ஞாயிறு, 19 அக்டோபர், 2014

பங்குச்சந்தைக்கு சாதகமாகும் பிஜேபி தேர்தல் வெற்றி

கடந்த ஒரு மாதமாக  பல வித உலகக் காரணிகளின் காரணமாக பங்குச்சந்தை கரடியின் பிடியில் சிக்கி இருந்தது. இதற்கு ஹாங்காங் அரசியல் சிக்கல்கள், ஜப்பான், யூரோ நாடுகளின் பொருளாதார பிரச்சினைகள் போன்றவை கூட்டுக் காரணமாக அமைந்தன.


அதே நேரத்தில் இந்தியாவில் பொருளாதாரம் மோசமான நிலையில் இல்லாவிட்டாலும் நேர்மறையான செய்திகள் எதுவும் இல்லாததால் இந்திய பங்குச்சந்தை எதிர்மறையாகவும் மந்தமாகவும் காணப்பட்டது.

இன்று அந்த நிலையில் சிறிது மாற்றம் இருக்கலாம் என்று தோன்றுகிறது.நேற்று மகாராஷ்டிரா, ஹரியானா போன்ற மாநிலங்களில் மத்திய ஆளும் கட்சியான பிஜேபி வெற்றி பெற்றுள்ளது சாதகமான செய்தியாக கருதப்படுகிறது. இதனால் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை இதே வேகத்தில் அல்லது முன்பை விட அதிகமாக கொண்டு செல்ல பிஜேபி அரசு முற்படலாம்.

ஒரு வேளை தோற்று இருந்தால் பெட்ரோல், டீசல், விலைகளில் எளிதில் மாற்றம் கொண்டு வர மாட்டார்கள். முந்தைய காங்கிரஸ் அரசு வழியில் மக்களுக்கு சலுகை கொடுப்பதற்காக சில திட்டங்களை அறிமுகம் செய்யம் போது தேவையில்லாத பொருளாதார சுமை ஏற்படும். இந்த சூழ்நிலை தவிர்க்கப்பட்டுள்ளது என்பதே சந்தையைப் பொறுத்த வரை சாதகமான விஷயம்.

வெளிச்சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக மலிவாக இருப்பதும், அதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை நேற்று குறைக்கப்பட்டுள்ளதும் மற்ற சாதகமான விஷயங்கள்.

கச்சா எண்ணெய் விலை குறைவு காரணமாக இறக்குமதி பற்றாக்குறை குறையும் வேளையில் உள்நாட்டில் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதால் பண வீக்கமும் குறைய வாய்ப்புள்ளது. இதனால் ஆயில் நிறுவனங்களுக்கு நல்ல நேரம் இது..இன்று அதிக அளவில் கூடுவதற்கு வாய்ப்புள்ளது.

கடந்த வெள்ளியன்று வெளியான டிசிஎஸ், எச்சிஎல் போன்ற நிறுவனங்களின் நிதி அறிக்கைகள் சந்தை எதிர்பார்ப்பை அவ்வளவு பூர்த்தி செய்யாததால் நன்கு வீழ்ச்சி அடைந்தன. ஆனாலும் மோசமான நிதி அறிக்கை என்று சொல்ல முடியவில்லை. இந்த வீழ்ச்சி என்பதை அதிகபட்ச கரெக்சன் என்றே கருதிக் கொள்ளலாம். இதனால் ஐடி பங்குகள் மலிவாக கிடைத்தால் வாங்கி போடுவது பயனைத் தரலாம்.

இது வரை வங்கி பங்குகளின் நிதி அறிக்கைகள நல்லதாக வந்திருப்பது மகிழ்ச்சியான நிகழ்வு. இப்படி உலகெங்கும் மந்தமான சூழ்நிலை இருக்கும் வேளையில் இந்திய சூழ்நிலை பரவாயில்லை.

இன்னும் உலக காரணிகளில் முன்னேற்றம் இருப்பதாக தெரியவில்லை. அதனால் மேலும் சிறிது கரெக்சன் இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்திய காரணிகள் வலுவாக இருக்கும் சமயத்தில் அந்த வீழ்ச்சிகளை தாங்கி பிடிக்கலாம்.

நல்ல விலையில் நல்ல பங்குகள் கிடைத்தால் வாங்கி போடலாம்! அதே சமயத்தில் ஜெர்மனி, ஜப்பான், சீனா போன்ற நாடுகளின் ஏற்றுமதிகளை சார்ந்து இருக்கும் நிறுவனங்களை தவிர்க்கலாம்!

தொடர்புடைய பதிவுகள்:« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக