வியாழன், 19 செப்டம்பர், 2013

அமெரிக்க டாலர் எப்படி உலக பொது நாணயமானது?

ஓரிரு வாரத்திற்கு முன்னர் நமது பெட்ரோலிய துறை அமைச்சர் மொய்லி அவர்கள் ரூபாய் மதிப்பைக் கூட்டுவதற்கு அவரது துறை சார்பில் இரண்டு ஆலோசனைகளை கொடுத்திருந்தார்.


ஒன்று பெட்ரோல் பங்கை இரவு நேரங்களில் பெட்ரோல் பங்குகளை மூடி வைப்பது. போகாத ஊருக்கு வழிச் சொல்வது போல உள்ள இந்த யோசனை ஆரம்பத்திலே நிராகரிக்கப்பட்டது.

மற்றொன்று ஈரானிலிருந்து பெட்ரொலிய பொருட்களை இறக்குமதி செய்வது. அதற்கான காசை ரூபாயிலே கொடுப்பது என்று உள்ளது. இது உண்மையிலே மிக ஒரு அருமையான யோசனை.

கொஞ்ச நாட்கள் முன்னரே இது நடைமுறையில் வந்திருக்க வேண்டும். வந்திருந்தால் தற்போதைய அந்நிய செலாவணி பிரச்னையை பெருமளவில் தீர்த்து வைக்க இது உதவி இருக்கும்.

இந்த இரண்டாவது யோசனையை பற்றி விரிவாக அலசுவதே இந்த பதிவின் நோக்கம். கொஞ்சம் ஆர்வமானது கூட..இதனை இரண்டு பதிவுகளாக பார்ப்போம். முதல் பதிவில் அமெரிக்கா நாணயம் எப்படி உலக கரன்சியானது என்பது பற்றியும் இரண்டாவதில் ஈரான் எப்படி இந்திய பிரச்சினையை தீர்க்க உதவும் என்பது பற்றியும் பார்க்கலாம். இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பானது.

இது கொஞ்சம் வரலாறுடன் தொடர்பு உடையது. இரண்டாம் உலகப் போரின் முடிவின் போது கச்சா எண்ணெயின் தேவை வேகமாக அதிகரித்து வந்தது. கச்சா எண்ணெய் என்பது அடுத்த ஒரு தங்கம் என்பதை புரிந்து கொண்டது அமெரிக்கா.

அதனால் கச்சா எண்ணெய் அதிகமாக உற்பத்தி செய்யும் சவுதி அரேபியாவுடன் ஒரு புத்திசாலித்தனமான ஒப்பந்தம் செய்து கொண்டது.

இது எந்த வீட்டு நியாயம்?

அதன் படி, எல்லா பெட்ரோலிய வர்த்தகங்களும் டாலரில் நடத்த சவுதி ஒப்புக் கொண்டது. அதற்கு கைமாறாக அமெரிக்கா அந்த நாட்டின் மன்னராட்சியை காப்பாற்றும் மற்றும் பெட்ரோலிய கிணறுகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் என்பது தான் அந்த ஒப்பந்தத்தின் முக்கிய சாராம்சம். இந்த முறை "Petro Dollar System" என்று அழைக்கப்பட்டது.
அதனால் தான் சிரியா, எகிப்து என்று எல்லா நாடுகளிடமும் மக்களாட்சி என்ற பெயரில் மூக்கை நுழைக்கும் அமெரிக்கா சவுதியை காணாமல் விட்டு வருகிறது.

அமெரிக்காவின் வற்புறுத்தல்/அச்சுறுத்தல் காரணமாக மற்ற வளைகுடா நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை ஏற்று கொண்டன. இவ்வாறு செயற்கையாக டாலரின் தேவை அதிகரித்தது. அதனால் டாலரின் மதிப்பும் கணிசமாக உயர்ந்தது. இதனால் அமெரிக்க மக்கள் எல்லா இறக்குமதி பொருட்களையும் குறைந்த விலைக்கு பெற்று பயனடைந்தனர்.

இது படிப்படியாக கச்சா எண்ணெய் மட்டுமின்றி மற்ற பொருட்களுக்கும் விரிவடைந்து பெரும்பான்மையான வணிகம் டாலரிலே நடக்க ஆரம்பித்தது.

என் ரூபாயை எத்தனை தடவை மாற்றனும்?

டாலர் இருந்தால் தான் எல்லா பொருட்களும் வாங்க முடியும் என்ற தேவை காரணமாக எல்லா நாடுகளும் டாலரை வாங்கி குவிக்க ஆரம்பித்தன. இவ்வாறு தங்கத்தைப் போல் டாலர் பேப்பரும் ஒரு மதிப்பு மிக்க பொருளாக மாறியது.

அதனால் தான் அமெரிக்கா சந்தோசமாக இருந்தாலும், துக்கமாக இருந்தாலும் உலகம் முழுவதும் அழ வேண்டியுள்ளது.

டாலர் மதிப்பு கூடினால் மற்ற நாடுகள் இறக்குமதி செய்ய வேண்டிய பொருட்களுக்கு அதிக பணம் கொடுக்க வேண்டி இருக்கும். டாலர் மதிப்பு குறைந்தால் ஏற்றுமதி பொருட்களுக்கு குறைந்த வருமானம் கிடைக்கும். எப்படி இருந்தாலும் பலன் மட்டும் அமெரிக்காவுக்கு.

உதாரணத்துக்கு இந்தியா சீனாவிடம் இருந்து துணிகள் இறக்குமதி செய்ய வேண்டி இருந்தால், முதலில் இந்தியா இரண்டு நாடுகளுக்கும் சம்பந்தம் இல்லாத டாலரில் மாற்றி சீனாவுக்கு கொடுக்க வேண்டும். அதன் பிறகு சீனா தங்கள் நாணயத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். இப்படி தேவை இல்லாமல் நாணயத்தை பல முறை மாற்ற வேண்டிய நிலை.

இப்படி அரை நூற்றாண்டாக ஓசியிலே சாப்பிட்டு வந்தவர்களுக்கு ஈரான் வடிவில் ஆபத்து வந்தது.

இதனை அடுத்த பதிவில் விரிவாகக் காணலாம்.
ஈரான் எப்படி இந்தியாவைக் காப்பாற்றும்?


தொடர்பான பதிவுகள்:
ரூபாயின் மதிப்பு ஏன் சரிகிறது?
தங்கம் இப்பொழுது வாங்கலாமா?

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

6 கருத்துகள்: