திங்கள், 16 ஜூலை, 2018

ட்ரேட் மார்க்கில் பாடம் கற்பிக்கும் சரவண பவன்

கடந்த நான்கு நாட்களாக திருப்பதி பயணம். கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு நடை பயணம். அதனால்  பதிவுகள் எழுத முடியவில்லை.


எங்கும் கூட்டம், எதிலும் தமிழ் என்று ஆந்திர மாநிலத்தில் இருந்தது போலவே தோன்றவில்லை.



திருப்பதிக்கு அண்மையில் உள்ள காளகஸ்தியில் கூட இதே அனுபவம் தான்.

மதராஸ் மனதே என்று கேட்டவர்களுக்கு திருப்பதி அமைந்திருக்கும் சித்தூர் மாவட்டத்தை கொடுத்து விட்டோம். ஆனால் தமிழின் ஆதிக்கம் இன்னும் அதிகமாகவே உள்ளது என்றே சொல்லலாம்.

திருப்பதியில் கிடைத்த ஒரு அனுபவத்தை நிர்வாக ரீதியாக பார்ப்போம்.


திருப்பதியில் எங்கும் பார்க்க கூடியது என்று ஒன்று சொன்னால் சரவண பவனை சொல்லலாம்.

திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டில் இறங்கி எங்கும் சாந்தி ஸ்வீட்ஸ் பார்ப்பது போலவே ஒரு அனுபவம்.

பஸ் ஸ்டாண்டில் இறங்கினால் உள்ளே சென்னை சரவண பவன் ஒன்று  என்று இருந்தது.

சந்தேகத்தில் வேண்டாம் என்று வெளியே வந்தால் இன்னொரு சரவண பவன். அதில் முத்தாரம்மன் துணை என்று இருந்தது.

ஒரிஜினல் சரவண பவனில் முருகனின் வேல் அல்லவா இருக்கும் என்ற எண்ணத்துடனே உள்ள சாப்பிட சென்றோம்.

மெனுவெல்லாம் சரவண பவனில் இருக்கும் அதே சாப்பாடு வகைகள் தான். விலையும் சரவண பவன் அதிக விலை தான்.

ஆனால் சாப்பாட்டின் தரம் மற்றும் ருசி கடையோர கடைகளில் கூட தோற்று விடும்.

இதே போல் திருப்பதியில் எந்த தெருவில் சென்றாலும் சரவண பவன் பெயர் பலகையை பார்க்கலாம்.

சரி. காளகஸ்திக்கு சென்றால் அங்கும் அதே நிலை தான்.



சரவண பவன் எப்படி இதனை விட்டார்கள்? ட்ரேட் மார்க் எதுவும் வாங்கவில்லையா? என்று பல கேள்விகள் வந்து கொண்டே இருந்தன.

பெங்களுர் வந்த பிறகு முதல் வேலையே சரவண பவன் குறியீடு குறித்து நெட்டில் தேடியது தான்.

கிடைத்ததில் சுவராஸ்யம் என்னவென்றால் இதே காளகஸ்தியில் உள்ள சென்னை சரவண பவன் மீது வழக்கு தொடந்து இருக்கிறார்கள்.

நான்கு கட்டிடங்கள் தள்ளி உள்ள எங்களது ஹோட்டலுக்கு அருகிலே இதே பெயரில் கடை திறந்து மக்களுக்கு குழப்பம் விளைவிக்கிறார்கள். அதனால் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று 2005ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆனால் அந்த வழக்கு ஒரிஜினல் சரவண பவனுக்கு பாதகமாகவே வந்தது.

அதில் நீதிபதி குறிப்பிட்டது கீழே உள்ளது தான்...

சுப்ரமணிய சுவாமியை குறிப்பிடும் சரவணா என்பது பொதுவான சொல்.அதற்கு யாரும் உரிமம் கொண்டாட முடியாது.

அதே நேரத்தில் 'சென்னை சரவண பவனில்' ஒரு பக்கம் முருகன் படத்தையும், மறு புறம் கிருபானந்த வாரியார் படத்தையும் வைத்துள்ளார்கள். ஆனால் ஒரிஜினல் சரவண பவனில் படம் எதுவும் இல்லை.

எழுத்துகளின் அளவை எடுத்துக் கொண்டால் ஒன்று சிறியதாக இருக்கிறது. மற்றொன்று பெரியதாக இருக்கிறது.

ஆக, ஒற்றுமைகளை விட வேற்றுமைகளே அதிகமாக உள்ளதால் ஒரிஜினல் சரவண பவன் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்று சொல்லி இருந்தார்கள்.

நிதர்சனத்திற்கும்,தியரிக்கும் உள்ள வித்தியாசம் இது.

பொது மக்களில் ஒருவராக கடை முன் நின்று பார்த்தால் நமக்கு குழப்பமே தருகிறது. ஆனால் சட்டத்தின் விதி முறைகள் இதற்கு ஒத்துப் போவதில்லை.

இதற்கு சரவண பவன் மீதும் தவறினை சொல்லலாம்.

வளரும் காலத்திலே இது தொடர்பாக லோகோ, பெயர் வைக்கும் சமயத்தில் இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்து இருக்கலாம்.

தற்போது போலிகள் கொடுக்கும் சாப்பாடுகளால் ஒரிஜினல் சரவண பவனுக்கு கூட மக்கள் பயப்படும் சூழ்நிலை இனி வேகமாக வரலாம்.

எல்லோருமே தாம் தொடங்கும் தொழில் பெரிய அளவில் செல்லும் என்ற நம்பிக்கையில் தான் தொடங்குகிறோம்.

அப்படி அசுர வளர்ச்சி அடையும் போது பிராண்ட் என்பது நம்மிடம் இருக்கும் எல்லா சொத்துக்களை விட மிக அதிக மதிப்பு பெறுகிறது. அந்த அளவிற்கு மக்களை சென்றடைய இன்னொரு நிறுவனம் பல ஆண்டுகளை முதலீடு செய்ய வேண்டும் என்பதும் ஒரு காரணம்.

அந்த ப்ராண்டிற்கான லோகோவினை ஒலி, ஒளி வடிவங்களில் கூட நாம் பதிவு செய்து கொள்ளலாம்.

அவ்வாறு லோகோவினை தேர்ந்து எடுக்கும் போது எழுத்துக்கள், அதற்கான பான்ட், சைஸ், நிறம் போன்றவை பொதுவாக இல்லாமல் தனித்தன்மையுடன் டிசைன் செய்ய வேண்டும்.

PICNIC, PIKNIK போன்றவற்றை ஒலியாக உச்சரிக்கும் போதும் கூட ஒரே ஒலி தான் வருகிறது. இதனை கூட ஒலி வடிவமாக ட்ரேட் மார்க்கில் சேர்த்துக் கொள்ளலாம்.

அதே போல் லோகோ படங்களையும் முருகன், சிவன் போன்ற பொதுவான படமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

கிருபானந்த வாரியார் படத்தை மேலே எடுத்தவர்களுக்கு கூட பின்னொரு காலத்தில் அவரது வாரிசுகள் வழக்கு தொடரலாம்.

தொழில் முனைவோர்களுக்கு தேவையான ஒரு அவசிய முன் எச்சரிக்கை இது. கவனமாக இருப்போம்!

இந்திய ட்ரேட் மார்க் பதிவுகளுக்கு பின் வரும் இணைப்பை பார்க்கலாம். http://www.ipindia.nic.in/trade-marks.htm

இது வரை எமது கட்டுரைகள் எழுதிய உடனே மின் தினசரி மின் அஞ்சல் வழியாக சென்று வந்தன. ஆனால் அடிக்கடி அனுப்பி தொல்லை கொடுக்க வேண்டாம் என்று எண்ணம் வருவதால் வாரத்திற்கு ஒரு முறை மட்டும் கட்டுரைகளை தொகுத்து அனுப்புகிறோம்.

தேவைப்பட்டால் muthaleedu@gmail.com என்ற முகவரிக்கு Subscribe என்று சொல்லி மின் அஞ்சல் அனுப்புங்கள்! தொல்லை கொடுக்காமல் அனுப்புகிறோம். .



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. பெயரில்லா10 மே, 2020 அன்று AM 9:31

    ஒரு சில நேரத்தில் நிஜத்தை விட போலியே சுவை அதிகம்

    பதிலளிநீக்கு