திங்கள், 20 ஆகஸ்ட், 2018

L&T Buyback முறையை எவ்வாறு அணுகுவது?

கடந்த சனியன்று L&T நிறுவனம் Buyback முறையில் பங்குகளை வாங்குவதாக அறிவித்தது.


கட்டுமானத் துறையில் இருக்கும் இந்த நிறுவனம் நல்ல நிதி அறிக்கையை கொடுத்து வந்தாலும் அதன் பங்கின் மதிப்பு மட்டும் உயரவில்லை.



இதற்கு ஆப்ரேடர்களும் ஒரு முக்கிய காரணம்.

இதே போன்று நல்ல நிதி அறிக்கை கொடுத்த பங்குகள் மேலும் கூடும் என்று முதலீடு செய்பவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது தான் இவர்கள் வேலை.

ட்ரெண்டை மாற்றுவதன் மூலம் மிக அதிக அளவில் சம்பாதித்து விடுவார்கள்.

தற்போது இருக்கும் நம்பிக்கையற்ற ஒரு சூழ்நிலையில் ஆப்ரேடர்கள் பங்கு என்பது மிக அதிகமாக இருக்கும்.


அதற்கு நல்ல முதலீட்டாளர்கள் ஒதுங்கி விடுவதும் ஒரு காரணம்.

இந்த சமயத்தில் தங்கள் நிறுவன பங்குகள் மிகவும் குறைவான மதிப்பில் இருக்கிறது என்று கருதும் நிறுவனங்கள் தங்களிடம் இருக்கும் அதிக பட்ச தொகையை கொடுத்து பங்குகளை வெளிச்சந்தையில் வாங்குவார்கள்.

இதனைத் தான் Buyback என்றும் அழைக்கிறோம்.

சரி..ஏதாவது லாபம் இல்லாவிட்டால் வாங்குவார்களா? என்ற கேள்வியும் வரலாம்.

தனது நிறுவனம் நல்ல லாபம் ஈட்டும் என்று நம்பிக்கையுள்ள நிறுவனங்கள் இப்படி செய்வார்கள்.

எமக்கு தெரிந்து அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் L&T நிறுவனத்தின் வியாபாரம் மற்றும் லாபம் இன்னொரு மடங்கு வரை கூட வாய்ப்பு இருக்கிறது.

அந்த அளவிற்கு அவர்கள் ஆர்டர் புக் வேகமாக நிரம்பி வழிகிறது.

மேலும் ஆர்டர் புக்கின் தரமும் உயர்ந்து வருகிறது. அதாவது லாப விகிதம் முன்பை விட நன்றாக தரும் ஆர்டர்களை மட்டும் தான் எடுத்து வருகிறார்கள்.

இது போக  L&Tயின் துணை நிறுவனங்களான L&T Finance Holdings, L&T Infotech போன்றவரையும் நல்ல நிலைக்கு திரும்பியுள்ளன.

அதனால் தான்  L&T நிறுவனமும் பங்குகளை வாங்குகிறோம் என்று சொல்லியுள்ளது.

கடந்த வெள்ளியன்று 1240 ரூபாய்க்கு வர்த்தகமாகி கொண்டிருந்த இந்த பங்கு இன்று மட்டும் 6% உயர்ந்து விட்டு 1325 ரூபாய்க்கு வந்து விட்டது.

48000 கோடி ரூபாய் கையிருப்பு பணத்தைக் கொண்டுள்ள L&T செபி விதிமுறைப்படி அதிகபட்சம் 12000 கோடி ரூபாய் அளவு மதிப்புள்ள பங்குகளை திரும்பி பெறலாம்.

அதில் முதலீட்டாளர்கள் குறைந்தது 1500 ரூபாய்க்கு அருகிலாவது ஒரு பங்கு விலையை L&T நிறுவனம் நிர்ணயம் செய்யும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

வரும் ஆகஸ்ட் 24 அன்று தான் என்ன விலை என்று தெரியும்.

அப்படி அதே விலையை அவர்கள் சொல்லிவிட்டால் பங்கு இன்னும் 5% அளவு கூட உயரலாம்.

ஆனால் குறைத்து சொன்னால் மீண்டும் 1300 ரூபாய்க்கே வரலாம்.

அதே நேரத்தில் இரண்டு, மூன்று வருட முதலீட்டில் நம்பிக்கை இருந்தால் பங்கினை வாங்கி போடலாம். 2000 என்பது ஒரு சாத்தியமான இலக்கு.

ஏற்கனவே L&T பங்குகளை வைத்து இருப்பவர்கள் தொடர்ந்து வைத்து இருப்பதும் நல்லது!

தொடர்பான பதிவு:
நிறுவனங்கள் BuyBack முறையில் ஏன் பங்குகளை திரும்பி வாங்குகின்றன?  

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: