வியாழன், 9 ஆகஸ்ட், 2018

PAT லாப மார்ஜினை எப்படி பயன்படுத்துவது?

எமது ஐந்தாவது ஆண்டு நிறைவு பதிவில் இனி அதிக அளவில் பங்குச்சந்தை அடிப்படை, சூத்திரங்கள் பற்றி எழுதுவதாக கூறி இருந்தோம்.

அதனை தொடர்கிறோம்.இதற்கு முன் Revmuthal.com தளத்தில் P/E, P/B போன்ற விகிதங்கள் தொடர்பாகவும் எழுதி இருந்ததை பார்த்திருக்கலாம்.


பார்க்க:

பங்குசந்தையை பொறுத்தவரை எந்தவொரு தனிப்பட்ட சூத்திரமோ, விகிதமோ மட்டுமே பங்குகளை மதிப்பிட உதவாது. அதுவும் ஒரு காரணி அவ்வளவு தான்.

அதனால் இந்த காரணிகளின் பட்டியல் இன்னும் நீண்டே தான் உள்ளது.

ஒவ்வொன்றாக பார்ப்போம்.

இந்த வாரம் PAT margin என்பதை பற்றி பார்ப்போம்.

PAT என்பதன் விரிவாக்கம் Profit After Tax என்பதாகும். தமிழில் சொல்வதென்றால் லாப விகிதம் எவ்வளவு? என்பதை குறிப்பிடும்.

அதாவது வரி மற்றும் இதர செலவினங்கள் போக ஒரு நிறுவனத்திற்கு எவ்வளவு லாபம் கிடைத்து இருக்கிறது என்பதை அறிய உதவுகிறது.

இதில் மார்ஜின் கணக்கிடுவது எப்படி என்றால் நூறு ரூபாய் ஒரு நிறுவனம் வியாபாரம் செய்தால் அதில் எவ்வளவு லாபம் கிடைத்து இருக்கிறது என்று கணக்கிட வேண்டும்.

சரி உதாரணம் ஒன்றை பார்ப்போம்.

செபி விதிப்படி ஒவ்வொரு காலாண்டும் ஒவ்வொரு நிறுவனமும் நிதி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்பதை அனைவரும் அறிந்து இருப்போம். அதே போல் ஆண்டு நிதி அறிக்கையும் மார்ச் மாதத்தில் தரப்படும்.

நாம் எளிதான கணக்கிற்காக ஆண்டு நிதி அறிக்கையை எடுத்துக் கொள்வோம்.

அதில் Total Revenue என்ற ஒரு பகுதி இருக்கும். இது மொத்த வருமானத்தைக் குறிப்பிடுகிறது.

கடந்த 2017ம் ஆண்டில் TCS நிறுவனத்தின் இந்த மொத்த வருமானம் 1,03,159 கோடியாகும்.

அதன் பிறகு கீழே Total Expenses என்றும் ஒரு பகுதி இருக்கும்.

இது அந்த வருடத்தில் நிறுவனத்தை நடத்துவதற்கு எவ்வளவு செலவழித்து இருக்கிறது என்பதை குறிப்பிடுகிறது.

இது TCS நிறுவனத்திற்கு 71,228 கோடியாகும்.

அடுத்து, கடன் வாங்கியதற்கு வட்டி கட்டியது மற்றும் வரி போன்ற செலவினங்கள் போக நிறுவனம் எவ்வளவு லாபம் சம்பாதித்து இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டு இருப்பார்கள்.

இதனை Profit/Loss For The Period என்ற பகுதியில் பார்க்கலாம்.

TCS நிறுவனம் 25,241 கோடி ரூபாய் கடந்த வருடத்தில் சம்பாதித்து இருக்கிறது.

அதாவது தோராயமாக ஒரு லட்சம் கோடி ரூபாய் வியாபாரம் செய்வதற்கு 75,000 கோடி ரூபாய் செலவு செய்து 25,000 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து இருக்கிறார்கள்.

இதனை நூறு ரூபாய்க்கு என்று விகித முறையில் மாற்றினால்.

PAT Margin = (Net Profit/Total Income) * 100

TCS நிறுவனத்தின்,

PAT Margin = (25,241Cr/1,03,159Cr) * 100 = 24.46%

அதாவது நூறு ரூபாய்க்கு வியாபாரம் செய்தால் கிட்டத்தட்ட 25 ரூபாய் லாபம் கிடைத்து இருக்கிறது.

இதே நேரத்தில் ஐடி துறையில் இருக்கும் விப்ரோ பங்கையும் பார்ப்போம்.

விப்ரோ 37,155 கோடி ரூபாய் வியாபாரம் செய்து 7,722 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து இருக்கிறது.

அப்படி என்றால், 37,155/7,722 * 100 = 18.91% என்பதே.

அதாவது நூறு ரூபாய்க்கு வியாபாரம் செய்தால் கிட்டத்தட்ட 19 ரூபாய் தான் லாபம் கிடைத்து இருக்கிறது.

ஆக, ஆறு சதவீத அளவு வித்தியாசம் உள்ளது.

இந்த காரணத்தினால் தான் விப்ரோ பங்கு TCS அளவிற்கு மேலே செல்லாமல் உள்ளது.

ஒரே துறையில் இருக்கும் வெவ்வேறு நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு இந்த PAT மார்ஜின் விகிதத்தினை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

அப்படி என்றால், வெவ்வேறு துறையில் இருக்கும் இரு பங்குகளை ஒப்பிட பயன்படுத்த முடியுமா? என்றால் இல்லை என்றே சொல்ல முடியும்.

ஏன் என்பதற்கான காரணத்தை அடுத்ததொரு பதிவில் பார்க்கலாம்.

கீழே உள்ள படிவம் மூலம் எமது ஈமெயில் செய்தி மடலில் இணைந்து இருங்கள்! அல்லது muthaleedu@gmail.com முகவரியில் Subscribe என்று அஞ்சல் அனுப்புங்கள்...
தொடர்பான பதிவுகள்:

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக