான விடயங்களில் ஒன்றும் செய்ய முயலாது.

இந்த குறைந்த பட்ச விலைக்கு கூட சுவாமிநாதன் கமிட்டியின் படி சில சூத்திரங்கள் இருக்கின்றன.

உரம், விதைகள், டீஸல் விலைகள் போன்றவை அடிப்படையாகவும் அத்துடன் மனித உழைப்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஆனாலும் அரசு இன்னும் முழு பரிந்துரை படி விலைகளை அறிவிக்கவில்லை. முப்பது சதவீத அளவு குறைந்த விலையே வழங்கப்படுகிறது.

ஆனாலும் முழுமையாக விவசாயிகளுக்கு இந்த விலை உயர்வின் பலன்கள் செல்கிறதா? என்றால் இல்லை என்றே சொல்ல முடியும்.

இந்த விவசாய பொருட்களை வாங்கும் மண்டிகள் வெகு தொலைவில் இருக்கிறது.

குறைந்த நில பரப்பில் விவசாயம் செய்யும் குறு விவசாயிகளுக்கு போக்குவரத்து கட்டணம் அதிகமாகி விடுகிறது.

அதனால் அவர்கள் அருகில் இருக்கும் தரகர்களை நம்பி குறைவான விலைக்கு விற்று விடுகிறார்கள்.

இது தவிர, விவசாயிகள் அறுவடை காலங்களுக்கு முன்னரே தரகர்களிடம் கடன் பெற்று விடுகிறார்கள். அதனால் அவர்களிடம் தான் விற்க வேண்டும் என்று கட்டாயமும் கூட வருகிறது.

ஒரு சர்வேயில் வெறும் 6% விவசாயிகள் தான் இந்த குறைந்த பட்ச விலையால் பயன் பெறுகிறார்கள் என்று தெரிகிறது.

ஆக. திட்டங்கள் எல்லாம் நன்றாக தான் இருக்கிறது. ஆனால் போகுமிடம் தான் மாறி விடுகிறது.

அதனால் அரசு மாவட்ட தலைநகரங்களில் மட்டும் இந்த மண்டிகளை வைக்காமல் ஒவ்வொரு தாலுகாவிலும் வைக்க முயல வேண்டும்.

அத்துடன் விவசாயிகளுக்கு இது தொடர்பான விழிப்புணர்வையும் போதுமான அளவு கொடுக்க வேண்டும்.

பெரும்பாலான விவசாயிகளுக்கு இன்னும் இந்த செய்தி சென்றடைந்து இருக்காது என்று நம்பலாம்.

இன்னும் நமது மொழித் தளங்கள், செய்திதாள்கள் எதுவுமே போதுமான அளவிற்கு பிரசுரிக்கவில்லை என்பதே இதற்கு சாட்சி.



இறுதியாக,

விவசாயிகளுக்கு இந்த பலன் செல்கிறதோ, இல்லையோ...ஆனால் அரிசி, கோதுமை போன்ற விவசாய பொருட்களின் விலை உயர்வு நமக்கு தள்ளப்படும்.

அத்துடன் பருத்தி விலையும் கூட்டப்பட்டதால் டெக்ஸ்டைல் பொருட்களின் விலையும் கூடலாம்.

அதனால் பணவீக்கம் கூட வாய்ப்பு உள்ளது. இது வட்டிகளை கூட்டுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

அதே நேரத்தில் தரகளுக்கு 100 ரூபாய் லாபம் கிடைத்தால் அதில் 30 ரூபாயாவது சந்தை நியதிகள் படி விவசாயிகளுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.

அதனால் கிராமப்புற பொருளாதாரம் சார்ந்த சில நிறுவனங்கள் பலன் பெற வாய்ப்பு உள்ளது.

விவசாயம் சார்ந்த ட்ராக்டர் நிறுவனங்கள், சரக்கு வாகனங்கள், உரம், விதை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் போன்றவை அதிக பலன் பெற வாய்ப்பு உள்ளது.

அத்துடன் கிராமப்புறம் சார்ந்த நுகர்வோர் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களும் நல்ல மாற்றங்களைக் காணலாம்.

மாநகர பொருளாதரத்தில் மிச்சம் என்பது குறைவாக இருக்கும் சூழ்நிலையில் பல நிறுவனங்கள் அடுத்த நிலைக்கு கவனத்தை திருப்பியுள்ளன.

விஜய், சன் டிவியில் வரும் கிராமத்திற்கு செல்வோம் என்று வரும் நிகழ்சிகளைக் கூட சான்றாக சொல்லலாம். :)

அதனால் சிட்டியை நோக்கி வருபவர்கள் கவனமாக இருங்கள்!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக