ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

பணக்கார நாடுகளின் நியாயமற்ற வர்த்தகக் கொள்கை

கடந்த வாரம் மோடி அரசின் ஒரு நிலைப்பாடு பாராட்டத்தக்க வேண்டியது. தடையற்ற வர்த்தக கொள்கையில் இந்தியா தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சரியான நிலைப்பாட்டை எடுத்தது.


எமது முந்தைய ஒரு பதிவில் முந்தைய அரசின்  உணவு பாதுகாப்பு மசோதாவை விமர்சனம் செய்து இருந்தோம். பொது விநியோக திட்டத்தை சீர்படுத்தினாலே உணவுத் தேவையை நிறைவேற்ற முடியும் என்ற சூழ்நிலையில் புதிதாக ஒரு திட்டம் அதிக செலவில் தேவை தானா என்பது தான் அந்த கட்டுரையின் மையக் கருத்து.

ஆனால் தற்போது உலக வர்த்தக மையம் கொண்டு வரும் தடையில்லா வர்த்தகக் கொள்கை பொது விநியோகத் திட்டத்தையும் கடுமையாக பாதித்து விடும். அதே போல் நலிந்து வரும் விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் செயல்.



பொதுவாக உணவு தொடர்பான மானியம் இரண்டு விதங்களில் கொடுக்கப்படுகிறது. ஒன்று விவசாயிகளுக்கு நேரடியாக, மற்றொன்று ஏழை மக்களுக்கு உணவு தேவையை நிறைவு செய்வதற்கு.

அரசு விவசாயிகளுக்கு மின்சாரம், உரம் போன்றவற்றில் சலுகைகளை கொடுத்து அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை அதிக விலைக்கு வாங்குகிறது. அதே உணவு உற்பத்தி பொருளை ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் கொடுக்கிறது. இதில் உள்ள இடைவெளி தான் 'உணவு மானியம்' என்று அழைக்கப்படுகிறது.

இந்த இடைவெளியை மொத்த உற்பத்தி செலவில் இருந்து பத்து சதவீதத்துக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தடையில்லா வர்த்தகக் கொள்கை கூறுகிறது

உணவு விலைகள் பல மடங்கு அதிகரித்து விட்ட நிலையில் 10 சதவீதம் என்பது மிகக் குறைந்த மானியம் என்று வளரும் நாடுகள் கவலைப்படுகின்றன.

பணக்கார நாடுகளைப் பொறுத்த வரை வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் சதவீதம் மிகக் குறைவாக இருக்கும் சமயத்தில் அவர்களால் எவ்வளவு விலை உயர்வையும் சமாளித்து விட முடியும். ஆனால் வளரும் நாடுகளைப் பொறுத்த வரை உணவிற்கே அதிக அளவு செலவு செய்யும் சமயத்தில் ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள்.

இது போக, விவசாயிகளின் மானியம் குறைக்கப்படும் சமயத்தில் வீழ்ச்சியில் இருக்கும் விவசாயிகள் வாழ்க்கை மேலும் பாதாளத்திற்கு தள்ளப்படும். தற்போது இருப்பதை விட விவசாயிகள் தற்கொலை விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இது போக, உணவு விலைகளை  சமநிலைப் படுத்தும் பொருட்டு அரசு அவ்வப்போது ஏற்றுமதி, இறக்குமதியில் சில நிபந்தனைகள் விதிக்கும்.

உதாரணத்திற்கு உள்நாட்டில் அரிசி விலை உச்சத்தில் இருக்கும் சமயத்தில் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதன் மூலம் உள்நாட்டில் அரிசி புழக்கம் அதிகம் ஏற்பட்டு விலை குறையும். இந்த நிபந்தனைகளும் கூடாது என்று பணக்கார நாடுகள் கூறுகின்றன.


ஏனென்றால், ஏழை நாடுகளின் ஏற்றுமதி தடை விதிக்கப்படும் சமயத்தில் பணக்கார நாடுகளின் இறக்குமதி குறைந்து அங்கு உணவு பொருட்களின் விலைகள் கூடி விடுகிறதாம்.

விவசாயத் துறையைப் பொறுத்த வரை மற்ற உற்பத்தி துறைகள் போல அல்ல. உணவு என்பது மக்கள் வாழ்வாதரத்துடன் இணைந்த ஒன்று. அதில் அரசு தலையிடக் கூடாது என்று சொல்வது முற்றிலும் நியாயமற்ற செயல்.

இந்த மானியம் தொடர்பான நிரந்தர தீர்வுக்கு வர பணக்கார நாடுகளும் தயார் இல்லை. ஏழை நாடுகளுக்கு பயனில்லாத ஒப்பந்தத்தை அவர்கள் தலையில் கட்ட பார்க்கிறார்கள்.

பணக்கார நாடுகளின் பச்சை சுயநலத்திற்கு ஏழை நாடுகள் பலியாக வேண்டுமாம். வணிகம் ஒன்றே பிரதனாமாகக் கொண்ட ஒரு ஒப்பந்தத்தை நலிந்தவர்கள் மீது திணிக்கிறார்கள்.

அதில் நல்ல ஒரு துணிச்சலான முடிவை இந்தியா எடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.


English Summary:
The World Trade Organization's Free Trade Agreement policy gives injustice to poor countries and spoiling local agriculture growth.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக