சனி, 25 ஆகஸ்ட், 2018

கச்சா எண்ணெய் விலை எங்கு போய் நிற்கும்?

மோடி அரசின் ஐந்தாவது வருடம் முந்தைய நான்கு வருடங்களை போல் எளிதாக அமையவில்லை என்றே சொல்லலாம்.


பேரல் நாற்பது டாலரில் இருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது 75 டாலருக்கு மிகவும் குறுகிய காலக் கட்டத்தில் வந்துள்ளது.



அதனை சமாளிப்பது என்பது தேர்தல் வருடத்தில் கஷ்டமான காரியம் தான்.

அந்த வகையில் என்ன தான் விமரசனங்கள் இருந்தாலும் 120 டாலரில் அரசை நடத்திய மன்மோகன் சிங்கும் பாராட்டுதலுக்கு உரியவரே.

சரி..அவ்வளவு குறுகிய காலத்தில் இரண்டு மடங்காக உயருமளவு தேவைக்கு ஏற்ப ஏதாவது பெரிதான வளர்ச்சி நடந்து விட்டது என்றால் இல்லை என்றே சொல்ல முடியும்.

ஆனாலும் உயர்கிறது என்றால் ஒரு செயற்கை தனம் உள்ளது என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

கடந்த வருடம் OPEC என்ற எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தங்களது உற்பத்தியை குறைத்து விலையை கூட்ட முடிவு செய்தன.

அதன் பலன் தான் தற்போது கச்சா எண்ணெய் 75 டாலர் வரை உயர்ந்து வந்துள்ளது.

இது போக, அமெரிக்காவும் சில அரசியல் நரி வேலைகளை காட்டி சிரியா, வெனிசூலா போன்ற நாடுகளில் இருந்து வரும் எண்ணெய் அளவை குறைத்து விட்டது.

இதுவும் இந்த விலை உயர்விற்கு காரணமாகி உள்ளது.

ஆக, எண்ணெய் வளம் எங்கு இருந்தாலும் அவர்களை நிம்மதியாக வாழ அமெரிக்கா விடாது. இராக், சிரியா, வெனிசூலா என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அடுத்து இரான்..

எண்ணெய் விலை உயர்ந்தால் அது அமெரிக்காவிற்கும் பலன் தான்.

ஒன்று அவர்கள் டாலர் விலை உயருகிறது. இரண்டாவது பாறை இடுக்குகளில் இருந்து அமெரிக்காவில் எடுக்கப்படும் Shale Oil தேவையும் கூடும்.

அதனால் தான் இவ்வளவு விளையாடுகிறார்கள்.

இனியும் இந்த விலை எங்கு போய் முடியும் என்று பார்த்தால் அதுவும் அடுத்து வரும் அரசியல் விளையாட்டுகளிலே இருக்கிறது.

இரான் அணு ஆயுத உற்பத்தி செய்கிறது என்று ட்ரம்ப் நவம்பர் முதல் முழு பொருளாதார தடை போட்டு உள்ளார்.

இந்த தடையின் படி, இரானிடம் எந்த நாடுகளும் கச்சா எண்ணெய் வாங்க கூடாது.

இரானிடம் அதிகமாக வாங்கும் நாடுகள் என்று பார்த்தால் இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தான்.

இதில் இந்தியா என்ன செய்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஐரோப்பிய நாடுகள் செய்வதை பார்த்து தாங்கள் ஒரு முடிவை எடுக்கலாம் என்று இருக்கிறார்கள்.

ஆனால் ட்ரம்ப் சொல்வதை சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கேட்குமா? என்று தான் தெரியவில்லை.

ட்ரம்ப் ஏற்கனவே சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் பொருட்களில் அதிக வரி போட்டு வர்த்தக போரை ஆரம்பித்து உள்ளார்.

அதில் சீனாவுடன் கடுமையாக மோதுவதால் இரானிடம் ஏற்கனவே வாங்கியதை குறைக்க மாட்டோம். ஆனால் புதிதாக எதுவும் வாங்க மாட்டோம் என்று சொல்லி உள்ளார்கள்.

அதே நேரத்தில் ஐரோப்பிய நாடுகள் நட்போடு இருந்து மோதும் அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்பதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள்.

மொத்த எண்ணெய் சந்தையில் 10 முதல் 15 சதவீத அளவு எண்ணெய் இரானிடம் இருந்து வருவதால் முழுமையாக இந்த இந்த தடை அமல்படுத்தும் சூழ்நிலையில் எண்ணெய் விலை இன்னும் கூட வாய்ப்பு இருக்கிறது.

அதே நேரத்தில் சீனா அமெரிக்காவுடன் ட்ரம்ப்பை விட அதிக வேகத்தில் மல்லு கட்டி வருகிறது.

நேற்று முன்தினம் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய பொருட்களுக்கு 25% அளவு இறக்குமதி வரி விதித்துள்ளது.

இது அமெரிக்காவே எதிர்பார்க்காதே ஒன்று.

தற்போது இரு நாடுகளும் வர்த்தக போரை முடிவு கொண்டு வருவதற்காக பேச்சு வார்த்தையில் அமர்ந்து உள்ளன.

அது வெற்றி பெற்று இரான் தடையும் முழு அளவில் இருந்தால் கச்சா எண்ணெய் விலை 90 முதல் 100 டாலர் வரை செல்லலாம்.

அதே நேரத்தில்  பேச்சு வார்த்தை தோல்வி அடைந்து இரானில் தடையும் பொய்த்து விட்டால் எண்ணெய் விலை மீண்டும் 60 முதல் 65 டாலர் வரையும் குறைய வாய்ப்புள்ளது.

அடுத்து வரும் பங்குச்சந்தை நகர்வுகளுக்கு இந்த அரசியல் நகர்வுகள் முக்கிய தேவை. கவனித்து வருக! நாமும் எழுதுகிறோம்...

தொடர்பான கட்டுரைகள்:
அமெரிக்க டாலர் எப்படி உலக பொது நாணயமானது?


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக