செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

CreditAccess Grameen IPOவை வாங்கலாமா?

கடந்த வாரம் நாம் பரிந்துரை செய்த HDFC AMC ஐபிஒ 67% அளவு லாபம் கொடுத்திருக்கிறது.


பலன் பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்!

பார்க்க: HDFC AMC IPOவை வாங்கலாமா?
அடுத்து நாளை ஆகஸ்ட் 8 முதல் CreditAccess Grameen நிறுவனத்தின் ஐபிஒ வெளிவரவிருக்கிறது.

இதனை வாங்கலாமா? வேண்டாமா? என்பதை பற்றி பார்ப்போம்.

எப்பொழுதுமே ஊருக்கு செல்லும் போது கிராம அளவில் அதிக அளவு கந்து வட்டி பிரச்சினை இருப்பதைக் காண்பதுண்டு.


விவசாயிகளுக்கு அறுவடைக்கு முன்பே பணத்தைக் கொடுத்து விட்டு அதன் பிறகு வட்டி கட்டி விட்டு பார்த்தால் அந்த ஆறு மாத உழைப்பிற்கு பலன் எதுவுமே கிடைத்து இருக்காது.

ஆனால் முறையாக திட்டமிடல், கணக்கீடுகளை வைத்து இருக்காததால் அடுத்த பருவத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று மீண்டும் அதே தவறை செய்வார்கள்.

இறுதியில் கடன் நெஞ்சை அடைக்கும் அளவிற்கு சென்று வருகிறது.

இதற்கு வங்கிகள் போதுமான அளவு கிராமப் புறங்களில் இல்லாததும் ஒரு காரணம்.

இதனால் தான் ரிசர்வ் வங்கி மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் அதிக அளவு சிறு, குறு வங்கிகளுக்கு அனுமதி அளித்தது.

ஆனால் அதன் பிறகும் அனுமதி வாங்கிய  Bharat, AU, Ujjivan, Equitas, Bajaj, Shriram, M&M போன்ற நிறுவனங்கள் வங்கிகள் செய்யும் வேலையை வேறு விதமாக தான் செய்து வந்தன.

இவர்களும் பெரும்பாலும் வாகனம்,வீடு போன்றவற்றிற்கு தான் கடன் அளித்து வந்தனர்.

விவசாயிகள், இதர வீட்டு தேவைகள் போன்றவற்றிற்கான கடன்களை கண்டு கொள்வதில்லை. இதில் மிகப்பெரிய சந்தையும் இருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

அதே போல் கார்பரேட் நிறுவனங்கள் மொத்தமாக சுருட்டும் அளவிற்கு NPA நிலை என்பதற்கான வாய்ப்புகளும் குறைவே.

இனி CreditAccess நிறுவனத்திற்கு வருவோம்.

மேற்சொன்ன தேவைகளை நிவர்த்தி செய்யும் ஒரு வங்கி தான் CreditAccess Grameen.

GrameenKoota என்ற பெயரில் இயங்கி வருகிறது.

நமது ஊரில் சுய உதவி குழுக்களுக்கு கடன் கிடைப்பது போன்று தான் இவர்களும் கடன் இருக்கும்.

இவர்களின் பெரும்பாலான கடன்கள் பெண்கள், வீடுகளில் சிறு பணிகள் மேற்கொள்தல், அவசர தேவைகள், விவசாய கடன் போன்றவற்றை தான் அதிக அளவு சார்ந்து இருக்கிறது.

இந்த CreditAccess நிறுவனம் நெதர்லாந்தை தாயமாக கொண்டது. பல நாடுகளிலும் வெற்றி கரமாக கிராம புறங்களில் வெற்றி கரமாக சிறு வங்கி சேவைகளை அளித்து வருகிறார்கள்.

இந்தியாவில் பெங்களுர் தலைமையிடம். ஆனாலும் தெற்கு, மத்திய இந்திய மாநிலங்களில் 112 மாவாட்டங்களில் இவர்களது கிளைகள் உள்ளன.

கடந்த ஐந்து வருடத்தில் வருமானம் ஐந்து மடங்காக கூடி இருக்கிறது. லாபமோ எட்டு மடங்குகள் அதிகரித்து இருக்கிறது. நல்ல வளர்ச்சி..

ஒரு பங்கின் விலை 422 ரூபாய் என்று நிர்ணயித்து உள்ளார்கள். இதன் P/E மதிப்பு 48 என்று வருகிறது. P/B மதிப்பு 3.80 என்பதாகும்.

மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் அதிகமும் இல்லை. குறைவும் இல்லை. இதனால் ஐபிஒ மூலம் அதிக லாபம் பெற வாய்ப்புகள் குறைவே.

ஆனால் வேகமான வளர்ச்சி, மிக குறைவான வாராக் கடன் விகிதம் போன்றவற்றை பார்க்கும் போது நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்ற பங்காக கருதலாம்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக