சனி, 11 ஆகஸ்ட், 2018

வேகத்தடையால் கனவாகும் பதாஞ்சலி இலக்கு

கடந்த ஐந்து வருடங்களில் பதாஞ்சலி நிறுவனம் அடைந்த வளர்ச்சி என்பது அசுரத்தனமானது.


ஐந்தே வருடங்களில் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பதாஞ்சலி தயாரிப்புகள் விற்பனையானது என்றால் பார்த்துக் கொள்ளவும்.2020ல் ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற அளவிற்கும் இலக்கு வைத்து இருந்தார்கள்.

அந்த நிலை வந்தால் இந்தியாவின் மிகப்பெரிய நிகர்வோர் நிறுவனமான Hindustan Unilever நிறுவனத்தை முந்துவார்கள்.

ஆனால் அந்த கனவு நிறைவேறுமா? என்பதில் இந்த வருட அவர்களது வளர்ச்சி நிலை சந்தேகத்தைக் கொடுத்தது.

கொஞ்சம் விவரமாகவே பார்ப்போம்.

பதாஞ்சலி நிறுவனத்தின் வளர்ச்சி என்பதை பார்த்தால் ஒவ்வொரு வருடமும் நூறு சதவீதம் என்ற அளவிற்கு சென்று இருந்தது.

அதாவது ஒவ்வொரு வருடமும் வியாபம் இரட்டிப்பாகி கொண்டிருந்தது.

உண்மையில் வேறு எந்த நிறுவனமும் இந்த அளவிற்கு வளர்ச்சி கொடுத்து இருக்குமா? என்பது சந்தேகமே.

கடந்த ஐந்து ஆண்டுகளில் வேதி பொருட்கள் கலந்த உணவு மற்றும் நுகவோர் பொருட்களில் மக்களுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் பதாஞ்சலிக்கு சாதகமாக இருந்தது.

இது போக, வட இந்தியாவில் ராம் தேவிற்கு இருந்த ஆன்மீக செல்வாக்கும், அரசு மூலம் கிடைத்து வந்த ஆதரவும் அடுத்த மிக முக்கிய பின்புலம்.

அதனால் வளர்ச்சி என்பதும் அசுர வேகத்தில் இருந்தது.

இதில் பற்பசை, நெய், தேன் போன்ற முக்கிய பொருட்கள் தான் பதாஞ்சலியின் முக்கிய வியாபர சந்தையைக் கொடுத்து வந்தன.

மக்களின் மேற்சொன்ன ஆயுர்வேத மாற்றங்களை உணர்ந்த Colgate, Dabur, HUL போன்றவையும் ஆயுர்வேதம் சார்ந்த பொருட்களை அதிக அளவில் சந்தையில் பிரபலப்படுத்த முனைந்தன.

இந்த கடும் போட்டியில் பதாஞ்சலி ஏற்கனவே இருந்த சந்தையைத் தக்க வைத்து கொள்வது என்பதே கடினமாக மாறி உள்ளது.

அதே நேரத்தில் பதாஞ்சலி தமது முக்கிய அடையாளமான ஆயுர்வேதம் என்பதை விட்டு விட்டு நூட்லஸ், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், ஜீன்ஸ் என்று கவனத்தை சிதறடிக்க ஆரம்பித்தது.

இதனால் மக்களுக்கு ஒரு வித அதிருப்தி ஏற்பட்டதும் உண்மையே.

அதே போல், எப்படி இவர்களால் இவ்வளவு பரந்த அளவில் விரிவாக்க முடிகிறது என்பதிலும் சந்தேகம் வந்தது.

பின் புலத்தில் பார்த்தால், பல தயாரிப்புகள் அவுட்சோர்சிங் முறையில் மற்ற துணை நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டு பதாஞ்சலி என்ற பிராண்டோடு வருவதும் தெரிய வருகிறது.

அதனால் உண்மையான ஆயுர்வேதத்திற்கும் பதாஞ்சலி தயாரிப்புகளுக்கும் இடையே உள்ள இடைவெளி என்பதும் அதிகமாக போனது.

இது போக, பதாஞ்சலி தயாரிப்புகள் தொடர்பாக இணையங்களில் வரும் குற்றசாட்டுகளுக்கு போதுமான விளக்கம் இல்லை என்பதும் ஒரு எதிரமறையான காரணி தான்.

இறுதியாக, இன்னும் பதாஞ்சலியின் பொருட்கள் அவகளது ஸ்டோர்களில் மட்டும் கிடைக்கும் சூழ்நிலையில் மற்றவர்கள் பொருட்கள் எங்கும் கிடைக்கின்றன. இதில் பதாஞ்சலி பின்தங்கி விட்டது என்றும் சொல்லலாம்.இப்படி பல எதிர்மறை காரணங்களால் பதாஞ்சலியின் வலுவான சந்தையான பற்பசை, நெய் போன்றவை கூட சந்தையை இழக்க ஆரம்பித்துள்ளன.

இதனால் இந்த வருடத்தில் வளர்ச்சி என்பது அதே பத்தாயிரம் கோடியிலே நிற்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி இலக்கை அடைவது என்பதன் சாத்தியம் மிக அரிதே.

ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் ஆயுர்வேதம், சுதேசி என்பவை நன்றாகவே இருந்து. ஆனால் அதில் தெளிவான கூரிய பாதை இல்லாதது பதாஞ்சலியை முடக்கி உள்ளது.

வளர்ச்சி அடைந்த பிறகு தக்க வைத்து கொள்வதும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் தருணமிது!


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக