செவ்வாய், 14 அக்டோபர், 2014

கடினமான காலக்கட்டத்தில் DLF நிறுவனம்

நேற்று DLF நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட மூன்று வருடங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று மட்டும் DLF நிறுவன பங்குகள் 28% சரிவை சந்தித்தன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல வித காரணங்களால் 170ல் வர்த்தகமாகிக் கொண்டிருந்த பங்கு தற்போது 100ல் வந்து நிற்கிறது.


DLF ஒன்றும் சிறிய நிறுவனம் அல்ல. ஒரு பிரபலமான, பெரிய கட்டுமான நிறுவனம். அங்கேயே மோசடிகள் நடைபெறும் சூழலில் முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.

இந்திய பொருளாதார வளர்ச்சி என்பது நேர்மையுடன் சேர்ந்து வளர்வதே நாட்டிற்கு நல்லது.கடந்த இரண்டு வாரங்களில் அடுத்தடுத்து பல பிரச்சினைகளில் DLF நிறுவனம் சிக்கியுள்ளது நிறுவனத்தின் எதிர்காலத்தை கேள்விக்குரியதாக்கி உள்ளது.

கடந்த வாரத்தில் ஹரியானா அரசு முறைகேடாக லஞ்சம் கொடுத்து நிலங்களை பெற்றதாக கூறி DLF ஒப்பந்தங்களை ரத்து செய்தது. இது போக உச்ச நீதி மன்றமும் 600 கோடி அபராதம் விதித்ததும் பெரும் பின்னடைவாக போனது. இதற்கு முன்னரே பெங்களூரிலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

தற்போது DLF நிறுவனம் IPO வெளியீட்டின் போது தமது ;பல கிளை நிறுவனங்களை காட்டிக் கொள்ளாமல் மறைத்து கொண்டது என்பதும், அது போக ரியல் எஸ்டேட் நிலங்களை வாங்கும் போது சில பினாமி பெயரில் வாங்கியதாகவும் செபி குற்றம் சாட்டியுள்ளது. இதனால் நிறுவனமும், அதன் நிறுவனர்களும் இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட மூன்று வருடங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய தடைகள் அரசு நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகள். ஆனால் கடந்த காலாண்டு வரை நிறுவனத்தின் நிதி அறிக்கைகள் அவ்வளவு மோசமாக இல்லை என்பதையும் கவனிக்க. மதிப்பீடல் அடிப்படையில் பங்கு மிகவும் மலிவாக தற்போது கிடைக்கிறது.

ஆனால் இந்த நடவடிக்கைகள் நிறுவனத்தின் எதிர்கால ப்ரோஜெக்ட்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம்.

எப்படி என்றால்,

இந்த தடைகள் காரணமாக DLF நிறுவனம் மேலும் நிதியை பங்குகள் மூலம் திரட்ட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மற்ற நிதி ஆதாரங்களான வங்கி கடன்களையே சார்ந்து இருக்க வேண்டியுள்ளது.

ஆனால் இதே நடவடிக்கைகள் மூலம் DLF நிறுவனத்தின் தரத்தை கிரெடிட் நிறுவனங்கள் குறைக்க முயலும். அப்பொழுது DLF நிறுவனம் கடன் பெறுவது கடினம் ஆகும். அப்படியே கடன் கிடைத்தாலும் அதிக வட்டி கொடுக்க வேண்டி வரும். அதிக வட்டியை கொடுக்கும் போது லாப விகிதம் கணிசமாக குறையும்.

இது ஏற்கனவே 15,000 கோடியை கடனாக வைத்துள்ள DLF நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தி புதிய ப்ராஜெக்ட்களை நடத்துவதற்கு சிரமத்தை கொடுக்கும். அதனால் பிளாட் வாங்கும் போது இந்த குறிப்பினை நினைவு கொள்க..

ஆக, அடுத்த மூன்று ஆண்டுகள் DLF நிறுவனத்திற்கு மிகவும் கடின காலமே!

English Summary:
DLF in tough time due to SEBI Ban..

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக