வியாழன், 16 ஆகஸ்ட், 2018

துருக்கியில் பொருளாதார பதற்றம், ஏன்?

தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70க்கு அருகில் சென்று வீழ்ச்சியில் உள்ளது.


இதற்கு துருக்கியில் ஏற்பட்டுள்ள பொருளாதார பதற்றமும் ஒரு முக்கிய காரணம்.



அதனைப் பற்றி இந்த பதிவில் விரிவாகவே காண்போம்.

நாடுகளின் பொருளாதர வீழ்ச்சி என்பது தற்போதைக்கு புதிதல்ல. அண்மைய காலக்க்கட்டங்களில் அடிப்படை வலு இல்லாத பொருளாதாரங்கள் அதிகமாகவே வீழ்ந்து இருக்கின்றன.

அப்படியான ஒவ்வொரு வீழ்ச்சியும் நமக்கு படிப்பினைகளை தருகிறது.

அதனால் எமது முந்தைய கட்டுரைகளான,
போன்றவையும் இந்த வேளையில் பயனுள்ளதாக இருக்கும்.

இனி துருக்கியின் நிலையை அறிவோம்.

2009ம் ஆண்டுகளில் வளர்ந்த மேலை நாடுகளில் பொருளாதாரம் Recession என்ற பெயரில் வீழ்ந்து கிடந்தது.

அது மீள்வதற்கு பல ஆண்டுகள் ஆனது. இன்னும் முழுமையாக மீளவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இதனால் அந்த நாடுகள் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு தங்களது வட்டி விகிதங்களை கணிசமாக குறைத்து இருந்தன.

உதாரணத்திற்கு அமெரிக்காவின் வட்டி விகிதங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் பூஜ்யத்திற்கு அருகிலே இருந்தது. வருடந்திற்கு வெறும் அரை சதவீத வட்டி தான்.

இந்த வாய்ப்பினை வளர்ந்து வரும் நாடுகள் நன்கு பயன்படுத்த முனைந்தன.

உதாரணத்திற்கு அப்பொழுது இந்தியாவில் கடன் வாங்கினால் ஒன்பது சதவீத வட்டி என்று இருந்தது. அதே நிலையில் அமெரிக்க டாலரில் வங்கிகள் அல்லது பத்திரங்கள் மூலம் கடன் வாங்கினால் அரை சதவீத வட்டி கட்டினால் போதும்.

இன்னமும் டாடா ஸ்டீல் போன்ற உலக அளவில் சந்தையை கொண்டுள்ள நிறுவனங்கள் கடன்களை டாலர் பத்திரங்களில் அதிகம் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

இதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சு.

அந்த தவறைத் தான் துருக்கி செய்தது.

தமது மொத்தக் கடனில் 70% அளவை துருக்கி அரசும், நிறுவனங்களும் டாலர் கடன் பத்திரங்களிலே வாங்கி குவித்தன.

இந்த நிலையில் கடந்த ஓரிரு வருடங்களில் அமெரிக்க பொருளாதரத்தில் நல்ல வளர்ச்சி மாற்றத்தைக் கண்ட பெடரல் வங்கி வட்டி விகிதங்களை கூட்டி விட்டது.

மிகக் குறைவான வட்டியைக் கட்டி வந்த துருக்கி நிறுவனங்களுக்கு இது பெரும் சுமையானது.

இது போக, டாலர் மதிப்பு வலுவாகி சென்றது. இதனால் துருக்கி நாட்டின் நாணயமான லிராவின் மதிப்பு குறைந்து சென்றது.

இதனால் வட்டி ஒரு பக்கம் அதிகம் கட்ட, மற்றொரு பக்கம் டாலருக்கு இணையான லிராவும் அதிகமாக கொடுக்க வேண்டி இருந்தது.

இது நிறுவனங்களின் லாபத்தை பதம் பார்க்க, அங்கிருந்த அந்நிய முதலீடுகளும் வெளியே சென்றது.

இது சொந்த நாணயமான லிராவின் தேவையை மிகவும் குறைத்து மதிப்பினை பாதிக்கும் கீழ் வீழ்த்தியுள்ளது.

இப்படி நாணயம் வீழும் போது மக்கள் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக விலை கொடுக்கம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இது விலைவாசியையும் கூட்டி விட்டது.

தற்போதைக்கு துருக்கியின் பணவீக்கம் 25% என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

இது போன்ற பணவீக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கு தான் நமது ரிசர்வ் வங்கி வட்டி விகிந்தங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கும். ஒரு வித பொருளாதார சமநிலையை தோற்றுவிக்க பயன்படும்.

அதனால் தான் எப்பொழுதுமே நமது அடிப்படை வட்டி விகிதங்கள் பணவீக்கத்தினை விட ஒன்று அல்லது இரண்டு சதவீதம் அதிகமாக இருப்பதை கவனித்து இருக்கலாம்.

அதன் படி, தற்போது துருக்கியின் வட்டி விகிதம் குறைந்தது 25%க்கு மேல் இருத்தல் வேண்டும்.  ஆனால் 17.5% என்ற அளவிலே இருக்கிறது.

அந்த நாட்டில் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் எர்டோகன் தான் ஆட்சிக்கு வந்தால் வட்டி விகிதங்களை கூட்ட மாட்டேன் என்று தேர்தலில் கூறி வந்துள்ளார்.

அதனால் தற்போதைக்கு வட்டி விகிதங்களை கூட்ட மாட்டேன் என்று அடம் பிடிக்க லிராவின் மதிப்பு இன்னும் வேகமாக சரிகிறது.

இஸ்லாமிய வங்கி கொள்கையில் பிடிப்பில் இருப்பதால் அவர் இவ்வாறு வட்டி விகிதங்களை கூட்ட மாட்டேன் என்று சொல்வதாக தெரிகிறது.

ஆனால் அவர் துருக்கி வெளிநாட்டில் வாங்கிய கடன்களுக்கு வட்டி கட்டித் தானே தீர வேண்டும்.

இந்த முரண்பாடு தான் அந்த நாட்டில் அதிக பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.

இந்த முரண்பாடு தொடருமானால் இன்னும் கொஞ்ச நாளில் துருக்கி நாணயம் ஜிம்பாப்வே போன்று தனது மதிப்பை முற்றிலுமாக இழந்தாலும் ஆச்சர்யமில்லை.

இந்தியாவை பொறுத்தவரை துருக்கியுடன் உள்ள வர்த்தக உறவுகள் என்பது குறைவு தான். அதனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று சொல்லலாம்.

நமது அந்நிய கையிருப்பு இன்னும் 400 பில்லியன் டாலர்கள் உள்ளது. அதனால் ரூபாய் மதிப்பு 75க்கு செல்லும் வரை ரிசர்வ் வங்கியால் தாங்கி பிடிக்க முடியும்.

அதற்கும் கீழ் சென்றால் அடுத்த வருட தேர்தலை சந்திக்கும் மோடிக்கு ஒரு பெரிய தலைவலியாக இருக்கும்!

தொடர்பான கட்டுரைகள்:



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக