புதன், 18 ஜூலை, 2018

ஓவர்லோட் குழப்பத்தால் பதறும் ஆட்டோ நிறுவனங்கள்

மோடி அரசுக்கு எல்லோரையும் பதற்றத்தில் வைத்து இருப்பது பிடித்த வேலை போல.


இதில் நன்மை இருக்கிறதா? இல்லையா? என்று யோசிப்பதற்குள் அறிக்கைகள், கொள்கை முடிவுகள் வந்து விடும்.



ரூபாய் நோட்டு மதிப்பின்மை, GST என்று எதுவெடுத்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் தயாராவதற்குள் மற்றவர்கள் தயாராகிவிட வேண்டும்.

ரூபாய் நோட்டில் வங்கிகள் தயாராகவில்லை. GSTயில் மென்பொருளே ரெடி இல்லை என்று உதாரணங்களை சொல்லலாம்.

இதே போல் ஆட்டோ துறையிலும் 2030க்குள் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாராக வேண்டும் என்று சொன்னார்கள். அப்புறம் அது தொடர்பாக அறிவிப்பு ஒன்றும் இல்லை.

அதே போல், BS-VI தரதிற்கு மேல் உள்ள வாகனங்கள் தான் தயாரிக்க வேண்டும்.

2020க்குள் இதை செயலுக்கு கொண்டு வர வேண்டும் என்பதும் ஆட்டோ நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவு.

அதில் அவர்கள் மும்மரமாக இருக்க நேற்று இன்னொரு அறிக்கையும் வந்துள்ளது.

சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்கள் 25% முதல் 30% வரை அதிகமாக ஏற்றி செல்லலாம் என்பது தான் நிதின் கட்காரியின் உத்தரவு. லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களுக்கு சாதகமான முடிவாக இது பார்க்கப்படுகிறது.

இதற்கு அவர் சொன்ன காரணமும் கொஞ்சம் வித்தியாசம் தான். இந்தியாவில் பெரும்பான்மையாக வாகனங்கள் ஓவர்லோட் சட்டங்களை மதிப்பதில்லை. லஞ்சம் அதிகமாக உள்ளது.

அதனால் ஓவர்லோட் லிமிட்டையும்  கூட்டி விட்டோம் என்று சொல்லி உள்ளார்.

RTO அலுவலகத்தில் பணி புரிபவர்களை ஒழுங்காக பணி புரிய சொன்னாலே இதை தடுக்கலாம். அவர்கள் லஞ்சம் வாங்குவதை தடுப்பது என்பது அரசின் கடமையே.

அதனை தட்டிக் கழித்து விட்டு சட்டங்களை மாற்றுவதால் ஒன்றும் பயன் வரப் போவதில்லை.

உலக தரத்திற்கு விதி முறைகளை மாற்றி உள்ளோம் என்று சொல்லியுள்ளார்கள். ஆனால் உலக தரத்திற்கு சாலைகள், வாகனங்கள் இல்லாத போது சாலை பாதுகாப்பை யார் உறுதி செய்வது?

நிதின் கத்காரி போகிற போக்கில் சொல்லி சென்று விட்டார்.

ஆனால் இந்த புதிய விதி முறைகள் புதிய வாகனங்களுக்கு மட்டுமா? அல்லது ஏற்கனவே இருக்கிற வாகனங்களுக்கும் உண்டா? என்பதில் தெளிவில்லை.

புதிய வாகனங்களுக்கு மட்டும் என்றால் குறுகிய காலத்திற்கு அதிக சரக்கு வாகன விற்பனை நடக்கலாம்.

ஆனால் எப்பொழுது இருந்து அமலுக்கு வரும் என்றும் தெரியவில்லை என்பதால் மக்கள் வாங்குவதை தள்ளி போடுவது கூட நடக்கலாம்.

அப்படி புதிய கொள்கை படி வாகனங்கள் தயாரிக்க வேண்டும் என்றால் ப்ரேக், டயர், உதிரி பொருட்கள் போன்றவற்றில் அதிக மாற்றம் செய்ய வேண்டும். இதற்கும் ஒரு வருடம் கூட ஆகலாம்.

அதே நேரத்தில் பழைய வாகனங்களுக்கும் பொருந்தும் என்று சொன்னால் கனரக வாகன விற்பனையில் ஒரு சுணக்கம் ஏற்படலாம்.

கனரக வாக விற்பனையில் சந்தையைக் கொண்டுள்ள அசோக் லேய்லேன்ட், டாடா மோட்டோர்ஸ் நிறுவனங்கள் இந்த குழப்பத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்றைய சந்தையில் மட்டும் பத்து சதவீத இழப்பை சந்தித்துள்ளன.

ஏற்கனவே BS-VI, எலெக்ட்ரிக் வாகனங்கள் போன்றவற்றில் மும்மரமாக இருக்கும் அந்த நிறுவனங்கள் வேறு திசையிலும் கவனம் செலுத்த வேண்டிய தேவை வருகிறது.

நுகர்வோர், தயாரிப்பவர் என்று இருவருக்கும் உள்ள குழப்பங்களை தீர்க்கும் பொறுப்பு அரசுக்கு அதிகம் உள்ளது.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக