ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

பங்குச்சந்தையை மயக்கும் மோடியின் சுதந்திர தின பேச்சு

ஆட்சிக்கு வந்து சில மாதங்களே ஆகியுள்ளதால் மோடி அரசின் செயல்பாடுகளை இன்னும் யாரும் மதிப்பிடவில்லை. ஆனால் தனது ஒவ்வொரு பேச்சின் போதும் மோடி அவர்கள் ஒரு வித புது நம்பிக்கையைப் பெற்று வருகிறார். இது தான் நாட்டை ஆளும் தலைவருக்கு கண்டிப்பாக இருக்க வேண்டிய பண்பு  என்றும் சொல்லலாம்.

மன்மோகன் சிங் அவர்கள் சிறந்த நிதி அமைச்சர் என்றாலும், பிரதம மந்திரியாக அவரால் ஜொலிக்க முடியவில்லை. நாட்டை ஆள்பவர் அறிவாளியாக இருக்க வேண்டியது அவசியமில்லை. ஆனால் சிறந்த நிர்வாகியாக இருக்க வேண்டும் என்பதையே வரலாறுகள் உணர்த்துகிறது. அந்த வகையில் மோடியையும் சிறந்த நிர்வாகி என்று சொல்லலாம். 



நேருவிற்கு பிறகு சுதந்திர தின பேச்சுக்களில் மக்களைக் கவர்ந்தவர் என்று பார்த்தால் மோடியாகவே இருப்பார் போலும். அதிலும் அவரது திட்டமிட்ட பேச்சு சாமானிய மக்களை எளிதில் சென்றடைந்தது என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயமே.

எப்பொழுதுமே ஒரு வித எதிர்பார்ப்பை அவரால் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. அதனால் தான் பங்குச்சந்தையில் மோடியின் பேச்சுக்கு ஒரு நாள் முன்னரே சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரை உயர்ந்தது. 

சுதந்திர தின உரையில் "MADE IN INDIA" என்ற கோஷத்தோடு உற்பத்தி துறையைப் பற்றி ஒரு உணர்ச்சிகர பேச்சை கொடுத்துள்ளார்.

"எங்கு வேண்டுமாலும் பொருட்களை விற்றுக் கொள்ளுங்கள். ஆனால் இங்கு உற்பத்தி செய்யுங்கள்" என்று கூறியுள்ளதன் மூலம் இன்னும் பல துறைகளின் வெளிநாட்டு முதலீடுகள் விரைவாக அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது. இது அதிக அளவில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க உதவும். அதே நேரத்தில் பொருளாதார் சீர்த்திருத்தத்திற்கும் உதவும். 

அடுத்து, "PLANNING COMMISSION" என்று சொல்லப்படும் திட்டக் கமிசன் கலைக்கப்படும் என்றும் சொல்லியுள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்த காலங்களில் பசுமை புரட்சி, வெண்மை புரட்சி என்று பல திட்டங்களைக் கொண்டு வந்து, புதிதாக பிறந்த ஒரு நாட்டை வளர்த்து விட்டதில் திட்டக் கமிசனுக்கும் பெரும் பங்கு உண்டு.

ஆனால் என்னவோ காலத்திற்கு தக்க மாறாமல் இருந்தது தான் திட்டக் கமிசனின் ஒரு பெரிய தவறாக போனது. அதனால் தான் தற்போது 'பயனற்றது' என்று ஒதுக்கப்படும் நிலையில் உள்ளது.

இருந்தாலும், மோடி நினைத்து இருந்தால் திட்டக் கமிசனை அப்படியே வைத்துக் கொண்டு அதன் கொள்கைகளை மட்டும் பெரிய அளவில் மாற்றி இருக்கலாம். இங்கு தான் அரசியல் தலைவர்களுக்கு உரிய மோடியின் தனி நபர் விளம்பர உத்தி தெரிகிறது.  

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் விசயத்தில் திட்டக் கமிசன் 'ஹெட்ஜில் பார்முலா' என்ற ஒன்றை இது வரை பயன்படுத்தி வருகிறது. அந்த பார்முலாவைப் பார்த்தால் வளர்ச்சி, கடந்த திட்டங்களின் செயல்பாடுகள் போன்றவற்றிக்கு முக்கியத்துவமே இருக்காது. எல்லாமே மக்கட்தொகையின் அடிப்படையிலே இருக்கும். 

இந்த பார்முலாவால், கல்வி அறிவை அதிகரித்து குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை நன்கு செயல்படுத்தி வரும் மாநிலங்கள் போக, போக குறைந்த நிதியே பெறும். அதே நேரத்தில் எதுவுமே செய்யாமல் மக்கட்தொகையை மட்டும் பெருக்கி வந்த வட மாநிலங்கள் அதிக அளவில் நிதி பெற்று வருகின்றன. 

இங்கும் ஆரோக்கியமான போட்டி என்பதும் மாநிலங்களிடையே அவசியம் தேவைப்படுகிறது அப்பொழுது தான் சமச்சீரற்ற வளர்ச்சி என்ற பிரச்சினையைக் களைய முடியும். 

இந்த பிரச்சினைகளை புதிய அமைப்பு உருவாக்கும் போது கருத்தில் கொண்டால் வேகமாக வளர்ந்து வரும் தென் மாநிலங்களுக்கு பயனாக இருக்கும். 

அடுத்து இந்த வாரத்தில் பங்குச்சந்தையில் எதிர்மறை காரணிகள் ஒன்றும் அவ்வளவாக தென்படவில்லை. நிதி முடிவுகள் தான் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்புள்ளது.

எமது கட்டண போர்ட்போலியோ சேவை மீண்டும் துவங்குகிறது. விரும்பும் நண்பர்கள் இணைந்து கொள்ளலாம்.


English Summary:
Modi gives confident on his speech about economical reforming in Indian freedom day speech. Indian share market increased 200 points before ahead of his speech.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக