வியாழன், 2 ஆகஸ்ட், 2018

ஐந்தாவது வருட முடிவில் REVMUTHAL.COM

நண்பர்களுக்கு,

வணக்கம்!

எமது தளம் ஜூலை,2013 மாதத்தில் ஒரு பிளாக்கர் தளமாக muthaleedu.blogspot.com என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.



அதன் பிறகு Revmuthal.com என்ற சொந்த தள பெயரில் மாற்றப்பட்டு இந்த வாரத்தில் ஐந்து வருடங்களை நிறைவு செய்கிறது என்பதை மகிழ்வுடன் பகிர்கிறோம்.

இந்த தளத்தை ஆரம்பித்த நோக்கம் வேறு. எமக்கு தெரிந்த பொருளாதார விடயங்களை தொகுத்து வைக்கும் ஒரு டைரியாக வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் தான் ஆரம்பித்தோம்.

அதன் பிறகு வெளியிலும் தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்ற எண்ணத்துடன் பொது வெளியிலும் வைத்தோம்.

அதற்கு கிடைத்த ஆதரவு என்பது மிக அதிகம்.

அந்த ஆதரவில் எமக்கு கிடைத்த நட்பு நெட்வொர்க் என்பது அதனை விட பலமானது.

தற்போது  Revmuthal.com என்ற இந்த தளத்தை 22,000 நண்பர்கள் தொடர்கின்றார்கள் என்பது அதற்கு சாட்சி...

இது வரை 957 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. அந்த கட்டுரைகள் 15 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.

தமிழில் திரைத்துறை கட்டுரைகளுக்கு கிடைக்கப்பட்ட அளவு ஆதரவானது இந்த பொருளாதார தளத்திற்கும் கிடைத்துள்ளது என்பது ஆச்சர்யமான ஒன்று.

பொருளாதாரம், சட்டம் போன்ற துறைகளில் தாய் மொழியில் வாசிக்கும் அளவிற்கு மற்ற மொழிகளில் நமக்கு எளிதில் புரிவதில்லை.

அந்த இடைவெளியை நீக்குவது தான் எமது தளத்தின் முக்கிய நோக்கமாகவும் இருக்கும்.

முன்பு பல முறை சொன்னதை போல, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது தான் எமது வேலை. மீன்களை பிடித்துக் கொடுப்பதல்ல.

அதனால் பங்குச்சந்தை போன்றவற்றை பயிற்றுவிக்கும் தளமாக மாற்றுவதில் அதிக முனைப்பு காட்ட முயலுகிறோம்.

இனி வரும் காலங்களில் இடைவெளி அதிகம் இல்லாது அதிக தரத்துடன் கட்டுரைகளை எழுதுவோம்.

எமது முதல் இரண்டு வருடங்களில் பங்குச்சந்தை சூத்திரங்கள் பற்றிய கட்டுரைகள் அதிக பிரபலம் அடைந்தன. அதே மாதிரியான கட்டுரைகள் அதிகம் வருமாறு இந்த வருடத்தில் பார்த்துக் கொள்கிறோம்.

அதே போல், Youtube, Android App, Ebooks என்று எமது வெளியை விரிவாக்கவும் விரும்புகிறோம். இந்த வருடத்தில் அதனையும் முடிக்க வேண்டும் என்பதும் கொடுக்கப்பட்ட ஒரு வேலை.

தற்போது Adsense போன்றவை தமிழுக்கும் வந்து விட்டதால் எந்த துறையில் நிபுணத்துவம் இருந்தாலும் தமிழில் எழுதுங்கள்!

அதிக அளவில் நண்பர்கள் பலன் பெறுவதோடு எழுதுபவர்களுக்கும் ஒரு மிகப்பெரிய நெட்வொர்க் கிடைக்கும்.

அடுத்து வருடாந்திர நோக்கில் பங்குசந்தையை பார்த்தோமென்றால்,

2019 தேர்தல் முடியும் வரை இழுபறியில் இருக்கும் சந்தையில் ஒன்றும் சொல்லுவதற்கில்லை.

ஆட்சி அதிகாரத்தில் எதுவும் நடக்கலாம் என்பதால் அதிக அளவு பணத்தை கையில் வைத்து கொண்டு காத்திருப்பது நல்லது.

ஓரளவு பாதுகாப்பான பங்குகள் வேண்டும் என்றால் L&T, HUL, Indian Hotels, Mahindra & Mahindra, HDFC Bank போன்ற பங்குகளை கவனித்து வாருங்கள்!

இறுதியாக ஒரு வேண்டுகோள்.

எமது தளத்தை தொடர்பவர்களில் பெரும்பான்மை பகுதி Facebook வழியாகத் தான் தொடர்கிறார்கள். தமிழ் சமூகம் அதிகம் உபயோகிக்கும் சமூக வலைத்தளம் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் Facebook தொடர்பாக வரும் எதிர்மறை செய்திகள் இந்த தொடருதலையும் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

அதனால் இமெயில் வழியாக தொடருமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

ஏற்கனவே 1400 நண்பர்கள் இவ்வாறு தொடர்கிறார்கள். அவர்களுக்கு Spam எதுவும்அனுப்பவதில்லை. தேவை இல்லை என்றால் அந்த மெயில் வழியாகவும் நீங்கள் Unsubscribe செய்து கொள்ளலாம்.

வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே எமது கட்டுரைகளின் சுருக்கத்தை அனுப்புவோம். அதில் சில முக்கிய குறிப்புகள், பொருளாதார புத்தகங்கள், சில பங்கு பரிந்துரைகள் போன்றவற்றையும் கூடுதலாக அனுப்புவோம்.

உதாரணத்திற்கு எமது கடந்த வார செய்தி மடலை இங்கு பார்க்கலாம்.
https://mailchi.mp/f8fa969519a9/revmuthal

அதற்கு கீழே உள்ள படிவத்தை நிரப்புங்கள். அல்லது muthaleedu@gmail.com என்ற முகவரிக்கு Subscribe என்று அஞ்சல் அனுப்புங்கள்..தங்கள் ஆதரவுக்கு நன்றி!




« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்: