வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

ஓட முடியாத இடியாப்ப சிக்கலில் ஜெட் ஏர்வேஸ்

தொழில் துறைகளிலே விமான போக்குவரத்து துறை என்பது கடினமான ஒன்று.


ஏர் இந்தியாவை நடத்தி ஒடிந்து போன மத்திய அரசு எப்படியாவது விற்று விடலாம் என்று துடிக்கிறது. ஆனால் வாங்குவதற்கு தான் ஆள் இல்லை.அது போல் விஜய் மல்லையா  லண்டன் போய் ஒளிந்து கொள்ளுமளவிற்கு முக்கிய காரணமும் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் தான்.

நமது ஊரு கலாநிதி மாறன் கூட ஸ்பைஸ் ஜெட்டை தந்தது போதும் என்று ஒரு பங்கினை வெறும் இரண்டு ரூபாய்க்கு விற்று விட்டார்.

அந்த அளவிற்கு பல எதிர்மறை காரணிகளை கடந்து தான் ஒரு விமான நிறுவனத்தை நடத்த வேண்டியுள்ளது.

இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் பட்டியலில் இணைந்துள்ளது.

25 வருட வரலாற்றைக் கொண்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த 2009 பொருளாதார தேக்கத்திற்கு பிறகு மீண்டும் எழவே இல்லை.

ஆரம்பக் கட்ட சரிவுகளுக்கு கச்சா எண்ணெய் விலை 110 டாலரை தொட்டது காரணமாக இருந்தது.

ஆனால் அதன் பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை பாதிக்கும் கீழே வந்த போது அவர்கள் சூழ்நிலையை முழுமையாக பயன்படுத்தவில்லை.

இந்த சூழ்நிலையில் ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ போன்ற நிறுவனங்கள் நன்றாக பயன்படுத்தி தங்களது பண இருப்பை நல்ல நிலைப்படுத்தி விட்டன.

ஆனால்  ஜெட் ஏர்வேஸ் விரிவாக்ககம் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்து விட்டது.

விமான நிறுவனங்களை பொறுத்தவரை ஒரு விமானத்தை எத்தனை தடங்களில் அதிக அளவு பயன்படுத்துகிறோம் என்பது முக்கியமானது.

இல்லாவிட்டால், வருமானமே இல்லாமல் ஏர்போர்ட்டிற்கு மிக அதிக அளவு பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் ஆகாயத்தில் பறந்தால் வருமானமும் இருக்கும். பார்க்கிங் கட்டணத்தையும் செலுத்த வேண்டாம்.

உதாரனத்திற்கு பெங்களூரில் இருந்து சென்னை வரும் விமானம் மதுரைக்கு பறந்து மீண்டும் சென்னைக்கு வந்து, அதன் பிறகு பெங்களூருக்கு வந்தால்  வருமானம் பல மடங்குகளில் கூடி இருக்கும்.

இதனை  ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ அழகாக பயன்படுத்திக் கொண்டன.

அதிலும் ஸ்பைஸ் ஜெட் பிஸியாக இல்லாத விமான நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் என்பது மிகக் குறைவு. அங்கு கொண்டு போய் நிறுத்தி விடுவார்கள்.

25 ஆண்டு ஜெட் ஏர்வேஸ் வரலாறு கொண்டதால் என்னவோ, அவரகளது விமானங்களும் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றப்படவில்லை. இதனால் அதிக எரிபொருள் செலவும் கூடி விட்டது.

இது போக, ஜெட் ஏர்வேஸ் ஊழியர் செலவு வருடத்திற்கு 15% கூடினால், வருமானமோ 4% கூடி வந்துள்ளது.

20,000 ஊழியர்களை கொண்ட இண்டிகோவை விட ஜெட் ஏர்வேஸ் தனது 18,000 ஊழியர்களுக்கு அதிக செலவு செய்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

இது போக கச்சா எண்ணெய்  விலையும்  ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

இப்படி பல எதிர்மறை காரணங்களால் ஜெட் ஏர்வேஸ் ஒரு கிலோ மீட்டருக்கு 4.5 ரூபாய் செலவழிக்கிறது என்றால் மற்ற நிறுவனங்கள் 3 ரூபாய் தான் செலவழிக்கின்றன.

இதனால் இந்த காலாண்டில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் அளவு நஷ்டத்தை காண்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த சூழ்நிலையில் நிறுவனத்தின் மதிப்பு எதிர்மறையில் செல்லும். இதனால் அடுத்த 60 நாட்களுக்கு பிறகு தங்களால் விமானங்களை பறக்க வைக்க முடியாத நிலை வரலாம் என்று கணித்துள்ளார்கள்.

அதனால், செலவுகளை குறைக்கும் விதமாக முதல் கட்டத்தில் தங்களது பணியாளர்கள் 15% முதல் 25% வரை தங்களது சம்பளத்தை இரண்டு வருடங்களுக்கு குறைக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள்.

ஆனால் அவர்களது பணியாளர் சங்கமோ அவர்களது தவறுகளுக்கு எங்கள் மீது ஏன் கை வைக்கிறார்கள்? முடியாது என்று சொல்கிறது.

வெளி விமான சந்தையில் பைலட்களுக்கு அதிக தேவை இருக்கும் சூழ்நிலையில் ஜெட் ஏர்வேஸ் தங்களது சீனியர் பணியாளர்களை இழக்கும் நிலை கூட வரலாம்.

தற்போதைக்கு பங்கும் வீழ்ந்து வருகிறது. ஆனால் ஸ்பைஸ் ஜெட்டை அஜய் சிங் மீட்டது போல் அனுபவம் வாய்ந்த நிறுவனர் கோயலும் மீட்பார் என்பது முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு.

ஆனால் கடுமையான போட்டி நிலவும் காலக்கட்டத்தில் ஏதாவது மேஜிக் நடக்குமா? என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும். தற்போதைக்கு அதிக ரிஸ்க்கான பங்கு. தவிர்க்கலாம்!


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக