புதன், 15 அக்டோபர், 2014

உலகக் காரணிகளால் மந்தமாக இயங்கும் இந்திய சந்தை

மோடி பதவியேற்று கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகியுள்ளதால் அவர் மேல் இருத்த ஒரு அதிக பட்ச எதிர்பார்ப்பு தற்போது வழக்கமான நிலைக்கு வந்துள்ளது. இதனால் ஒரே வேகத்தில் ஓடிக் கொண்டிருந்த சந்தை தற்போது நிதானமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.
நம்மைப் போலத் தான் பலர் சந்தையில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்று குழப்பமாக இருப்பவர்கள்,  இன்னும் நிலைமையை பார்த்து முதலீடு செய்யலாம் என்று காத்து இருக்க தொடங்கி விட்டனர் போல...இதனால் சந்தையும் மந்த கதியில் உள்ளது.

இந்த குழப்பத்திற்கு முக்கியக் காரணமாக கருதப்படுவது உலக நாடுகளில் இருந்து வரும் சில எதிர்மறை செய்திகளே.

அமெரிக்காவை பொறுத்த வரை நிலைமை அவ்வளவு மோசமாகவில்லை. வேலைவாய்ப்பு, உற்பத்தி, டாலர் மதிப்பு போன்றவை ஓரளவு முன்னேற்றத்திலே செல்கிறது. இதனால் அங்கு வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுவது ஓரளவு உறுதியாகி விட்டது.

ஆனால் ஐரோப்பாவின் நிலைமை தான் கொஞ்சம் கவலைக்கிடமாக உள்ளது. யூரோ நாடுகளில் பெரிய பொருளாதார நாடாக சொல்லப்படும் ஜெர்மனியில் வளர்ச்சி விகிதம் எதிர்பார்தததையும் விட கணிசமாக குறைந்து ஒரு சதவீத வளர்ச்சியில் சென்று உள்ளது. மற்ற நாடுகளிலும் இத்தகைய பாதிப்பு உள்ளது. இதனால் யூரோவின் மதிப்பு வேகமாக வீழ்ந்து வருகிறது.

அடுத்து ஆசியாவின் முக்கிய பொருளாதார கேந்திரமான ஜப்பானிலும் வளர்ச்சி குறைய ஆரம்பித்துள்ளது. அதே போல் சீனாவிலும் ஜிடிபி வளர்ச்சி 7% க்கும் கீழே செல்லும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது இருபது ஆண்டுகளில் இல்லாத அளவு வளர்ச்சி குறைவு என்றும் சொல்கிறார்கள். ஹாங்காங் பிரச்சினையாலும் அரசியல், பொருளாதாரம் என்று இரண்டிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்த செய்திகள் தான் இந்திய பங்குச்சந்தையை எந்த திசையிலும் செல்ல விடாமால் பிளாட்டாகவே வைத்துள்ளன.

ஆனாலும், நிதி நிலை முடிவுகள் வெளிவரும் பங்குகளில் மாற்றங்கள் இருப்பதையும் கவனிக்க. நல்ல நிதி அறிக்கைகள் கொடுத்த IndusBank, Infosys, DB Corp போன்றவை நேர்மறை திசையில் செல்வதையும் என்பதைக் கவனிக்க. அதனால் காலாண்டு நிதி அறிக்கைகளில் அதிகம் கவனம் செலுத்துவது நல்ல பலன் தரும்.

அடுத்து, இந்திய சந்தையில் பணவீக்கம் கட்டுக்குள் வந்துள்ளது ஒரு மகிழ்ச்சியான விடயம். இவ்வளவிற்கும் டீஸல் விலை குறைக்கப்படவில்லை என்பதையும் கவனிக்க. டீஸல் விலை குறைக்கப்பட்டால் இன்னும் கீழ் செல்லலாம். நல்ல அறிகுறி. இன்னும் தொழில் வளர்ச்சிக்கான தரவுகள் நல்ல நிலையிலே வந்துள்ளன.

கடந்த மாத வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது ஒரு எதிர்மறையான செய்தி. கச்சா எண்ணேய் தவிர நிலக்கரியும், தங்கமும் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது இதற்கு காரணமாக அமைந்தது. நிலக்கரி ஊழல் தீர்ப்பின் தாக்கம் தற்போது எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. பரபரப்பாக உள்ளே வந்துக் கொண்டிருந்த அந்நிய முதலீடு தற்போது சுருங்கியுள்ளது. இருப்பது வெளியே போகாமல் இருந்தாலே தர்போதைக்கு நல்லது தான்.

ஐடி நிறுவனங்களைப் பொறுத்த வரை நிதி முடிவுகள் நன்றாகவே வந்துள்ளன. டாலர் வலுவாவதும் சாதகமாக உள்ளது. ஆனால் யூரோ சந்தையின் மந்தம் எதிர்மறையாக உள்ளது. இது மருந்து நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

ஆக, நேர்மறையும் எதிர்மறையும் கலந்து இருக்கும் தற்போதைய சந்தையில் நல்ல நிறுவனங்களின் பங்குகளை நிதி முடிவுகள் வெள்வந்த பிறகு ஆராய்ந்து முதலீடு செய்வது தான் சரியாக இருக்கும். பொதுக் காரனிகளுக்கேற்ப முதலீடு செய்யும் தருணம் இதுவல்ல!

தொடர்புடைய பதிவு:« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக