வியாழன், 26 பிப்ரவரி, 2015

ரயில் பட்ஜெட்டை எதிர்மறையாக எதிர்கொண்ட சந்தை

நேற்று இந்திய ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை 200 புள்ளிகளுக்கும் மேல் குறைந்து சந்தை எதிர்மறையாகவே எதிர்கொண்டது.


ரயில்வே போல் நிறைய துறைகள் இருக்கும் போது ஏன் ரயில்வேக்கு மட்டும் தனியாக பட்ஜெட் என்பது புரியாத ஒன்றாகவே இருந்து வந்தது.

பிரிட்டிஷ் காலத்தில் ஆரம்பித்த நடைமுறை அப்படியே மாற்றமின்றி பின்பற்றப்படுகிறது என்பது தவிர ஒன்றும் இல்லை.புதிய ரயில்கள் எதுவும் விடப்படவில்லை. அது நிர்வாகம் தொடர்பான முடிவு தான். அதனால் எப்பொழுதும் அறிவிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

மற்றபடி, அறிவித்த முடிவுகள் கூட நிர்வாக ரீதியில் தான் இருக்கின்றன. அதனால் பட்ஜெட் ஒன்று போட்டு பரபரப்பாக காட்ட வேண்டியதன் அவசியம் அடிபட்டு போகிறது.

ஆனால் சட்டியில் இருப்பதையும் அகப்பையில் வருவதையும் கவனத்தில் கொண்டு கவர்ச்சி அறிவிப்புகள் இல்லாத பட்ஜெட் என்பதால் பாராட்டலாம்.

தமிழக முக்கிய திட்டங்களான மதுரை-குமரி இரட்டை பாதை திட்டங்கள் கூட இணையதளத்தில் தான் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதனால் முதலில் பட்ஜெட் உரையை கேட்கும் போது ஒன்றுமே கிடையாதா என்ற ஏமாற்றமே ஏற்பட்டது. அதன்  பிறகு தான் தெளிவு ஏற்பட்டது.

சிமெண்ட், தானியங்கள் போன்றவற்றிற்கான சரக்கு கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. இதனால் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும். இதனால் பங்குச்சந்தை பட்ஜெட்டை எதிர்மறையாகவே எதிர் கொண்டது.

பயணிகள் கட்டணம் பட்ஜெட் முன்னதாகவே ஏற்கனவே உயர்த்தப்பட்டதால் இந்த முறை உயர்த்தாமல் அழகாக தப்பி விட்டார்கள்.

ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சி. ஆனால் அதற்கான நிதி எப்படி திரட்டுவார்கள் என்பதில் தெளிவு இல்லை.

ரயில்வேயில் சுத்தம் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது கவனிக்கத்தக்கது. இதனால் ரயில்வே பராமரிப்பு பணிகளை அதிக அளவில் மேற்கொள்ளும் A2ZInfra என்ற பங்கு 9% உயர்வை கண்டது. மற்ற எதிர்பார்ப்புள்ள பங்குகள் எதிர்மரையிலே இருந்தன.

ரயில்வே பட்ஜெட் எனபதற்கு சந்தை அதிகமாக எதிர்வினை காட்டியுள்ளதாகவே நம்புகிறோம். ஒரு பத்து பங்குகளை தவிர மற்ற பங்குகளுக்கு ஏற்படும் அதிக அளவு பாதிப்பு என்பது தேவையில்லாதது.

ஆக ரயில்வே பட்ஜெட்டையும், பங்குச்சந்தையும் அதிக அளவில் தொடர்புபடுத்தி நமது பங்கு வணிக யுத்தியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்: