ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

பங்குகளில் ROEயை எவ்வாறு கணக்கிடுவது?

இன்று பங்குகளை மதிப்பிடுவதற்கான இன்னொரு முறையை பற்றி பார்ப்போம்.


கடந்த வார கட்டுரையில் L&T Buyback முறையை எவ்வாறு அணுகுவது? என்று எழுதி இருந்தோம்.



நாம் எதிர்பார்த்தது போலவே L&T நிறுவனமும் 1500 ரூபாயில் பங்குகளை வாங்குவதாக அறிவித்து விட்டது. வாழ்த்துக்கள்!

அதே நேரத்தில் இன்னும் நிதி நிறுவனங்கள் L&T நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு பரிந்துரை செய்துள்ளன.

ஏன் என்று பார்த்தால் ஒரு முக்கிய காரணம் Return on Equity (ROE) என்பதாகும்.

அதனை பற்றி கொஞ்சம் விவரமாகவே பார்ப்போம்.


Return on Equity என்பதை புரியும்படியான விளக்கத்தில் பார்த்தால், பங்குதாரர்களின் பணத்தை வைத்து நிறுவனம் எவ்வளவு லாபத்தை ஈட்டுகிறது என்பதாகும்.

உதாரணத்திற்கு L&T நிறுவனத்திடம் 48,000 கோடி ரூபாய் பணம் கையிருப்பில் இருந்தது.

இது எப்படி வந்தது என்றால், ஒவ்வொரு நிதி ஆண்டிலும் கிடைத்த லாபத்தில் டிவிடென்ட் கொடுத்தது போக, மீதியுள்ள தொகையை சேர்த்து சேர்த்து வந்த பணமாகும்.

அதனால் முழுக்க பங்குதாரர்களுக்கு தான் சொந்தமானது.

இந்த பணமானது நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி அல்லது விரிவாக்கத்திற்கு பயன்படுத்தப்படும்.

ஆனால்  L&T நிறுவனத்தை பொறுத்தவரை அண்மை காலத்தில் அதன் துணை நிறுவனங்களான L&T infotech, L&T Finance பல நிறுவனங்களை பங்குசந்தையில் பட்டியலிட்டுள்ளது. அதில் கிடைத்த தொகையும் இந்த கையிருப்பில் தான் அடங்கும்.

இது போக, புதிய ஆர்டர்களை எடுப்பதிலும் அதிக பண முதலீடு தேவையில்லாத EPC (Engineering Procurement Construction) முறை ப்ரோஜெக்ட்களையே அதிகம் எடுத்துள்ளது.

உதாரணத்திற்கு முன்பு சாலை போட்டால் அதற்கு சுங்க வரி வசூலிப்பது வரை L&T நிறுவனம் பார்த்து வந்தது.

தற்போது சாலையை மட்டும் போட்டு விட்டு சுங்க வரி வசூலிப்பதை இன்னொரு நிறுவனத்திடம் மொத்தமாக விற்று விடும்.

இதில் கையில் இருந்து போடுமளவு அதிக அளவு பணம் தேவையில்லை.

இதனால் இந்த 48,000 கோடி ரூபாயை தேவையில்லாமல் அவர்கள் கையில் வைத்து இருந்து என்ன பலன்?

அதனை L&T வங்கி டெபாசிட்டில் வைத்து வட்டியை பிரித்துக் கொடுக்குமானால், அதனை முதலீட்டாளர்களே செய்து கொள்வார்கள், அல்லவா?

அதனால் தான் L&T தங்களிடம் அதிகமாக இருக்கும் 9000 கோடி ரூபாய் பணத்தை Buyback முறையில் திருப்பிக் கொடுத்து விட்டது.

இப்பொழுது Return on Equity எப்படி மாறுகிறது என்றும் பார்ப்போம்.

Return on Equity(ROE) = Net Income (PAT) / ShareHolders Equity

குறிப்பு:
1. PAT கணக்கிடுவதற்கு எமது முந்தைய கட்டுரையை பார்க்க..
௨. ShareHolders Equity என்பதை L&T நிறுவனத்தின் Balance Sheetல் பார்க்கலாம்.

L&T நிறுவனத்தின் ROE,

Buyback அறிவிப்பிற்கு முன்,
ROE = 7,369Cr / 49,017 Cr = 15%

அதாவது 100 ரூபாயை வைத்துக் கொண்டு 15 ரூபாய் லாபம் ஈட்டி உள்ளது.

அதே நேரத்தில்,

Buyback அறிவிப்பிற்கு பின்,
ROE = 7,369Cr / 40,017 Cr = 18.4%
அதாவது 100 ரூபாயை வைத்துக் கொண்டு 18 ரூபாய் லாபமாக மாறி உள்ளது.

அடுத்த வருடத்தில் லாபம் 9000 கோடி ரூபாய் உயருமானால்,
ROE = 9,000Cr / 40,017 Cr = 22%

இது தான் L&T நிறுவனத்தின் 2021ம் ஆண்டிற்குள் அடையும் இலக்கு கூட..

Buyback முறைக்கு பின்னால் இவ்வளவு ROE ரகசியங்களும் ஒளிந்து இருக்கிறது. அதனால் தான் L&T இன்னும் எதிர்காலத்திற்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

கடந்த கட்டுரையில் PAT லாப மார்ஜினை எப்படி பயன்படுத்துவது? என்பதில் ஒரே துறையில் இருக்கும் பங்குகளை ஒப்பிடுவதற்கு PATயை பயன்படுத்தலாம் என்று கூறி இருந்தோம்.

அதே நேரத்தில் வெவ்வேறு துறையில் இருக்கும் நிறுவனங்களை ஒப்பிடுவதற்கு ROE முறையினை பயன்படுத்தலாம். எப்படி என்று இன்னொரு கட்டுரையில் எழுதுகிறோம்...

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக