திங்கள், 13 அக்டோபர், 2014

இன்ப அதிர்ச்சியில் இன்போசிஸ்

நேற்று உலக சந்தைகள் கடுமையான வீழ்ச்சியில் இருக்க, இந்திய சந்தை மட்டும் மென்பொருள் மற்றும் மிட்கேப் பங்குகளின் தயவால் ஓரளவு தப்பித்தது.


இன்போசிஸ் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்ததை விட நன்றாக அமைந்தது மென்பொருள் பங்குகளுக்கு சாதகமாக அமைந்தது. அதே போல் அதிகரித்து வரும் டாலர் மதிப்பும் ஐடி பங்குகளின் தேவையை கணிசமாக கூட்டியது. இதனால் இன்போசிஸ் மட்டுமல்லாமல் எச்சிஎல், டெக் மகிந்திரா போன்ற பங்குகளும் நல்ல உயர்வை சந்தித்தன.



ஒரு மாதத்திற்கு முன் எழுதிய பதிவில் இன்போசிஸ் சிஎஓ சிக்காவின் நடவடிக்கைகள் பற்றி எழுதி இருந்தோம். அதனால் மீண்டும் இன்போசிஸ் நிறுவனம் நல்ல நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது என்றும் கூறி இருந்தோம்.  நம்பிக்கை தரும் இன்போசிஸ் சிக்காவின் முயற்சிகள் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

தற்போதைய நிதி முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்பை மீறி அதிக வருமானத்தையும், லாபத்தையும் பதிவு செய்துள்ளது. லாப விகிதம் (Profit Margin) கிட்டத்தட்ட ஒரு சதவீதம் அதிகரித்து உள்ளது என்பது ஒரு முக்கிய தகவல். இது நீண்ட கால நோக்கில் சாதகமான விசயமும் கூட.

இந்த நிதி முடிவுகள் சிக்காவின் நடவடிக்கைகளால் வந்ததாக பேசப்பட்டாலும், சிக்காவின் நடவடிக்கைகள் பலன் கொடுக்க குறைந்தது ஆறு மாதமாக தேவைப்படும் என்பது எமது கருத்து. அதனால் வரும் காலாண்டுகளில் உண்மையான நிலை தெரிய வரலாம்.

இருந்தாலும் கடந்த காலாண்டில் அவரது முயற்சியாலும் அவர் மேல் உள்ள நம்பிக்கையாலும் பல பெரிய டீல்கள் இன்போசிஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது நல்ல விஷயம். இந்த புதிய டீல்களின் பலன் வரும் நிதி ஆண்டில் எதிரொலிக்க ஆரம்பிக்கலாம். 

அடுத்து, இன்போசிஸ் நிறுவனம் தனது ஒவ்வொரு பங்கிற்கும் ஒரு புதிய பங்கை போனசாக வழங்கியுள்ளது. இது Liquidity என்பதை அதிகரிக்க உதவும். இதனால் இன்போசிஸ் ஒரு பங்கின் விலை போனஸ் தேதிக்கு பிறகு 40% வரை குறையலாம். இது சிறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஏதுவாக அமையும்.

அடுத்து, இன்போசிஸ் நிறுவனர்கள் அணைவரும் ப்ரொமோட்டர் நிலையில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து இருப்பது சிக்காவிற்கு சாதகமான ஒன்று. இதனால் நிர்வாக முடிவுகளில் மேலும் சுதந்திரமாக முடிவு எடுக்க முடியும். நிறுவனர்களின் இந்த முடிவால் இன்போசிஸ் ஒரு முழுமையான பொது நிறுவனமாக மாறப் போகிறது. (Public Ltd.)

இன்போசிஸ் நிறுவனம் கடந்த ஆண்டில் சில முன்னணி நடுத்தர மென்பொருள் நிறுவனங்களை வாங்கி உள்ளது. சிக்காவும் இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய திசை Innovation, Automation, Artificial Intelligence போன்ற துறைகளை நோக்கி இருப்பதாக கூறி உள்ளார். நிறைய புதிய ஆர்டர்கள் கிடைத்துள்ளன. இந்த காரணிகள் இன்போசிஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும் நிறுவனத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இன்னும் விரிவான தெளிவு தேவைப்படுகிறது. அதே போல் முக்கியமான பணியாளர் விலகல் விகிதம் 20% என்ற நிலையில் உள்ளது. இந்த இரண்டிலும் முன்னேற்றம் ஏற்படும் பட்சத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் தாரளமாக முதலீடு செய்யலாம்.

தொடர்பான கட்டுரைகள்:

English Summary:
Infosys shows positive financial results with new deals in business. The stock in increased more than 5% in Indian share market. The new CEO is trying to expand the business aggressively.

 
« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக