வெள்ளி, 10 அக்டோபர், 2014

ஹாங்காங்கிற்கும் சீனாவிற்கும் என்ன தான் பிரச்சினை?

உலகத்தில் பல சிக்கலான அரசியல் மற்றும் பூகோள பிரச்சினைகள் உள்ளன. அதில் ஒன்று தான் சீனா-ஹாங்காங்கின் "ஒரு நாடு இரு கொள்கை" பிரச்சினை.


கடந்த வாரம் பங்குச்சந்தையில் இந்த பிரச்சினை அப்படியே மெதுவாக உரசி சென்றது. ஆனால் அவ்வளவு தாக்கம் ஏற்படுத்த வில்லை. அதற்கு மேலும் பெரிதாகாது என்ற ஒரு அதீத நம்பிக்கையும் காரணமாக அமைந்தது. ஆனாலும் இது ஒரு நம்பிக்கை தான். இன்னும் பிரச்சினை தீர்ந்த பாடில்லை.

மீண்டும் இந்த பிரச்சினை  வந்தால் பங்குச்சந்தையில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிவதற்கு இந்த பிரச்சினையின் பின்புலத்தை அறிவதும் அவசியமாகிறது. அதனை இந்த கட்டுரையில் பகிர்கிறோம்.



1842ல் பிரிட்டனின் காலனி பிடிக்கும் கொள்கையின் காரணமாக ஹாங்காங் சீனாவிடமிருந்து பிரிட்டிஷ் கைக்கு சென்றது. அந்த சமயத்தில் சீனா ஒன்றும் தற்போது உள்ளது போல் வலுவாக இல்லை. இதனால் பிரிட்டிஷ் அரசு எளிதாக ஹாங்காங்கை 155 வருடத்திற்கு குத்தகையாக பெற்றது.

ஹாங்காங்கின் அமைவிடமும் மற்ற இடங்களுடன் ஏற்படுத்தப்பட்ட கடல் வணிகத்தொடர்புகளும் பிரிட்டன் இவ்வளவு ஆசையை ஹாங்காங் மீது வைப்பதற்கு காரணமாக அமைந்தது. இதனால் ஹாங்காங் முழுமையாக வர்த்தகத் தொடர்புகளுக்காகவே இரண்டு நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

வர்த்தகத்தை அதிகரிக்கும் பொருட்டு மிகக் குறைவான வரி, நிறுவனங்கள் துவங்க எந்த லைசென்சும் பெற வேண்டாம் என்று பல சலுகைகள் அள்ளித்தரப்பட்டன. இதனால் ஹாங்காங் ஆசியாவில் இருக்கும் ஒரு ஐரோப்பிய நாடு போன்றே வளர்ச்சி அடைந்தது.

இந்த 155 வருட குத்தகை 1997ல் முடிவு பெற்றது.  அப்பொழுது ஹாங்காங்கை என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு பெரிய குழப்பம் ஏற்பட்டது. மீண்டும் சீனாவிற்கு கொடுக்க வேண்டும் என்பது தான் ஒப்பந்தம்.

ஆனால் சீனா பின்பற்றுவதோ கம்யூனிச கொள்கையின் படி உள்ள முழுமையான மூடிய பொருளாதாரம். இங்கு வீடு கூட ஒரு தனி மனிதனால் எளிதில் வாங்க முடியாது.

ஆனால் ஹாங்காங்கில் பின்பற்றப்படுவது முழுமையான சுதந்திர திறந்த பொருளாதாரம். அரசே தனியாரால் நடத்தப்படுவது போல் உள்ள அமைப்பு. இப்படி இரு வேறு துருவங்கள் சேர்ந்து வேலை செய்வது என்பது கற்பனையில் கூட நடக்காது.

இதனால் பிரிட்டனும் சீனாவும் ஒரு வித்தியாசமான ஒப்பந்தத்தை செய்து கொண்டன. அதன் படி "ஒரு நாடு, இரு கொள்கை" என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பாதுகாப்பு மற்றும் வெளியுறவு துறைகளை மட்டும் சீனா பார்த்துக் கொள்ளும். மற்ற எந்த உள்நாட்டு பிரச்சினைகளில் சீனா தலையிடாது என்பது தான் அந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். இதனால் ஹாங்காங் முன்பிருந்த சுதந்திர வர்த்தகத்தை பயன்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட்டது.

இன்னும் ஹாங்காங் நாணயம் கூட அவர்களது டாலரிலே உள்ளது. அவர்களது முழு வருமானத்தில் சீனாவிற்கு எந்த பங்கும் கிடையாது என்றதொரு தன்னாட்சியான சூழ்நிலை ஹாங்காங்கிற்கு கிடைத்தது.

ஆனால் இந்த ஒப்பந்தம் ஹாங்காங்கின் அரசியல் சூழலுக்கு ஒரு சரியான தீர்வு கொடுக்காதது தான் ஒரு பிரச்சினையாக மாறிப் போனது.

அதாவது அவர்கள் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரியோ, ஜனாதிபதியோ கிடையாது. ஹாங்காங்கின் தலைவர் நிறுவனத்தில் உள்ளது போல் CEO(Chief Executive Officer) என்றே அழைக்கப்படுகிறார். தொழிலதிபர்கள் அதீக்கத்தில் இவர் தேர்ந்தெடுக்கப்படுவதால் இப்படி பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் தேர்தெடுக்கப்படும் முறை கொஞ்சம் வித்தியாசமானது. நம்ம ஊர் எம்பிக்கள் போல் 60 உறுப்பினர்கள் கொண்ட சபை தான் இந்த சிஎஒவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆனால் இந்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். மீதி இரண்டு பங்கும் தொழிலதிபர்கள் போன்றவர்களைக் கொண்டு நிரப்பப்படும். இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பெரும்பான்மையாக இல்லாததால் மக்களால் எந்த அதிகாரமும் செலுத்த முடியாது.

சீனா இந்த நியமன உறுப்பினர்களை தமக்கு சாதகமாகனவர்களைக் கொண்டு நிரப்பி அதிகாரத்தை கைப்பற்றி விடுகிறது. இது தான் தற்போதைய போராட்டத்திற்கு மூலக்காரணமாக உள்ளது.

2017ல் வரும் தேர்தலில் ஹாங்காங் மக்கள் தங்களுக்கு அதிக அதிகாரம் கொடுக்க வேண்டும் என்று நடத்திய போராட்டம் தான் கடந்த வாரம் சீனாவிற்கு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முழுமையாக நிர்வாக ஸ்தம்பித்தது.


ஹாங்காங்கில் ஏற்படும் பிரச்சினை உலக அளவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் உலகின் முக்கிய வங்கிகள் பல ஹாங்காங்கை தலைமையாக வைத்தே செயல்படுகின்றன.

இது போக சீனாவில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளதால் அவர்களது பெரும்பாலான வெளிநாட்டு முதலீடுகள் ஹாங்காங் வழியாகவே வருகின்றன. இது தடைபடும் பட்சத்தில் சீனாவின் பொருளாதரத்தில் பெரிய தேக்கத்தை ஏற்படுத்தும். சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் அது உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த கட்டாயங்கள் காரணமாக தற்போது சீனா கொஞ்சம் இறங்கி வந்துள்ளது.

சீனாவை பொறுத்தவரை ஹாங்காங் கம்யூனிச நாடாக வேண்டும் என்று அவர்களும் விரும்பவில்லை. ஏனென்றால், அவர்களுக்கும் வெளிநாட்டு முதலீடுகள் வருவதற்கு ஹாங்காங் போன்றதொரு வாய்க்கால் வழி தேவைப்படுகிறது. அதனால் இப்பொழுது உள்ளது போலே இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதிகாரத்தை மட்டும் தாங்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இதனால் மீண்டும் ஒரு டுபாக்கூர் திட்டத்தோடு வந்து உள்ளார்கள். அதன் படி, அணைத்து உறுப்பினர்களையும் மக்களே தேர்ந்தெடுக்கலாம். ஆனால் சீனா சொல்லும் வேட்பாளர்களில் ஒருவரைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒரு ட்விஸ்ட் வைத்து உள்ளார்கள்.

நல்லவர்களை விட்டு விட்டு அயோக்கியர்களில் சிறந்த நல்லவரை தேர்ந்தெடுங்கள் என்பது போல் உள்ள இந்த விதி கேலிக்குரியதாக மாறி உள்ளது. இதனால் மீண்டும் இழுபறி நீடிக்கிறது.

இந்த பிரச்சினையில் தீர்வு கிடைக்காமல் போனால் அது உலக அளவில் பொருளாதாரத்தை பாதிக்கும் காரணிகளுள் ஒன்றாகவும் மாற வாய்ப்பு உள்ளது. இதனால் பங்கு முதலீட்டில் உள்ளவர்களும் கவனம் செலுத்துவது தேவையாக உள்ளது.


English Summary:
Hongkong political tension makes instability in global share markets. The stocks are red in all over the countries.



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

3 கருத்துகள்: