திங்கள், 13 ஆகஸ்ட், 2018

உச்சக்கட்ட மதிப்பீட்டலில் நிப்டி, நிலைக்குமா?

2018ம் வருடத்தின் ஆகஸ்ட் மாதம் இந்திய பங்குசந்தைக்கு பரவாயில்லை என்று சொல்லுமளவு வரலாற்று உயர்வுகளை தொட்டுள்ளது.


நிப்டி 11500 புள்ளிகளையும், சென்செக்ஸ் 38000 புள்ளிகளையும் தொட்டு சாதனை படைத்துள்ளது.



சந்தையில் ஆருடம் சொல்பவர்கள் காளை சந்தையில் மேலே செல்வதை பற்றி பேசுவதையும், கரடியின் பிடியில் இருக்கும் போது கீழே செல்வதையும் பற்றி அதிகம் பேசுவதைக் காண முடிகிறது.

கடந்த ஆறு மாத சந்தை நிகழ்வுகளே இதற்கு உதாரணம்.

தற்போது சென்செக்ஸ் புள்ளிகளை 44000 வரை இலக்கு வைத்தாகி விட்டார்கள்.

ஆனால் இந்த உயர்வு நீடித்து நிலைக்குமா? என்பதையும் பார்ப்போம்.

தற்போதைய உயர்வு என்பது முதல் காலாண்டில் நிறுவனங்கள் நல்ல நிதி அறிக்கைகள் கொடுப்பதால் வந்துள்ளது.

ஆனால் இன்றைய உயர்வில் நிப்டியின் P/E மதிப்புகளை பார்த்தால் 28க்கு அருகில் வருகிறது.

1999லிருந்து பார்க்கும் போது  இது தான் வரலாற்று உச்சக்கட்ட மதிப்பாக இருக்கிறது. சராசரிக்கும் மிக மிக அதிகமான மதிப்பீடலில் இருக்கிறது.

அந்த அளவிற்கு உச்சக்கட்ட மதிப்பை தாங்கும் அளவிற்கு தற்போது வலு இருக்கிறதா? என்பதையும் பார்க்க வேண்டும்.

நீண்ட கால நோக்கில் அந்த வலு இருக்கிறது. ஆனால் நாம் அடுத்த இரண்டு ஆண்டுகள் என்ற பார்வையில் பார்ப்போம்.

கச்சா எண்ணெய் விலை 80$ என்பதை தொட்டு விட்டால் நமது அரசின் அந்நிய செலாவணி பற்றாகுறை என்பது அதிகரித்து அரசை அதன் பின்பு கஞ்சத்தனமான அரசாக தான் பார்க்க வேண்டி வரும்.

அதே போல் ரூபாய் மதிப்பும் 70க்கு அருகில் வருகிறது. அந்த சூழ்நிலையில்  அரசு முன்பு போல தாரளமாக கட்டுமானத் துறைக்கோ மற்ற திட்டங்களுக்கோ செலவு செய்ய முடியாது.

இதனால் மேற்கொண்டு தனியார் நிறுவனங்கள் தான் வளர்ச்சியை தீர்மானிக்க வேண்டி வரும்.

அதே நேரத்தில் கச்சா எண்ணையின் விலை உயர்வு என்பது பணவீக்கத்தையும் பாதிக்கும் என்பதால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படலாம்.

ஒரு பக்கம் கச்சா என்னையால் மூலப் பொருள் விலை உயர்வால் செலவு அதிகரிக்கிறது.

அதே நேரத்தில் வாங்கிய கடனுக்கு அதிக வட்டி கட்ட வேண்டும் என்பதால் லாபமும் பாதிக்கப்படலாம்.

அந்த நேரத்தில் தனியார் நிறுவனங்களும் கஷ்டப்பட்டு தான் சந்தையை தாங்கி பிடிக்க வேண்டும்.

ஏற்கனவே சிமெண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் இதன் பாதிப்பை பார்க்க முடிகிறது.

சரி..இதெல்லாம் நமது உள்நாட்டு கட்டுப்பாட்டில் இல்லாதது. நமது கையிலும் இல்லை.

உள்நாட்டை பார்த்தால் அடுத்த வருட தேர்தல் என்பது என்ன முடிவுகளை தரும் என்பதே புதிராக உள்ளது.

அதற்கு முன்னோட்டமாக இந்த வருட இறுதியில் நடக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கார் போன்ற மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை பார்க்கலாம்.

இதில் அனைத்துமே பிஜேபி ஆட்சி செய்யும் மாநிலங்கள்.

இங்கு பிஜேபி மீண்டும் ஆட்சியை பிடித்து விட்டால் சந்தை இந்த உயர்வுகளை தாங்கி பிடிப்பதோடு மட்டுமல்லாமல் மேலும் ஐந்து சதவீத உயர்வுகளை கூட பார்க்கலாம்.

அதே நேரத்தில் முன்பை விட இடங்கள் குறைந்தாலோ, தோல்வி ஏற்பட்டாலோ இப்போதில் இருந்து பத்து சதவீதம் விழுந்தாலும் ஆச்சர்யமில்லை.

இதில் தோல்வி என்று வரும் போது,
பிஜேபிக்கு ஆதரவு தரும் கூட்டணி அரசா? கூட்டணிக்கு ஆதரவு தரும் பிஜேபி? அல்லது கூட்டணிக்கு ஆதரவு தரும் காங்கிரஸ்? என்று மூன்று சாத்தியங்கள் இருக்கலாம்.

இதில் கடைசி இரண்டு சாத்தியங்கள் ஏற்பட்டால் அதன் எதிர்மறை தாக்கம் இரண்டு, மூன்று ஆண்டுகள் கூட நீடிக்கலாம்.

மற்ற வாய்ப்புகளில் சந்தை மீண்டு வர வாய்ப்புகள் உள்ளன.

தேர்தல் அரசியலை ஒரு தனி மனிதனாக யாரும் ஆருடம் சரியாக சொல்ல முடியாது.

அதனால் சந்தை உயர்கிறது என்றும் மேலும் உயரும் என்று பேராசை காட்டும் ஆருடர்கள் மத்தியில் நாம் பணத்தை பணமாக வைத்து இருப்பது நல்லது .



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக