வியாழன், 30 அக்டோபர், 2014

உண்மையான காரணத்தில் உயர்ந்து காணப்படும் சந்தை..

கடந்த ஒரு ஆண்டுகளாக இந்திய பங்குச்சந்தையைப் பார்த்தால் 20,000 புள்ளிகளில் இருந்து 27,000 வரை உயர்ந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு முறை உயர்விற்கும் மோடி என்ற பெயர் ஒரு முக்கிய காரணமாக இருக்கும். அதனால் ஒவ்வொரு முறை உயர்வின் போதும் ஒரு பயம் இருக்கும்.


வலுவான காரணங்கள் இல்லாமல் மோடி 'இருந்தால்', 'எழுந்து நின்றால்' என்று எதற்கெடுத்தாலும் சந்தை ஒரு மாற்றத்தைக் கண்டது தான் அந்த பயத்திற்கு காரணம்.

முதல் முறையாக தற்போது தான் சந்தை தனது சொந்த பலத்தில் மேல் வந்துள்ளது என்று கருதுகிறேன். கடந்த ஒரு மாதமாக ஒவ்வொரு நிறுவனங்களின் நிதி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 

வங்கி, ஆட்டோ துறை சார்ந்த பங்குகள் தான் இந்த காலாண்டில் "மேன் ஒப் தி சீரியஸ்" விருதை பெறுகின்றன. அந்த அளவிற்கு சிறு, பெரு நிறுவனங்கள் என்று வேறுபாடு இல்லாமல் நல்ல நிதி அறிக்கைகளைக் கொடுத்துள்ளன. 

கடந்த இரண்டு ஆண்டிற்கும் மேல் அடி பட்டுக் கிடந்த பங்குகள் மேல் வந்துள்ளது ஒரு நல்ல அறிகுறி என்றே தெரிகிறது. மக்கள் செலவு பண்ண ஆரம்பித்து விட்டார்கள் போலே தெரிகிறது.

மருந்து, ஐடி போன்ற துறைகளில் உள்ள நிறுவனங்கள் சிறிது சந்தை எதிர்பார்ப்பிற்கு கீழ் வந்துள்ளன. ஆனாலும் மோசமில்லாத நிதி அறிக்கைகள் என்றே கருதலாம். 

சந்தையைப் பொறுத்த மட்டில் நிதி அறிக்கை கொஞ்சம் சறுக்கினாலும் பங்கு பல மடங்கு சரிந்து விடுகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி தான் நாம் முஹுரத் வர்த்தக தினத்தில் நல்ல அடி சறுக்கிய HCL பங்கை வாங்கி போடுங்கள் என்று சொல்லி இருந்தோம். இரண்டு வாரத்தில் 10% கூடி மீண்டும் அதே விலைக்கு வந்து விட்டது. பயன்படுத்தி இருப்பீர்கள் என்று நம்புகிறோம்!

அதனால் நிதி அறிக்கைகளை படிக்கும் போது எந்த காரணங்களால் லாபம் குறைந்துள்ளது என்று அறிய முற்படுவது அதிக பலனைத் தரும். சில சமயங்களில் வருமானம் கூடி இருக்கும். ஆனால் அதிக செலவு காரணமாக லாபம் குறைந்து இருக்கும்  இதற்காக நிறுவனம் நன்றாக செல்லவில்லை என்று கருத முடியாது.

எதற்கு செலவு செய்துள்ளார்கள் என்று பார்க்கும் வேண்டும். உபயோகமாக வியாபரத்தை விரிவாக்க செலவு செய்து இருந்தால் கண்டிப்பாக வரும் காலங்களில் லாபம் கணிசமாக கூடி விடும்.

இது போக, தற்போது நிலக்கரி, மின் துறையில் தனியார் நிறுவனங்களை பற்றி சொல்ல எதுவுமில்லை. நிலக்கரி சுரங்க லைசென்ஸ் விவரங்கள் கிடைத்த பின்னரே அந்த பங்குகளை உற்றுப் பார்க்கலாம். அது வரை அரசு சார்ந்த நிலக்கரி, பவர் நிறுவனங்களில் பயணம் செய்வது தான் பாதுகாப்பானதாக இருக்கும்.

தற்போதைக்கு சந்தை கொஞ்சம் அதிக தூரம் சென்று விட்டதால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கீழ்நோக்கி திருத்தங்கள் இருக்கலாம் என்று தோன்றுகிறது. 26,500 புள்ளிகளை அடிப்படையாக வைத்து உங்கள் முதலீட்டை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்!

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு 20% CAGR வரை வளர்ச்சி இருக்கலாம் என்று பல பெரிய நிதி நிறுவனங்கள் நம்புகின்றன. அதனால் நமது முதலீடும் ஐந்து வருடங்களில் இரண்டு மடங்கு வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பங்கு முதலீட்டை தாரளமாக தொடரலாம்!

எமது அடுத்த போர்ட்போலியோ நவம்பர் 15 அன்று வெளிவரும் என்பதையும் இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்! 

நாளை மறுநாள் அறிவிப்பு பகுதியில் இது வரை போர்ட்போலியோக்களில் பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் எந்த நிலையை அடைந்துள்ளன என்று ஆராய்ந்து நமது கருத்துக்களை பகிர்கிறோம்.

English Summary:
Sensex gives hope of reaching new high.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்: