திங்கள், 23 ஜூலை, 2018

சமச்சீர் இல்லாத நிப்டி உயர்வு, சரியான அளவுகோலா?

எமக்கு வரும் கேள்விகளில் முக்கிய ஒன்று...நிப்டி மட்டும் உயர, தாங்கள் வைத்து இருக்கும் பங்குகள் ஏன் கூடவில்லை என்பது தான்.


இது உண்மை தான்.



நிப்டி என்பது ஐம்பது பெரிய இந்திய நிறுவனங்களின் சந்தை மதிப்பை குறிக்க பயன்படுத்தும் குறியீடு.

இந்திய பங்குசந்தையை மதிப்பிட உதவும் ஒரு முக்கிய அளவுகோல் தான் நிப்டி.

ஆனால் தற்போதைய  ஏற்ற, இறக்கங்கள் நிப்டியை ஒரு சமசீரான அளவோலாக கருத முடியாத நிலையில் தான் வைக்கின்றன.


ஐம்பது நிறுவனங்கள் நிப்டியில் இருந்தாலும், எல்லாவற்றிற்கும் ஒரே முக்கியத்துவம் கிடைப்பதில்லை.

ஒவ்வொன்றுக்கும் அதனுடைய சந்தை மதிப்பில் அடிப்படையில் தான் மதிப்பு கொடுக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு நிப்டி பட்டியலில் ஏழு லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் TCS நிறுவனம் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த நிறுவனத்திற்கு கொடுக்கப்படும் எடை விகிதம் 9.52.

அதே நேரத்தில் நிப்டி பட்டியலில் கடைசி  இடத்தில இருக்கும் UPL நிறுவனத்திற்கு 0.42 புள்ளிகள் எடையே (weightage) கொடுக்கப்படுகிறது.

அப்படி பார்த்தால் TCS பங்கின் மதிப்பு 1% சதவீதம் கூடினால் நிப்டியில் 9.52 புள்ளிகளைக் கூட்டும்.

அதே நேரத்தில் கீழே உள்ள UPL பங்கு 1% கூடினால் நிப்டியில் அரை புள்ளிகளையே தான் கூடவோ, குறையவோ செய்யும்.

தற்போதைய சந்தையில் பார்த்தால் முதல் பத்து இடங்களில் இருக்கும் TCS, HDFC Bank, Reliance, Hindustan Unilver, ITC போன்ற நிறுவனங்கள் அண்மைய வாரங்களில் ஐந்து சதவீதத்திற்கும் மேல் கூடி உள்ளன.

அதிலும் இந்த பங்குகள் 52 வார உச்ச நிலையைக் கூட அடைந்துள்ளன.

நிப்டியின் 50%க்கும் மேல் எடை மதிப்பு கொண்ட இந்த நிறுவனங்களில் ஏற்படும் ஒரு சிறு பாதிப்பும் மொத்த நிப்டியில் பெரிதளவு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இந்த நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள உயர்வு மொத்த பங்குசந்தையும் உயர்ந்தது போல் மாயையைக் கொடுக்கிறது.

ஆனால் கடைசியில் இருந்து மற்ற நாற்பது பங்குகளை பார்த்தால் ஒரு வருட உச்ச மதிப்பில் இருந்து 5% முதல் 10% வரை வீழ்ந்தே காணப்படுகின்றன.

ஆனால் அவற்றின் எடை விகிதம் நாற்பது பங்குகளையும் சேர்த்து தான் 50%க்குள் வருகிறது.

இதனால் கடை நிலை இந்த பங்குகளின் மாற்றங்கள் நிப்டியிலும் தெரிவதில்லை.

தற்போது நிப்டி மீண்டும் வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. ஆனால் அடிப்படையாக பார்த்தால் சமச்சீரற்ற இந்த வளர்ச்சி நாம் இன்னும் கரடியின் பிடியில் இருந்து விலகவில்லை என்பதையே காட்டுகிறது.

முதல் பத்து நிறுவனங்களுக்கு ஏன் இவ்வளவு உயர்கிறது என்று பார்த்தால் சூழ்நிலைகளை தான் முக்கியமாக குறிப்பிட முடியும்.

அண்மையில் நடுத்தர நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள ஆடிட்டர்கள் விலகல் காரணமாக ஒரு நம்பிக்கையற்ற நிலைத் தன்மை ஏற்பட்டுள்ளது.

அதே போல், கச்சா எண்ணெய் விலை உயர்வால் மூலப் பொருட்கள் விலை உயர்வால் லாப விகிதம் குறையும் என்றும் கணிக்கப்படுகிறது. இவற்றை சிறிய நிறுவனங்கள் எவ்வாறு கையாளும் என்பதில் ஒரு பெரிய கேள்வி வருகிறது.

இந்த பயமானது வெளிநாட்டு முதலீட்டாளர்களை நம்பிக்கையான பங்குகளை நோக்கி ஓட செய்து உள்ளது.

இன்னொரு நிலையில்,

பொதுவாக மிட் கேப் நிறுவனங்களை வாங்கி வைப்பவை ம்யூச்சல் பண்ட் மேலாண்மை செய்யும் உள்நாட்டு நிதி மேலாண்மை நிறுவனங்கள் தான்.

ஆனால் ம்யூச்சல் பண்ட் தொடர்பான சில புது விதி முறைகள் மிட் கேப் நிறுவனங்களில் அதிக அளவு முதலீடு செய்வதை தடுக்கிறது.

உதாரனத்திற்கு ஒரு பண்ட் Large Cap Fund என்ற பிரிவிற்குள் வந்தால் 80%க்கும் அதிகமான நிதி பெரிய நிறுவனங்களிலே முதலீடு செய்யப்பட வேண்டும் என்பது புதிய விதி. ஆனால் முன்பு இப்படியொரு நிலை இருந்ததில்லை. அதனால் இந்த பண்ட்கள் தங்கள் பெருமளவு நிதியை மாற்றி வருகின்றன.

இப்படியொரு சாதகமில்லாத சூழ்நிலைகளில் தான் சிறு, குறு பங்குகள் தவித்து வருகின்றன.

ஆனால் தண்ணீர் வற்றும் போது தான் குளத்தில் மீன்கள்பிடிப்பது எளிது.  . அது போல் இந்த வீழ்ச்சி என்பது அடுத்த பத்து ஆண்டுகளில் பத்து முதல் நூறு மடங்கு வரை ரிடர்ன் கொடுக்கும்  சிறு,குறு பங்குகளை இனங்கான உதவும்.

அதற்கு முக்கியமாக பத்து வருட பொறுமையும் அவசியம்! பயன்படுத்திக் கொள்வோம்!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக