திங்கள், 22 செப்டம்பர், 2014

Stock Split: பங்கினை ஏன் பிரிக்கிறார்கள்? (ப.ஆ - 29)

இது 'பங்குச்சந்தை ஆரம்பம்' தொடரின் ஒரு பகுதி. முந்தைய கட்டுரையை இங்கு காணலாம்.

சில நாட்கள் முன் ஒரு நண்பர் ஐசிஐசிஐ வங்கியில் பங்கு பிரிக்கப்பட்டது (Stock Split) தொடர்பாக ஒரு கட்டுரை எழுதுமாறு கேட்டு இருந்தார்.


பங்கினை பிரிப்பதால் எந்தவொரு பங்கிற்கும் தனிப்பட்ட முறையில் சாதகமான நிலைகள் ஏற்படுவதில்லை. இது கிட்டத்தட்ட அணைத்து பங்குகளுக்கும் பொதுவான பலனே. அதனால் ஐசிஐசிஐ வங்கி என்று அல்லாமல் ஒரு பொதுவான கட்டுரையாகவே இங்கு எழுதுகிறோம்.கடந்த ஒரு வருடத்தில் பல பங்குகள் 40%~50% அளவு உயர்வினை அடைந்துள்ளன. இதனால் என்னவாகிறது என்றால் 2000 ரூபாய்க்கு வர்த்தகமாகி வந்த பங்கு 2800~3000 ரூபாய்க்கு செல்கிறது.

இப்படி 3000 ரூபாய்க்கு செல்லும் போது குறைந்தபட்சம் ஒருவரிடம் 3000 ரூபாய் இருந்தால் தான் ஒரு பங்காவது வாங்க முடியும். இதனால் பல சிறு முதலீட்டாளர்கள் ஒரு பங்கின் அதிக பட்ச விலையைக் கண்டு ஒதுங்கி விடுவார்கள்.

இது பங்கின் வர்த்தகத்தன்மையை (Liquidity) கணிசமாக பாதிக்கிறது.

உதாரணத்திற்கு,
எமது போர்ட்போலியோவில் பரிந்துரைக்காக வரும் போது MRF Tyres என்ற பங்கு அடிப்படையில் நல்ல நிலையில் உள்ள ஒரு பங்கு. அதனால் அதனை பரிந்துரைக்கலாம் என்று நினைப்போம். ஆனால் ஒரு பங்கின் விலை 31,000 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

முதலில் இந்த பங்கை வாங்குவதற்கு குறைந்தபட்சம் 31,000 ரூபாய் தேவை.இந்த தொகையானது அனைவரிடமும்  அவ்வளவு எளிதில் எப்பொழுதும் இருப்பதில்லை.

இரண்டாவது எட்டு பங்குகள் கொண்ட போர்ட்போலியோ முறையில் முதலீடு செய்யும் ஒருவர் அதிக பணத்தை ஒரே பங்கில் முதலீடு செய்ய விரும்ப மாட்டார்.

இந்த காரணங்களால் MRF பங்கை போர்ட்போலியோவில் பரிந்துரை செய்வதை தவிர்த்து விடுகிறோம். இதனால் நிறுவனம் நன்றாக இருந்தாலும் சூழ்நிலைகளின் காரணமாகவும், சைக்கலாஜி காரணமாகவும் நிறுவனத்தின் பங்கு தவிர்க்கபப்டுகிறது.

இதே MRF Tyres ஒரு பங்கு அளவை முப்பது பங்குகளாக பிரித்து ஒரு பங்கை 1000 ரூபாய்க்கு கொடுத்து இருந்தால் நிறைய பேர் வாங்கி இருப்பார்கள். பங்கிற்கான தேவை அதிகரித்து பங்கின் விலையும் சிறிது கூடி இருக்கும்.

இதனைத் தான் "Behavioural Finance" என்று அழைக்கிறார்கள். முதலீட்டாளர்கள் மனதையும், சூழ்நிலையும் அறிந்து செய்யப்படும் சில பொருளாதார நடவடிக்கை.

இப்படி பங்கை பிரிப்பதால் நிறுவனத்தின் மதிப்பு மாறப் போவதில்லை. ஆனால் சில பலன்கள் கிடைக்கிறது.

ஒரு கிலோ காய்கறியை இரண்டு அரை கிலோவாக பிரித்து வாங்குவதாக இருந்தால் காய்கறியின் மதிப்பு கூடுவதாகவோ/குறைப்பதாகவோ  அர்த்தம் இல்லை. ஆனால் இந்த நடவடிக்கை சில்லறை வியாபாரத்தை கணிசமாக அதிகரிக்க உதவும்.

அது போல் தான், பங்கினை பிரிக்கும் போது நிறுவனத்தின் Fundamental Value, Capital, P/E, P/B என்ற பங்குச்சந்தை அடிப்படைக் காரணிகள் மாறப் போவதில்லை. ஆனால் பங்கினை வாங்குபவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பங்கினைப் பிரிப்பதால் நிறுவனம் தன்னுடைய ரெக்கார்டுகளில் பல மாறுதல்கள் செய்ய வேண்டி வரும். இது அதிகப்படியான நிர்வாக செலவை ஏற்படுத்தும்.

அது போல் முதலீட்டாளர்களுக்கு வரலாற்று பங்கு விலைகலைப் பார்க்கும் போது திடீரென்று பங்கு விலை 50%க்கும் மேல் குறைந்து இருக்கும். அது Fundamental Valuation முறைப்படி கணக்கிடுபவர்களுக்கு சிறிது குழப்பத்தை ஏற்படுத்தும்.

இந்த காரணங்களால் அடிக்கடி பங்கு விலையினை பிரிக்க மாட்டார்கள். தேவைப்படும் போது மட்டுமே பங்கு பிரித்தல் நடக்கும்.

தற்போதைக்கு Axis Bank, ICICI Bank, JK Tyres என்று பல பங்குகளின் பங்கு பிரித்தல் நடக்கிறது. இந்த பங்குகள் எல்லாவற்றுக்கும் மேற்சொன்ன விளைவுகள் பொதுவானதே.

மேலும் பங்குச்சந்தை ஆரம்பம் கட்டுரைகளுக்கு இங்கு பார்க்க.

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் அடுத்த பகுதி..


English Summary:
Stock split is the activity to increase liquidity of stocks in share market. So that small investors also buy the stocks for lower prices. It will not change the fundamental value of company.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக