செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் ப்ளிப்கார்ட் வெற்றி

இதற்கு முன் நாணயம் விகடன் பத்திரிகை படிக்கும் போது சுயதொழில் வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கை எழுதி இருப்பார்கள். ஒவ்வொருவரது வாழ்க்கையை படிக்கும் போது ஒரு விடயம் பொதுவாக இருக்கும்.


அதாவது அதிக பொறுமை தேவை. உடனே யாரும் பணக்காரராகி விட முடியாது என்று தெளிவாக சொல்லி இருப்பார்கள். இது உண்மையானதாகவே இருந்தாலும் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு தளர்வை கொடுக்கும் கருத்தாகவே இருக்கும்.

ஆனால் புதிய முயற்சியும் தெளிவான திட்டமிடுதலுடன் கூடிய பாதை இருந்தால் வெற்றியை சுவைக்க அவ்வளவு காலம் காத்து இருக்க தேவையில்லை என்பதை தற்போதைய ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் வெற்றி சுட்டிக் காட்டுகிறது.

இதற்கு முன் பன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா? என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த கட்டுரையை கருதிக் கொள்ளலாம்.



பின்னி பன்சால், சச்சின் பன்சால் என்ற 81ல் பிறந்த இரண்டு இளைஞர்கள் 2007ல் வெறும் 4 லட்ச முதலீட்டில் ஆரம்பித்த நிறுவனம் தான் ப்ளிப்கார்ட். ஆனால் இன்று நிறுவனத்தின் மதிப்பு 42,000 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த உயர்வை சதவீதத்தில் சொல்வதாக இருந்தால் கூட பல பூஜ்யங்களை போட வேண்டி உள்ளது.


நமது சமகாலத்தில், சம வயதில், அதே சூழ்நிலையில் வெற்றி பெற்றவர்களது அனுபவங்களை தெரிந்து கொள்வது நமது திட்டமிடுதலுக்கும் பெரிதும் உதவும்.

இந்த நிறுவனத்தின் நிறுவனர்களாகிய பன்சால்கள் இருவருமே ஐஐடியில் படிக்கும் போது நண்பர்களாக இருந்தவர்கள். அதன் பிறகு வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து இறுதியில் இ-காமர்சில் புகழ் பெற்ற அமேசான் நிறுவனத்தில் இணைந்தார்கள்.

அங்கே அவர்களுக்கு கிடைத்த ஒரு சின்ன க்ளு தான் ப்ளிப்கார்ட் நிறுவனம் துவங்க காரணமாயிற்று.

அப்பொழுது அமேசான் நிறுவனம் இந்தியாவில் இ-ஷாப்பிங் பிரிவை துவங்கி தோல்வி அடைந்து இருந்தது. அதாவது கட்டமைப்பு இல்லாத பொருட்களை அனுப்பும் சேவை இல்லாததால் பொருட்கள் உரிய நேரத்தில் கிடைக்க வில்லை. அதே போல் பொருட்களை பார்த்து வாங்கி பழகி விட்ட மக்களிடம் ஆன்லைன் சேவை பற்றி நம்பிக்கையை ஏற்படுத்துவது கடினமாக இருந்தது,

இந்த இரண்டு காரணங்களும் தான் அமேசான் நிறுவனத்தின் தோல்விக்கு காரணமாக இருந்தன. அதே நேரத்தில் இந்த இரண்டு காரணங்களும் இந்திய சூழ்நிலையை தெளிவாக அறிந்து இருந்த பன்சால்களுக்கு சாதகமாக அமைந்தன.

முதலில், மக்களிடம் நம்பிக்கையை பெறும் விதமாக "Cash-On-Delivery" என்ற முறையை அறிமுகப்படுத்தினார்கள். அதாவது பொருட்களை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்த பிறகு காசு கொடுத்தால் போதும் என்பது தான். வீட்டுக்கு பொருள் வந்து பார்த்த பிறகு பணத்தை கொடுப்பதில் மக்களுக்கும் கஷ்டம் ஏற்படவில்லை. ஒரு முறை நம்பிக்கை ஏற்பட்டு விட்டதால் அதன் பிறகு காசை முதலில் கொடுத்தே பொருட்களை வாங்க ஆரம்பித்தார்கள்.

இரண்டாவது, பொருட்களை விநியோகிக்க தங்களது சொந்த டெலிவரி சேவையை ஆரம்பித்தார்கள். இன்றும் கூட  60~70% பொருட்கள் ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் சொந்த டெலிவரி சேவையிலே வீடுகளை அடைகின்றன. சொந்த டெலிவரி சேவையில் மென்பொருள் தொழில் நுட்பங்களை புகுத்தி எந்த இடத்தில உள்ளது என்பதை கண்காணிக்கவும்  முடிந்தது.

ஆக, அமேசான் எந்த காரணங்களால் முடியாது என்று விலகி சென்றதோ அதே காரணங்களுக்கு தீர்வை கண்டுபிடித்தன் மூலம் வெற்றியை சுவைத்தார்கள்.

தீர்வு இல்லாத பிரச்சினைகள் இல்லை 

பன்சால்களும் பெரும் பணக்கார்கள் இல்லை. நம்மைப் போன்று நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். அதனால் அவர்கள் குடும்பத்திலும் நல்ல வேலையை விட்டு விட்டு புரியாத ஒரு தொழிலுக்கு செல்லக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது. ஆறு மாதம் பார்ப்போம், அதன் பிறகு பிசினெஸ் வெற்றி அடையா விட்டால் மீண்டும் மென்பொருள் வேலைகள் சேர்வதாகக் கூறி தான் சம்மதம் வாங்கினார்கள்.

முதலில் அகலக்கால் வைக்காமல் அவ்வளவு எளிதில் நஷ்டமடையாத புத்தகங்களை மட்டும் தேர்ந்தெடுத்தார்கள். ஆரம்ப காலங்களில், ப்ளிப்கார்ட் புத்தகங்களுக்கான தளம் என்று தான் பெயர் பெற்று இருந்தது.

அதன் பிறகு தான் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு விரிவாக்கி, தற்போது மிந்திரா தளத்தையும் வாங்கி ஆடைகளை விற்பதற்கும் விரிவாக்கி விட்டார்கள்.

ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் வெற்றி நம்மை ஆச்சரியமடைய வைக்கிறது. அதே நேரத்தில் ஒரு மிகப்பெரிய நம்பிக்கை கொடுக்கவும் செய்கிறது.

அடுத்து, காய்கறி, வெந்தய சாமான்கள் என்று தினசரி வீட்டுப் பொருட்களில் இறங்கினாலும் ஆச்சர்யமில்லை. அதற்கு முன் நாம் முந்தி விட்டால் ப்ளிப்கார்ட்டின் லாபத்தையாவது பகிர்ந்து கொள்ளலாம்.

பணம் போட்டிப் போட்டு கொட்டப்படுகிறது இந்திய ஆன்லைன் சந்தையில்..என்ற கட்டுரையும் படியுங்கள். இந்திய இ-காமர்ஸ் துறைக்கு எவ்வளவு வாய்ப்புகள் உள்ளது என்பதையும் அறிய முடியும்.

இன்னும் நிறைய எண்ணங்கள் மனதில் இருந்தால் அதனை செயல்படுத்த முனையுங்கள். வெற்றி ஒன்றும் அவ்வளவு தூரமில்லை!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்: