செவ்வாய், 23 செப்டம்பர், 2014

சிரியா மீதான தாக்குதலும், மிட்கேப் பங்குகளும்

இன்றைய பொழுது "மங்க்ள்யான் செயற்கை கோள் செவ்வாயின் சுற்று வட்டத்தை வெற்றிகரமாக அடைந்தது" என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் புலர்ந்துள்ளது.


பூமியிலே ஓடும் ஒரு சிறு இயந்திரத்தைக் கூட முதல் முயற்சியில் வெற்றிகரமாக வடிவமைக்க முடியாது என்ற சூழ்நிலையில் நமது கட்டுப்பாட்டிலே இல்லாத ஒரு கோளிற்கு செல்லும் முயற்சியை முதலிலே வெற்றிகரமாக சாதித்த விஞ்ஞானிகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!



மக்கள் ஏழைகளாக இருக்கும் சூழ்நிலையில் இந்தியா இந்த மாதிரியான முயற்சிகளைக் கைவிட வேண்டும் என்று மேற்கு நாடுகள் சொன்னது நினைவுக்கு வருகிறது.

பொருளாதார வளர்ச்சியும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் ஒன்றன்பின் ஒன்று வளர்ச்சி அடைவது அல்ல. இரண்டும் இணையான கோட்டிலே பயணிக்க வேண்டும். 'செவ்வாய்க்கு செயற்கைக்கோள்' என்பது நமக்கு நான்கு 'அஞ்சான்' திரைப்படங்களுக்கு ஆகும் செலவு தான் என்பது மேற்கு நாடுகளுக்கு புரியவில்லை.

அரசியல்வாதிகளை விட விஞ்ஞானிகள் நாட்டிற்கு தமது கடமைகளை இது வரை சரிவரவே செய்து வந்துள்ளார்கள்.

அடுத்து, எப்பொழுது கீழே வரலாம் என்று காத்திருக்கும் இந்திய பங்குச்சந்தை நேற்று அமெரிக்கா 'சிரியா மீது தாக்குதல் நடத்தினோம்' என்று சொல்லிய பிறகு 400 புள்ளிகள் சரிந்தது. அதிக அளவு பாதிக்கப்படும் பெட்ரோல் பங்குகள் மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட எல்லா பங்குகளும் வீழ்ந்தன.

உண்மையில் சொன்னால், வளைகுடா நாடுகளில் ஏற்படும் போர் பதற்றங்கள் தற்போது ஏதோ விளையாட்டுக்கள் போலவே தோன்றுகிறது, சீரியஸாக எடுக்க முடியவில்லை. சபிக்கப்பட்ட பூமி போல!

கடந்த வார சரிவுகளின் போது இன்னும் மிட்கேப் என்று சொல்லபப்டும் வளரும் நிறுவனங்களின் பங்குகள் சரியாமல் இருப்பதைக் குறிப்பிட்டு இருந்தோம். அந்த ஏக்கம் நேற்று நடந்து விட்டது. பெரும்பாலான மிட்கேப் பங்குகள் 5% அளவுக்கு மேல் சரிந்தன.

இதனால் மிட்கேப் பங்குகளை தற்போது வாங்கி போடலாம்.

இன்னும் மிட்கேப் பங்குகளில் சிறிய சரிவுகள் காத்து இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.ஆனால் தற்போதைய சரிவுகளையும் தவற விடாமல் இருப்பதற்காக அவ்வப்போது வாங்கிக் கொண்டே சராசரி செய்து வரலாம்.

ரியல் எஸ்டேட்டை ஊக்குவிக்க அரசு சில திட்டடங்கள் கொண்டு வர இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் 'அணைவருக்கும் வீடு' என்ற திட்டம் அமலுக்கு வந்தால் சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு நல்ல தேவை ஏற்பட வாய்ப்புள்ளது.

நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை பாதிப்பு கவலையைத் தருகிறது. மோடி மற்றவர்களிடம் நம்பிக்கையில்லாமல்  நிதி, பாதுகாப்பு போன்ற முக்கியமான துறைகளை ஒரே மந்திரியிடம் கொடுத்து அவர்களை ஓவர்லோடாக வைத்து இருப்பதும் சரியான செயல் அல்ல.

இன்றும் உலக சந்தைகள் சிவப்பிலே இருப்பதால் நமது சந்தையிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக