வியாழன், 5 ஜூலை, 2018

பாலிசி போடும் மக்களும், நாமம் போடும் அரசும்

நமக்கு இன்சுரன்ஸ் பாலிசி என்றாலே முன் வருவது LIC தான்.


அரசு நிறுவனமான LICயில் போட்ட பணத்திற்கு என்றுமே பாதுகாப்பு இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையும் இதற்கு காரணம்.




ஆனால் அரசு வங்கிகள் நலிந்த பிறகு எல்ஐசியை ஒரு பகடை காயாகத் தான் மத்திய அரசுகள் பயன்படுத்தி வருகின்றன.

நஷ்டத்தில் ஓடும் மத்திய அரசு நிறுவன பங்குகளை வாங்க ஆட்கள் இல்லையா? உடனே எல்ஐசியிடம் ஒப்படைத்து விடு.

அரசிடம் 24% பங்குகள் வைத்து இருக்க வேண்டும் என்ற கொள்கையால் நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியாவை வாங்க யாரும் வரவில்லை.


அடுத்த Plan B என்னவென்றால்  LICஇடம் கொடுத்து விடுவோம்.

இப்படித் தான் அரசு துறையில் யாரெல்லாம் நஷ்டப்படுகிறார்களோ அனைத்தும் எல்ஐசியின் தலையிலே கட்டப்படும்.

இதன் தொடர்ச்சியாகத் தான் IDBI வங்கி எல்ஐசியின் தலையில் கட்டப்பட்டுள்ளது.

அதற்கு எல்ஐசியே விரும்பிக் கேட்டது போல் ஒரு நாடகமும் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இங்கு தான் பல கேள்விகள் வருகின்றன.

ஒரு வங்கியானது தொடங்கப்பட்டு ஐந்து வருடங்களுக்குள் அதன் ப்ரோமோட்டர்கள் 15%க்கும் மேல் வைத்து இருக்க கூடாது என்பது முக்கிய விதிமுறை.

LICயிடம் ஏற்கனவே 10% IDBI வங்கி பங்குகள் இருக்கிறது.

LICக்கு வங்கி தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்குமானால் மேலும் ஐந்து சதவீத பங்குகளை வாங்கினாலே போதுமானது.

ஆனால் மேலும் 41% பங்குகளை தள்ளி விட்டு எல்ஐசியின் பங்கு விகிதத்தை 51% ஆக அரசு உயர்த்தி விட்டது. இனி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதிகமாக உள்ள 35% பங்குகளை விற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

அதிலும் 15%க்கும் மேல் சென்ற விதி மீறலுக்கு அரசு துறை சார்பில் விசேச அனுமதி விலக்கும் வழங்கியுள்ளார்கள்.

சரி. அப்படியே LICக்கு வங்கியாக மாற வேண்டும் என்று மாறினால் IDBI வங்கியை விட வேறு நல்ல வங்கிகளே இல்லையா? என்ற கேள்வியும் வருகிறது.

IDBI வங்கியானது கொடுத்த கடன்களில் 35% பகுதியை வசூலிக்க முடியாமல் தடுமாறி வருகிறது.

அதனால் நஷ்டம் ஏற்பட்டு வங்கியை நடத்த முடியாமல் நிலைக்கு செல்ல, அரசே கடந்த இரு வருடங்களில் 20,000 கோடி அளவிற்கு நிதி வழங்கியுள்ளது.

அது இன்னும் போதுமானதாக இல்லை.

10,000 கோடி அளவு ரூபாய் கொடுத்து வாங்கிய எல்ஐசி மேலும் 10,000 கோடி அளவிற்கு நிதி கொடுத்தால் வாங்கிய வங்கியை நடத்த முடியும். அப்படி என்றால் வாங்கிய ரூபாய் 20,000 கோடி.

ஆனால் IDBI வங்கியின் மொத்த சந்தை மதிப்பே 23,000 கோடி தான்.

LICக்கு இந்தியா முழுவதும் 3300 கிளைகள் உள்ளன. ஆனால் IDBI வங்கிக்கோ 1900 கிளைகள் தான் உள்ளன.

வங்கி ஆசை இருப்பது உண்மையானால், இதனை விட பெரிய வங்கியையே வாங்கி இருக்கலாமே! அல்லது இருக்கும் கிளைகளை கூட மேலும் எளிதாக  விரிவாக்க முடியும். IDBI வங்கியை சரி செய்வதை விட இது எளிதான வேலை தான்.

இறுதியாக,

எல்ஐசிக்கு வங்கி ஆசை இருப்பது போல் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் நிதர்சனம் வேறு.

அரசுக்கோ, ரிசர்வ் வங்கிக்கோ எல்ஐசியை வங்கியாக மாற்ற வேண்டும் என்பதில் ஈடுபாடே கிடையாது.

அப்படி எல்ஐசி வங்கியாக மாறினால் அதன் கையில் பெருமளவு இருக்கும் மற்ற வங்கி நிறுவன பங்குகளை விற்க வேண்டி இருக்கும்.  பத்து லட்சம் கோடிக்கும் மேல் உள்ள அந்த பங்குகளை விற்றால் அரசின் மற்ற பொது துறை வங்கிகளின் பங்குகள் வீழ்ச்சியில் சென்று விடும்.

அதற்கு அரசுக்கு விருப்பம் இல்லாததால் எல்ஐசி வங்கி என்பது ஒரு கானல் நீர் தான்.

அப்படி என்றால், ஓடாத இந்த குதிரையை நடக்காத ஒன்றுக்கு வாங்குவானேன்?

ஒன்றும் இல்லை. அரசு வங்கிகளில் தவறான கடன் கொடுத்தவர்கள், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காதவர்கள் செய்த தவறுகளுக்கு அப்பாவி மக்களது இன்சுரன்ஸ் பணம் வீணாக்கப்படுகிறது.

இந்திய பங்குசந்தையில் எல்ஐசியின் முதலீடுகள் என்பது மிக அற்புதமாகவும் மிக அதிக அளவு ரிடர்ன் கொடுப்பதாகவும் இருக்கும். அந்த அளவிற்கு தகுதியான மேலாண்மை இருக்கிறது.

ஆனால் அந்த ரிடர்ன் காப்பீடு தாரர்களுக்கு வராமல் இருக்கிறது என்றால் அரசின் இந்த தலையீடு தான் ஒரு முக்கிய காரணம். தேவையற்ற முதலீடுகள் ரிடர்னே கொடுக்காமல் இருக்கின்றன.

காங்கிரஸ் இதனை செய்த போது பிஜேபி எதிர்த்தது. இப்பொழுது அதே பிஜேபி அதனை செய்கிறது.

எப்பொழுதும் நிலைமை இதே போல் நன்றாக இருக்காது. கடந்த அமெரிக்க பொருளாதார தேக்கத்தின் போது வங்கிகளுக்கு அடுத்து திவாலானது இன்சுரன்ஸ் நிறுவனங்கள் தான்.

அதனால் மக்களின் நம்பிக்கை பெற்ற இன்சுரன்ஸ் நிறுவனம் அதனை தக்க வைத்துக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

மொத்தமாக அனைத்தையும் எல்ஐசியில் போடுவது கூட ஆபத்தானது தான்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. Lic யில் 8 வருடத்திற்கு முன்பு wealth plus fund 60000 முதலீடு செய்து 8வருடத்திற்கு பிறகு கிடைத்த தொகை 68500 ரூபாய் .

    பதிலளிநீக்கு