புதன், 29 அக்டோபர், 2014

வேலை நிறுவனங்களில் கிடைக்கும் பங்குகளை என்ன செய்வது? (ப.ஆ - 32)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .

இந்த வாரத்தில் நாம் பணிபுரியும் நிறுவனமான Samsung SDS நாளை மறுநாள் கொரிய பங்குச்சந்தையில் IPOவாக வருகிறது.

எமது நிறுவனம் பட்டியலிடப்படும் பங்குகளில் 20% பகுதியினை பணியாளர்களுக்கு ஒதுக்கி உள்ளது.  தற்போது தான் எமக்கு முதல் முறையாக ஒரு ஐபிஒ பங்கு ஒதுக்கீடு கிடைக்கப்பெறுகிறது.  இது வரை நாம் பல இந்திய ஐபிஒக்களில் விண்ணப்பித்த பிறகும் அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தால் பங்கு கிடைத்தது இல்லை. அதனால் கொஞ்சம் சந்தோசம் தான்.

Employee Stock Option Purchase


பட்டியலில்லாத வெளிச்சந்தையில் 350 டாலர் அளவு வர்த்தகமாகிக் கொண்டிருக்கும் பங்கை பணியாளர்களுக்கு 190 டாலரில் கொடுக்க முனைந்துள்ளார்கள். மதிப்பீடல் அடிப்படையில் கணக்கிட்ட பிறகு 350 டாலர் கொஞ்சம் அதிகமாக தெரிந்தாலும் 250 வரையாவது செல்லும் என்று தெரிகிறது.

இவ்வாறு கிடைக்கும் வாய்ப்புகளை நண்பர்களும் தவற விட வேண்டாம் என்பதற்காக "பணியாளர் பங்கு" குறித்த தகவல்களை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதுகிறோம்.

இந்தியாவிலும் இந்த மாதிரியான பணியாளர்  பங்குகள் மலிவான விலைகளில் கொடுக்கப் படுகின்றன. நிறுவனத்துடன் இணையும் போது இந்த பங்குகள் கொடுக்கப்படுகின்றன. சில சமயங்களில் நல்ல செயல்திறனுக்காக போனஸாகவும் கொடுக்கப்படுகின்றன.

இவ்வாறு பெறப்படும் பங்குகளுக்கு "Vest Period" என்று ஒன்று உள்ளது. அதாவது சில ஆண்டுகள் இந்த பங்குகளை நாம் விற்க முடியாது. பொதுவாக மூன்று ஆண்டுகள் என்பது இந்தியாவில் கருதப்படுகிறது. மற்ற நாடுகளில் ஒரு ஆண்டு முடிந்த பிறகும் விற்க முடிகிறது.

சில நிறுவனங்களில் மீண்டும் பங்குகளை அந்த நிறுவனத்திற்கு தான் விற்க வேண்டும் என்ற நிபந்தனைகளும் இருக்கும். விற்கும் தேதியில் சந்தை விலையில் விற்றுக் கொள்ளலாம்.

பணியாளர்களைப் பொறுத்தவரை இது ஒரு நல்ல சேமிப்பாக கருதப்படுகிறது. வேலை பார்க்கும் நிறுவனத்தின் பங்குகளை வைத்து இருப்பதால் நிறுவனத்தின் ஏற்றங்கள் இறக்கங்கள் பற்றிய புரிந்துணர்வு நன்றாகவே இருக்கும் இதனால் ரிஸ்கும் குறைவாக இருக்கும்.

இந்த பங்குகளை வாங்குவதிலும் கீழுள்ள பல விதமான முறைகள் உள்ளன.

  1. RSU (Restricted Stock Units) :  இந்த முறையில் மூன்று வருடங்களுக்கு பிறகே பங்குகள் நமக்கு சொந்தமாகும். நிறுவனங்கள் பணியாளர் விலகல் சதவீதத்தினைக் குறைப்பதற்கு இந்த முறையை பயன்படுத்துகின்றன.
  2. ESOP (Employee Stock Option Plan): இந்த முறையில் பங்கு வாங்கும் போதே நமக்கு சொந்தமாகி விடும். ஆனால் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு பிறகு மட்டுமே விற்றுக் கொள்ளலாம். அல்லது நிறுவனத்தை விட்டு விலகும் போது  விற்றுக் கொள்ளலாம்.
  3. ESPP (Employee Share Purchase Plan) : இந்த முறையில் ஒவ்வொரு மாதமும் தங்களது சம்பளத்தின் ஒரு பகுதியாகவும் பங்குகளை வாங்கிக் கொள்ளலாம்.

இவ்வாறு பங்குகளில் கிடைக்கப்பெறும் லாபத்திற்கு STCG முறையில் ப்ளாட்டாக 15% லாபம் வரி கட்ட வேண்டி இருக்கும். LTCG முறையில் வரி கட்ட வேண்டிய அவசியமில்லை. இந்த வரிகள் பற்றிய முழு விவரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம். பங்குச்சந்தை லாபத்திற்கு வரி உண்டா? (ப.ஆ - 16)

இவ்வாறு வேலை பார்க்கும் நிறுவனங்களில் பங்குகள் கிடைக்கும் போது முதலீடு செய்வது நம்மை அறியாமலே நீண்ட கால நோக்கில் நல்ல பலனைத் தரும். பங்குகளும் குறைவான விலையில் கிடைக்கும். அதனால் தவற விடாதீர்கள்!

பங்குச்சந்தை ஆரம்பம் தொடரின் தொடர்ச்சியான பகுதிகள்..
English  Summary:
Description about Employee Stock Option Purchase(ESOP). ESOP gives opportunity to purchase their working company shares in the low price.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக