செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

சன் டிவியின் ஆளுமையும் பங்கும் சரிகிறது

சன் டிவி நிறுவனத்திற்கு தமிழகத்தில் அறிமுகம் கொடுக்கத் தேவையில்லை. இருபது வருடங்களாக தென் இந்தியாவில் மீடியா துறையில் முதல் இடத்தில இருக்கும் நிறுவனம்.


பொதுவாக அரசியலுடன் சேர்ந்து தான் அவர்களும் வளர்ந்தார்கள் என்பது சன் டிவி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஆனால் தென் இந்திய மீடியா துறையை வட இந்திய பெரு முதலாளிகள் ஆக்கிரமிக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது சன் டிவி என்பதும் உண்மையே.கடந்த சில நாட்களாக பங்குச்சந்தையில் சன் டிவி பங்கு கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதற்கு முதல் காரணமாக சொல்லப்படுவது, மாறன் சகோதர்கள் மீது உள்ள மோசடி புகாருக்கான ஆதாரங்கள் சிபிஐக்கு கிடைத்து விட்டதாக செய்திகள் வருகின்றன.

ஆனால் இதை விட பல காரணங்கள் இருப்பதாகக் கருதலாம்.

அரசியலையும்  தாண்டி சன் டிவி காலத்திற்கேற்ற வகையில் மாறவில்லை என்பதே ஒரு முக்கியமான உண்மை.

சீரியல்களை நீண்ட நாள் இழுத்துக் கொண்டு செல்வது, சினிமா படங்களின் உரிமத்தை வாங்கி வைத்துக் கொள்வது என்பது போன்ற ஒரே விதமான ஸ்டைலை பின்பற்றி வந்தது மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒரு கட்டத்தில் 75%க்கும் மேல் பார்வையாளர்களை பெற்று வந்த தற்போது 60%க்கும் அருகில் டிஆர்பி புள்ளிகளைப் பெற்று வருகிறது.

அதே நேரத்தில் புதுமையான நிகழ்சிகளை கொடுத்து விஜய் டிவி டிஆர்பி ரேடிங்கை கொஞ்சம் கொஞ்சமாக சன் டிவியிடமிருந்து பறித்து வருகிறது. ஒற்றை இலக்கத்தில் இருந்த விஜய் டிவி டிஆர்பி தற்போது 15% என்பதை தொட்டு விட்டது.


குறைந்து வரும் சன் டிவி பார்வையாளர்கள் 

ஒரு ஆரோக்கியமான போட்டியில் சன் டிவி பின் தங்கி விட்டது என்று சொல்லலாம். மீடியா துறையில் தேவையான திறமையான மனிதர்களை அடையாளம் காணவும் தவறி விட்டது. ஆரம்பத்தில் இருந்த கலாநிதி மாறனின் புதுமையான ஆர்வங்கள் தற்போது குறைய துவங்கி விட்டதாகவே கருதலாம்.

இது தான் கடந்த வாரத்தில் சன் டிவியின் நிதி அறிக்கையில் எதிரொலித்தது.

அதில் விளம்பர வருமானம் குறைய துவங்கி உள்ளது தெளிவாக தெரிகிறது. கிட்டத்தட்ட 55% வருமானம் விளம்பரத்தில் இருந்து வருவதால் இந்த வீழ்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது.

இது வரை மற்ற பிரிவுகளான சந்தா, டிஷ் மற்றும் ஒளிபரப்பு போன்றவை நிலையான வருமானம் கொடுத்து வந்தது. தற்போது அதுவும் அம்மாவின் அதீத ஆர்வத்தில் வரும் அரசு கேபிள் மூலம் பாதிக்கப்பட்டு விடும்  வாய்ப்பு தெரிகிறது.

முன்பு மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் அரசு கேபிள் ஒளிபரப்பிற்கு தேவையான சாட்டிலைட் வசதிகள் பெற முடியாமல் இருந்தது. தற்போது மத்திய அரசு மாறியதில் அரசு கேபிளுக்கு பிரச்சினை ஒன்றும் இருக்காது என்று நம்பப்படுகிறது.

கடந்த வாரத்தில் சட்டசபையில் அரசு கேபிள் மூலம் இன்டர்நெட் சேவை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மேலும் விரிவாக்கப்படும் பட்சத்தில் நேரடியாக பாதிக்கப்படும் ஒரு நிறுவனமாக சன் டிவி மாறும்.

இது போக, டிராய் ஒழுங்கு ஆணையம் ஒரு மணி நேரத்திற்கு 12 நிமிடங்கள் தான் விளம்பரம் ஒளிபரப்ப வேண்டும் என்று கூறியுள்ளது. இது முன்னர் 15 நிமிடங்களாக இருந்தது. இந்த கொள்கையும் சேர்ந்து விளம்பர வருமானத்தைக் குறைத்துள்ளது.

இறுதியாக, IPLலும் கடுமையான அளவு நஷ்டம் அடைந்து உள்ளது. இந்தியா சிமெண்டை அடுத்து ஐபில்லால் பாதிக்கப்படும் இரண்டாவது நிறுவனம் சன் டிவி என்று சொல்லலாம். தேவையில்லாமல் இறங்கிய தொழில்.

இப்படி தொழில் போட்டி, வழக்கு, அரசியல் என்று முப்பரிமாணங்களில் சன் டிவி சிக்கியுள்ளது. ஆதலால், பங்கு முதலீட்டாளர்கள் சன் டிவி பங்கை தற்போது தவிர்ப்பது நல்லது.


English Summary:
Sun TV Earnings are decreasing due to less innovative programmes and tight competition from Vijay TV. Telecom Regulatory Board also decreases advertisement time to less. Govt. cable like many factors are affecting Sun TV shares in stock market.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

3 கருத்துகள்: