ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

இன்னும் இந்தியாவில் முதலீடு செய்ய தயங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்

கடந்த வாரம் ஹோண்டா, வோடபோன் மற்றும் BP இந்தியா போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் செய்வதற்கு இருக்கும் கஷ்டங்களை வெளிப்படையாகவே கூறியுள்ளன. இந்தியாவின் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு அவர்கள் கூறிய கருத்துக்களையும் பரீசீலனை செய்வது அவசியமானதே!


இதற்கு அவர்கள் கூறிய இரண்டு முக்கிய காரணங்கள் மோசமான கட்டமைப்பும், தேவையில்லாத நேர விரயமும் என்பது தான்.

இதில் 'நேர விரயம்' என்பது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமல்ல. சிறு தொழில் ஆரம்பிக்கும் உள்நாட்டு தொழில் முனைவோருக்கும் பிரச்சனையாக உள்ளது.சாம்சங்கின் ஒரு பிரிவு பெங்களூரில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. அது தொடர்பாக ஆலோசனை நடத்த வந்த கொரிய மேலாளர் ஒருவர் எம்மிடம் சொன்னது.

"இந்தியாவில் பணியாளர் செலவு குறைவு தான். ஆனால் ஒரு நிறுவனத்தை நடத்துவதற்காக ஆகும் செலவு அதை விட பல மடங்கு அதிகமாக உள்ளது"  என்று சொன்னார்.

இது உண்மை என்றே தோன்றுகிறது. இந்த பிரச்சினை புதிதாக தொழில் தொடங்கும் இந்தியர்களுக்கும் உள்ளது என்றே சொல்லலாம்.

நம்மிடம் ஒரு 20 லட்சம் ரூபாய் இருக்கிறது என்று எளிதில் எந்த தொழிலும் ஆரம்பித்து விட முடியாது. அதற்கு பல வழிமுறைகள், பல அலுவலகங்கள், பல கோப்புகள், பல ஏஜென்ட்கள் என்று அலைக்கழித்து விடுவார்கள். இதனால் இதற்கென்று ஒரு ஏஜெண்டை வேலையாளாக நியமிக்க வேண்டியுள்ளது. இப்படி எதற்கும் கூடவே ஒரு ஏஜெண்டை வைத்து கொண்டே தொழில் செய்து வருவது கடினமே.

இந்தியாவில் ஒவ்வொரு பிரச்சினை வரும் போது உடனே சட்டம் போட்டு விடுவார்கள். ஆனால் அதன் பிறகு அதனைப் பின்பற்றுவது என்பது கடினமே. பல சட்டங்கள் போட்டு ஒன்றையும் பின்பற்றாமல் இருப்பதை விட, சில சட்டங்களை முறையாக பின்பற்றினாலே அரசுக்கும் எளிதாக இருக்கும். அதே வேளையில் மக்களுக்கும் சௌகரியமாக இருக்கும்.

1991க்கு முன் நிலைமை இதை விட மோசமாக இருந்துள்ளது. மன்மோகன் சிங் நிதி அமைச்சராகும் போது கொண்டு வந்த ஒற்றை சாளர முறையினாலே வெளிநாட்டு முதலீடுகள் உள்ளே வருவது எளிதானது. ஆனால் உள்ளே வந்த பிறகு தொழில் புரிவது என்பது இன்னும் கடினமாகவே உள்ளது.

இதற்கு அடிப்படையாக உள்ள 'சிஸ்டம்' என்பது மாற்றி அமைக்கப்பட வேண்டும். சிஸ்டம் என்றால் தேவையற்ற வழிமுறைகளையும், சட்டங்களையும் கொண்ட நமது அமைப்பு முறை தான்.

இந்தியாவில் மட்டும் இவ்வளவு பெரிய சந்தை இல்லாவிட்டால் இங்குள்ள அமைப்பு முறைகளுக்கு யாரும் திரும்பியே பார்க்க மாட்டார்கள் என்பதே உண்மை.

அங்கு, இங்கு என்று அலைக்கழிக்காமல் தேவையான வழிமுறைகள் கொண்ட அமைப்பு இருந்தாலே போதுமானது. 'சிஸ்டம்' எளிமையாக இருந்தால் தான் அதனைப் பயன்படுத்துவதும் மேலாண்மை செய்வதும் எளிதாக இருக்கும்.


உதாரணத்திற்கு தற்போது பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு 'போலீஸ் சரிபார்த்தல்' அவசியமில்லை என்று அரசு அறிவித்துள்ளது. இது வரவேற்க்கப்பட வேண்டியது. அரசினைப் பொறுத்த வரை இது ஒரு சிறிய ஆணை தான். ஆனால் பல கோடி மக்களின் வேலை  நேரத்தில் குறைந்தது 5 மணி நேரங்களாகவது இந்த உத்தரவு சேமிக்கும்.

எனது அலுவலகத்தில் பாதுகாப்பு என்ற பெயரில் கணினியில் ஏகப்பட்ட மென்பொருள்கள் நிறுவப்பட்டிருக்கும். அந்த மென்பொருள்கள் ஒருமித்து இயங்கத் துவங்கி விட்டால் கணினி மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். அதன் பிறகு நமது மெயின் வேலையைப் பார்க்க முடியாது. இறுதியில் நிறுவன நன்மைக்காக ஏற்படுத்தப்பட்ட மென்பொருளே சுமையாக மாறி விடுகிறது.

இது போல் தான் நமது பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட பல சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாறாமல் தேவையில்லா சுமைகளாகவே தற்போது இருக்கின்றன.


English Summary:
Still India is difficult for foreign companies to invest in India due to slow approvals and poor infrastructures. Managing costs are more expensive than employee cost.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்: