ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

மிதமிஞ்சிய பணத்தை வைத்துக் கொண்டு தள்ளாடும் இன்போசிஸ்

"ஒரு மனிதன் தனது வாரிசை உருவாக்கும் போது பயனற்றவனாகி விடுகிறான்" என்று ஒரு புத்தகத்தில் படித்த நியாபகம். ஆமாம். அவனை சார்ந்திருக்கும் தன்மை அதன் பிறகு உலகத்திற்கு குறைந்து விடுகிறது.


இது தனி மனிதனுக்கு மட்டுமல்லாது கார்பரேட் நிறுவனங்களுக்கும் சாலப்பொருந்தும் என்று சொல்லலாம். இதனை தலைமுறை இல்லாமல் தவிக்கும் இன்போசிஸ் என்ற தலைப்பில் முன்பு கட்டுரையாக எழுதி இருந்தோம். ஒரு புதிய தலைமுறையை கண்டுபிடிக்காமல் போனது தான் இன்போசிஸ் நிறுவனத்தின் முக்கிய பிரச்சினை என்று சொல்லி இருந்தோம்.

என்ன பண்றது?


அதே இன்போசிஸ் ஒரு வழியில் மட்டும் தப்பியது. அதாவது 30,000 கோடி ரூபாய் அளவு பணத்தை இருப்புத் தொகையாக வைத்து இருந்தார்கள். இந்த தொகையை மட்டும் வைத்துக் கொண்டு 18 பெரிய போயிங் விமானங்களை வாங்கலாமாம்.

அதனால் லாபம் குறைந்த போதும் எளிதாக சந்தையில் நிற்க முடிகிறது. ஒரு வேளை கடனில் இருந்திருந்தால் தப்புவது கஷ்டம் என்று முதலீட்டாளர்கள் நினைத்து பங்கு விலையை அகல பாதாளத்திற்கு தள்ளி விட்டிருப்பார்கள்.

ஆனால் தற்போது இந்த பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று முடியாமல் இன்போசிஸ் தவித்து விடுகிறது. ஏனென்றால், ஆளாளுக்கு ஒரு ஐடியா கொடுத்து நிறுவனத்தை குழப்பி வருகிறார்கள்.

பாலகிருஷ்ணன் போன்ற பழைய நிர்வாகிகள் வெளியில் இருக்கும் பங்குகளை வாங்கி நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அதிக பங்குகளை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.

முதலீடு செய்தவர்கள் டிவிடென்ட்டாக பணத்தைக் கொடுங்கள் என்று கேட்கிறார்கள். இப்படிக்கும் கடந்த வருடம் ஒரு பங்கிற்கு முகப்பு விலையில் 800% அளவு டிவிடென்ட் கொடுத்தாகி விட்டது அதன் பிறகும் பணம் அங்கு அமுத சுரபியாகவே உள்ளது.

பொதுவாக நம்மிடம் இந்த அளவு பணம் இருந்தால் பிக்ஸ்ட் டெபாசிட்டில் போட்டு விட்டு 8% வட்டியை வாங்கி விட்டு ஜாலியாக இருப்போம்.

ஆனால் கார்பரேட் உலகில் அப்படி இல்லை. கண்டிப்பாக சராசரி துறை வளர்ச்சியை விட அதிகமாக வளர்ச்சி கொடுத்து ஆக வேண்டும். அதாவது 20% அளவாவது லாப வளர்ச்சி இருந்தால் தான் நல்ல நிறுவனமாக கருதப்படும். இல்லாவிட்டால் பீல்டில் நிலைத்து இருப்பது கஷ்டம்.அதனால் புதிய தலைமை நிர்வாகியாக வந்து இருக்கும் விஷால் சிக்கா இந்த பணத்தை நிறுவனத்தை விரிவாக்குவதற்கு பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார். அதாவது ARTIFICIAL INTELLIGENCE போன்ற துறைகளில் முதலீடு செய்து வியாபரத்தை விரிவாக்க வேண்டும் என்று நினைக்கிறார். நிறுவன பணியாளர்களுக்கு தேவையான அளவு பயிற்சி கொடுக்க செலவழிக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்.

அதே போல், ஐரோப்பாவில் பல மென்பொருள் நிறுவனங்கள் நஷ்டத்தில் அல்லது கடனில் உழன்று வருகின்றன. அந்த நிறுவனங்களை வாங்கவும் சிக்கா முனைப்பு காட்டுகிறார்.

ஆனால் பாதுகாப்பாக இருந்து பழக்கப்பட்ட பழைய நிர்வாகிகளிடம் இருந்து இதற்கு எதிர்ப்பு வருகிறது.

இருந்தாலும் தொழில் என்று பார்த்தால் சிக்காவின் அணுகுமுறை சரியானதே. இது தொடர்பாக சிக்காவுக்கு முழு சுதந்திரம் கிடைக்கும் சமயத்தில் இன்போசிஸ் மீண்டும் வளர்ச்சியில் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி சென்றால் தான் கடினமான காலக்கட்டத்தில் இருக்கும் இந்திய ஐடி துறைக்கும் நல்லது.

ஆனால் சுதந்திரம் கிடைக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது.


English Summary:
Indian IT company Infosys confuses with lots of capital money. Investors are pushing for giving dividends or buy back stocks. But CEO is approaching for expanding business.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக