செவ்வாய், 16 செப்டம்பர், 2014

சரிவதற்கு காரணங்களைத் தேடிப் பிடிக்கும் சந்தை

கடந்த வெள்ளியன்று இன்னும் சரிவிற்காக காத்திருக்கும் சந்தை என்ற தலைப்பில் எழுதி இருந்தோம். நாம் எதிர்பார்த்தது போல் நேற்றைய சரிவு அமைந்தது.


கிட்டத்தட்ட 11 நாட்கள் உயர்ந்தவற்றை நேற்றைய சரிவு ஒரே நாளில் எடுத்துக் கொண்டது. நேற்று சந்தையில் சென்செக்ஸ் 350 புள்ளிகள் அளவு சரிந்தது.

கடந்த பதிவில் நாம் குறிப்பிட்டது போல் நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்களின் குறியீடும் மூன்று சதவீதத்திற்கு மேல் சரிந்தது. சில நல்ல பங்குகள் 6% அளவும் சரிந்தன.



கடந்த ஞாயிறன்று செப்டம்பர் போர்ட்போலியோவை வெளியீட்டு இருந்தோம். அதில் டிப்ஸாக "சந்தை தற்போது உயர்வில் இருப்பதால் தற்போது 40% முதலீட்டையும், அடுத்த இரு வாரங்களில் சரியும் போது 40% முதலீட்டையும், மீதி 20% முதலீட்டை சந்தையின் போக்கில் சென்று முதலீடு செய்யுமாறு கூறி இருந்தோம்."

போர்ட்போலியோவை பயன்படுத்தாதவர்களும் இந்த வழிமுறையை பின்பற்றலாம்.

செப்டெம்பர் போர்ட்போலியோவின் பங்குகள் இன்னும் வாங்கும் விலையில் இருப்பதால் இணைய விரும்புபவர்கள் இணைந்து கொள்ளலாம்.

ஒரு வருடத்திற்கு முன்னால் பார்த்தால் சந்தை உயர்விற்காக காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது. தற்போதைக்கு சந்தை சரிவிற்கான காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது. ஆமாம். தற்போது வலுவான காரணிகளின் வீச்சே அதிகமாக உள்ளது என்று சொல்லலாம்.

தற்போதைய சரிவிற்கு இந்த மூன்று காரணங்களும் சொல்லப்படுகின்றன.

முதலாவது,

தொடர்ச்சியாக உயர்ந்த சந்தையில் குறுகிய கால முதலீட்டாளர்கள் லாபத்தை உறுதி செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இது உண்மையே. ஆனால் தற்காலிகமான நிகழ்வு என்று சொல்லலாம்.

இரண்டாவது,

அமெரிக்காவில் பெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தலாம் என்ற செய்தி பரவலாக்கப்பட்டு வருவது. கடந்த பல வருடங்களாக பெடரல் வங்கி அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு வட்டி விகிதத்தை உயர்த்தாமலே வைத்து இருந்தது. கிட்டத்தட்ட பூஜ்யத்துக்கு அருகில் தான் இருந்தது. தற்போது எதிர்பாரத்த வளர்ச்சி அடைந்து விட்டது என்று அவர்கள் கருதுவதால் வட்டியை உயர்த்த திட்டமிட்டு உள்ளார்கள்.

இதனைத் தான் சில மாதங்கள் முன் ரகுராம் ராஜன் எச்சரித்து இருந்தார்.

இது நமக்கு எப்படி பாதிப்பை ஏற்படுத்தும் என்றால்,

அபப்டி வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் போது இந்தியா போன்ற வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டவை மீண்டும் அமெரிக்காவிற்கு செல்லும். இதனால் நமது அந்நிய முதலீடு குறைய வாய்ப்புள்ளது.

அப்படி வட்டி விகிதம் கூடும் போது டாலரின் புழக்கம் குறைந்து டாலரின் மதிப்பு கூடி விடும். இது இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும். ஆனால் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அதிக காசை கொடுத்து பொருளை வாங்க வேண்டி இருக்கும். அதன் பிறகு அந்நிய செலாவணி பற்றாக்குறைக்கு வழி வகுக்கும்.

இது கிட்டத்தட்ட, அமெரிக்கா அழுதாலும் நாம் கண்ணீர் சிந்த வேண்டும். சிரிச்சாலும் நாம் தான் கண்ணீர் சிந்த வேண்டும் என்பது போல் தான். இதற்கு டாலர் ஏன் உலக பொது நாணயமானது? என்ற கட்டுரையைப் படியுங்கள். புரிவதற்கு எளிதாக இருக்கும்.

மூன்றாவது,

இடைத்தேர்தலில் பிஜேபி தோற்றது. இந்த இடைத்தேர்தல்கள் முடிவுகளால் மத்தியில் இருக்கும் ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் பிஜேபி 'கட்சி வளர்ச்சி' என்று இனி பார்க்க முற்படுவார்கள். முக்கிய பிரச்சினையான விலைவாசியை குறைக்க முற்படுவார்கள். அவ்வாறு செய்யும் போது சில சீர்த்திருத்த நடவடிக்கைகளின் வேகத்தைக் குறைக்கும் வாய்ப்பு உள்ளது. இது பங்குச்சந்தையை பாதிக்கலாம்.

உதாரணத்திற்கு ரகுராம் ராஜன் அவர்களின் அண்மை கருத்தான டீசல் மானியத்தைக் குறைக்க வேண்டும் என்பது ஏற்கப்பட வாய்ப்பே இல்லை. அந்த கருத்தை ஏற்றால் எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம். ஆனால் விலைவாசி கூடி விடும். இந்த சூழ்நிலையில் ஏற்காமல் இருப்பதையே விரும்புவார்கள்.

மேலுள்ள காரணங்களைத் தெளிவாக சொல்வதற்காக கொஞ்சம் அதிகம் விளக்கம் கொடுத்து இருந்தோம். அதனால் கொஞ்சம் எதிர்மறையாக தோற்றமளிக்கலாம்.

இந்த எதிர்மறை காரனங்களை விட நேர்மறையான விஷயங்கள் மிகவும் பலமாக உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்க.

பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளது, நிதிப் பற்றாக்குறை குறைந்துள்ளது, ஆட்டோ நிறுவனங்கள் வளர்ச்சிப் பாதையில் செல்ல ஆரம்பித்துள்ளது என்று நேர்மறையான பல காரணங்களையும் இதனுடன் சேர்த்து எடை போட வேண்டியுள்ளது.

கட்டுரையின் இறுதியாக வரும் நாட்களில் சரியும் போது அதனை வாங்கும் வாய்ப்புகளாக பயன்படுத்திக் கொள்வதே நல்ல திட்டமிடுதலாக இருக்கும் என்று கூறி முடித்துக் கொள்கிறேன். சந்தையின் அடித்தளத்தை 26,000 என்ற புள்ளியில் வைத்து உங்கள் முதலீட்டைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்!

கட்டண சேவைக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்:

  1. பங்கு சந்தை பற்றி தெரியாதவர்களுக்கும் புரியும் படி எளிமையாக எழுதிவருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் ஊக்கமளிக்கும் கருத்துகளுக்கு நன்றி நண்பரே!

      நீக்கு