வெள்ளி, 20 ஜூலை, 2018

பெற்றோரை கவனிக்கவில்லை? சொத்தை திருப்பிக் கொடுக்க..

ஒரு சமுதாயத்தில் பெண், வயதானனவர்கள், குழந்தைகள் போன்றோர் வலுவற்றவர்களாக கருதப்படுவதால் அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. 


அதனால் வலுவானவர்கள் வலுவற்றவர்களைக் கவனித்து கொள்ள வேண்டும் என்பதற்காக சட்டங்கள் இயற்றப்பட்டு இருக்கின்றன.இதில் குழந்தைகள், பெண்களுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்பது தற்போது பெருகி வரும் விவாகரத்து பிரச்சினைகளால் அதிகம் தெரிய வருகிறது.

ஆனால் பெற்றோர் விடயத்தில் பெரும்பாலும் நீதி மன்றம் வரை எதுவும் செல்லாததால் இருக்கிற சட்டம் அவ்வளவாக தெரிய வில்லை என்றும் சொல்லலாம்.

அண்மையில் மும்பையை சேர்ந்த ஒரு வயதான தம்பதி தொடர்ந்த வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்ததை தொடர்ந்து இந்த சட்டத்தின் உள்ளடக்கம் வெளியே தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கின் சாராம்சம் இது தான்,

வயதான தந்தை மும்பையில் தமக்கு சொந்தமான பிளாட்டின் 50% பங்கினை தமது மகனுக்கு எழுதிக் கொடுத்து விட்டார்.

ஆனால் அதன் பிறகு தமது மகனும், மருமகளும் தங்களை மோசமாக நடத்துவதாகவும், அதனால் எழுதிக் கொடுத்ததை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் The Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007 சட்டத்தின் படி அவர் தானமாக கொடுத்ததை ரத்து செய்து விட்டனர்.

ஒரு பக்கம் இந்தியாவில் தனிக்குடித்தனம் பெருகி வருகிறது. மற்றொரு பக்கம் மேலை நாடுகளில் இருப்பது போல் வயதானவர்களுக்கு அரசாங்கத்தின் பாதுகாப்பும் கிடைப்பதில்லை.

அந்த சூழ்நிலையில் இந்த தீர்ப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.2007ல் கொண்டு வரப்பட்ட மேற்சொன்ன சட்டம் என்ன சொல்கிறது என்றால்,

சொத்து இருந்தாலும், இல்லாவிட்டாலும்,வயதான பெற்றோர் ஓய்வு கால வாழ்க்கையை நடத்துவதற்கு பிள்ளைகள் மாதம் 10,000 ரூபாய் கொடுக்க வேண்டும்.

இதில் பிள்ளைகள் என்பது ஆண், பெண் என்று இரு பாலரையும் குறிக்கும். மகன், மகள் மட்டுமல்லாமல் மருமகன், மருமகள், பேரப்பிள்ளைகளையும் உள்ளடக்கும் என்பதையும் கவனிக்க.

அடுத்து, பிள்ளைகளுக்கு தானமாக கொடுத்த சொத்தை தாங்கள் சரியாக கவனிக்கப்படாவிட்டால் கொடுத்ததை திருப்பியும் பெற்றுக் கொள்ள முடியும்.

இதில் திருப்பிக் கொடுத்தல் என்பது 2007க்கு பின் தானமாக கொடுத்தலை மட்டுமே குறிக்கும்.

என்ன தான் சட்டங்கள் இயற்றினாலும் ரத்த பாச சொந்தங்களை கவனிக்க வேண்டும் என்பது தானாக வர வேண்டும். இது இயற்கை வகுத்த விதி.

அந்த விதியை மதிக்காவிட்டால் தான் வலுவற்ற தன்மையை அடையும் போது தமக்கும் அதே கதி என்பதும் நிதர்சனமான உண்மை.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக