திங்கள், 9 பிப்ரவரி, 2015

பிப்ரவரி போர்ட்போலியோவை தவிர்க்கிறோம்

விடுமுறைக்கு பின் எழுதும் முதல் பதிவு. சிறிது காலம் பணம், பங்குச்சந்தை, அலுவலக வேலை போன்றவற்றை பற்றி சிந்திக்காமல் இருந்தது புத்துணர்வைக் கொடுக்கிறது என்பது உண்மையே..


அதே சமயத்தில் சந்தையை தூரத்திலிருந்து பார்க்கும் போதும், பொருளாதார தரவுகளுக்கு அப்பால் நேரடி சூழ்நிலையைக் காணும் போதும் வித்தியாசங்கள் தெரியத்தான் செய்கின்றன.



மோடியின் பொருளாதார ரீதியான நடவடிக்கைகள் சந்தையில், கார்பரேட் அளவில் பாராட்டப்பட்டாலும் வெகுஜன மக்கள் அதன் பலனை இன்னும் அடையவில்லை என்று சொல்லலாம்.

இதற்கு முதலீடுகள் அனைத்தும் அணு ஆயுதம், புல்லெட் ரயில் போன்ற மேல் தட்டு வர்க்கத்தை குறி வைத்து வருவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அல்லது,

நேரடி எரிவாயு மானியம், இதர மானியங்கள் குறைப்பு போன்ற அரசின் வருமானத்தை பெருக்கும் நடவடிக்கைகள் மெதுவாகத் தான் பலனை கொடுக்க ஆரம்பிக்கும் என்பதும் காரணமாக இருக்கலாம்.

அதனால் தாராள மனதுடன் இந்த வருடம் பட்ஜெட் போடுமளவு மத்திய அரசிடம் காசு இருக்குமா என்று தெரியவில்லை. நெருக்கடியில் போடும் பட்ஜெட் சந்தைக்கு சாதகமாக இருப்பது கடினமே.

இது போக, நாளை வெளிவரும் டெல்லி தேர்தல் முடிவுகளும் மோடிக்கு சாதகமாக இருக்காது என்று பேசப்படுகிறது. மோடி மீதான ஈர்ப்பு குறைந்து வருவதையும் பிஜேபி கோட்டையான கன்னியாகுமரியில் கூட காண முடிகிறது.

இத்தகைய அரசியல் நெருக்கடி முன்னர் போல் அவசர சட்டங்களை எளிதில் இயற்றி சந்தையை திறப்பதில் தடங்கல் ஏற்படுத்தலாம்.

இன்று வெளிவந்த L&T முடிவுகளும், அவர்கள் எதிர்கால ஆர்டர் புத்தக எதிர்பார்ப்பை குறைத்து இருப்பதும் சில சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு எதிர்மறை காரணிகளால் சூழப்பட்ட சந்தையில் பிப்ரவரியில் போர்ட்போலியோவை வாசகர்களுக்கு தருவது அதிக அளவு பலனை தராது என்று நினைப்பதால் பிப்ரவரி போர்ட்போலியோவை தவிர்க்கிறோம்.

இந்த மாத இறுதியில் வெளிவரும் பட்ஜெட் சில திசைகளைக் காட்ட வாய்ப்புள்ளது. அதனால் மார்ச்சில் போர்ட்போலியோ சேவையை தொடர்கிறோம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக