புதன், 4 ஜூலை, 2018

ஒரு வழியாக ஐரோப்பிய டீலை கொண்டாடிய டாடா ஸ்டீல்

டாடா குழுமத்தை பொறுத்தவரை சந்திரசேகர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.


சாம்சங்கில் பணி புரிந்த போது டாடா மாதிரியான அனுபவம் கிடைத்ததுண்டு.



இது ஒரு குழும நிறுவனமாக இருப்பதால் ஒரு நிறுவனத்தின் பங்குகள் மற்றொரு நிறுவனத்திடம் இருக்கும். மற்றொன்று இன்னொரு நிறுவனத்தில் இருக்கும்.

இப்படி சங்கிலித் தொடர் பங்கு முதலீடுகள் ஒரு நிறுவனத்தை மற்றொரு நிறுவனத்தைக் கட்டுப்படுத்த உதவும்.

ஆனால் தேவையற்ற தடங்கல் காரணமாக Efficiency என்பது குறைந்து விடும்.

அதனை சந்திரசேகர் சரி செய்து வருகிறார். வரும் காலத்தில் டாடாவின் எந்த குழும நிறுவனத்தில் முதலீடு செய்தாலும் நல்ல ரிடர்ன் கிடைக்க வாய்ப்புள்ளது.

அந்த அளவிற்கு Unlocking Value ஒவ்வொரு நிறுவனத்திடம் உள்ளது.

இனி டாடா ஸ்டீலில் ஏற்பட்ட மாற்றங்களையும் பார்ப்போம்.

பத்து வருடங்களுக்கு முன்னால் லக்ஷ்மி மிட்டல் Arcellor என்ற ஐரோப்பிய நிறுவனத்தை வாங்கி உலக அளவில் முதல் இடத்தை பிடித்தார்.

அதன் தொடர்ச்சியாக டாடாவும் ஆசையில் பெரும் விலை கொடுத்து Corus என்ற நிறுவனத்தை வாங்கியது.

ஆனால் உலக அளவில் மிகப் பெரிய பொருளாதார தேக்கம் ஏற்பட டாடா ஸ்டீலின் ஐரோப்பிய விற்பனை மந்தமானது.

அதனால் வாங்கிய நிறுவனத்தை வைத்து பலன் எதுவும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் கடனை பெரிதளவு கூட்டி நெருக்கடி நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தி விட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் 4 மில்லியன் டன் உற்பத்தி செய்து வந்த டாடா ஸ்டீல் 13MT உற்பத்தி செய்யுமளவிற்கு வளர்ந்து விட்டது.

அதே நேரத்தில் ஐரோப்பிய பிரிவோ 18MTயில் இருந்து 10MTயாக இறங்கி வந்து விட்டது.

மேலும் ஐரோப்பாவில் பணியாளர் யூனியன் பிரச்சினையும் தலை தூக்க, டாடாவால் விட்டால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

இது தவிர, இந்திய சந்தையில் லாப மார்ஜின் அதிகம். ஆனால் ஐரோப்பாவில் குறைவு.

இதனால் இந்திய சண்டையின் முக்கியத்துவத்தை உணர்ந்த டாடா தன்னுடைய உற்பத்தியை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக்க திட்டமிட்டது.

Capital Set-up அதிக காலம் பிடிக்கும் ஸ்டீல் துறையில் ஆர்கானிக் முறை  வளர்ச்சியில் மேற்சொன்ன இலக்கு என்பது சாத்தியமல்ல.

இந்த நேரத்தில் இந்திய ஸ்டீல் நிறுவனங்களும் வாராக் கடன் பிரச்சினையில் சிக்கி தவிக்க, அந்த நிறுவனங்களை வாங்க முற்பட்டது.

Bhusan steel நிறுவனத்தை மட்டும் 35,000 கோடி கொடுத்து வாங்கியது. இது தவிர, Usha Martin நிறுவனத்தையும் வாங்குவதற்கு விண்ணப்பித்து உள்ளது.

இதையும் வாங்கி விட்டால் 2022க்குள் அவர்கள் சொன்ன இலக்கு என்பது சாத்தியமானது தான்.

ஆனால் இந்த நிறுவனங்களை வாங்குவதற்கு பணம் வேண்டும். அதே நேரத்தில் ஐரோப்பிய பிரிவு எதற்கும் உதவாமல் கடனில் இருக்கிறது.

அதனால் எப்படியாவது தள்ளி விட வேண்டும் என்ற முடிவிற்கு வந்தது.

இந்த நேரத்தில் இன்னொரு ஐரோப்பிய நிறுவனத்தையும் பார்ப்போம்.

Thyssenkrupp என்ற ஜெர்மன் நிறுவனம் Elevators மற்றும் பிற காபிடல் துறைக்கு தேவையான பொருட்களை தயாரித்து வருகிறது. இது தான் Core வியாபாரமும் கூட.

அவர்களுக்கும் ஸ்டீல் பிரிவும் உண்டு. ஆனால் ஐரோப்பாவில் நிலவும் போட்டி மற்றும் தேக்கம் காரணமாக ஸ்டீல் துறையில் மட்டும் அதிக கவனம் செலுத்த வேண்டி இருந்தது.

இது மற்ற பிரிவுகளை பாதிக்க, Thyssenkrupp எப்படியாவது ஸ்டீலை விற்று விட வேண்டும் என்று முடிவு செய்தது.

இந்த சூழ்நிலை டாடா ஸ்டீலையும், Thyssenkrupp  நிறுவனத்தையும் ஒரு புள்ளியில் சேர்த்தது.

இரண்டு நிறுவனங்களும் தங்களது ஐரோப்பிய ஸ்டீல் பிரிவுகளை இணைத்து ஒரு புதிய வலுவான நிறுவனமாக மாற்றி விடுவோம் என்று நினைத்தன.

அதற்கான ஒப்பந்தம் 50:50 என்ற பங்கு விகிதத்தில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பே கையெழுத்தானது.

இவ்வாறு இணைப்பதன் மூலம் இணைக்கப்பட்ட நிறுவனமானது கிட்டத்தட்ட 3000 கோடி ரூபாய் அளவு வருடத்திற்கு சேமிக்க முடியும்.

ஆனால் 4000 பணியாளர்கள் குறைக்கப்படுவார்கள். இதனால் ஐரோப்பாவில் வலுவாக இருக்கும் யூனியன்கள் எதிர்த்தன.

அதே நேரத்தில் இந்த இடைப்பட்ட ஒன்பது மாத காலத்தில் Thyssenkrupp நிறுவனத்தின் லாபம் கூட, டாடா ஸ்டீலின் ஐரோப்பிய லாபமோ குறைந்து விட்டது. கீழே பார்க்க.



Thyssenkrupp நிறுவன பங்குதாரர்கள் இந்த இணைப்பின் மதிப்பு சரியல்ல என்று கேள்வி எழுப்பினார்கள்.

இறுதியில் கடந்த இரு வார கால கூட்டங்களில் 55:45 என்ற பங்கு விதத்தில் பிரித்து கொள்ளலாம் என்று ஒத்துக் கொண்டார்கள்.

ஆனால் Thyssenkrupp நிறுவன பங்குதாரகளோ இந்த ஐந்து சதவீத பங்குகள் கூட சரியில்லை என்ற குரல் கொடுக்கிறார்கள். ஆனால் வேறு வழியில்லை.

டாடா ஸ்டீலை பொறுத்தவரை ஐந்து சதவீத பங்குகளை இழந்தாலும், ஐரோப்பா பிரிவு இதனை விட மோசமாகி போய் விட்டால் முதலுக்கே மோசமாகி விடும்.

மேலும் ஐரோப்பிய பிரிவில் இருக்கும் 20,000 கோடியளவு கடனானது இந்த இணைக்கப்பட்ட நிறுவனத்திடம் சென்று விடும்.

அந்த இருபாதாயிரம் கோடியை இந்தியாவிலாவது பயன்படுத்தலாம். இனி இந்தியாவில் அதிக கவனமும் செலுத்த முடியும். அதனால் டாடா ஸ்டீலுக்கு அதிக பலனே!

இறுதியாக டாடா ஸ்டீலின் இந்த முடிவுகள் 'அடுத்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதார தேக்கம் என்ற ஒன்று' இந்தியாவில் வராவிட்டால் பெருமளவு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.

Value Unlocking என்பது டாடா ஸ்டீல் வரும் காலங்களில் அதிகமாக இருக்கலாம் . முதலீட்டாளர்கள் தொடரலாம்!

தொடர்பான பதிவு:
டாட்டா ஸ்டீலின் ப்ரீமிய விலை டீல், யாருக்கு லாபம்?


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக