திங்கள், 6 அக்டோபர், 2014

நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்படும் பங்குச்சந்தை...

தசரா விடுமுறைக்கு பின் ஐந்து நாள் அடைக்கப்பட்ட பங்குச்சந்தை இன்று மீண்டும் திறக்கப்படுகிறது..நமது திருப்திக்காக அதிமுகவினர் கலகத்தினால் அடைக்கப்பட்ட பங்குச்சந்தை இன்று மீண்டும் திறக்கப்படுகிறது என்றும் கருதிக் கொள்ளலாம்.


'அம்மா' கைதால் ஏற்பட்ட அனுதாபத்தை அப்படியே எரிச்சலாக மாற்றுவதில் அதிமுகவினருக்கு நிகர் வேறு யாரும் இல்லை. இரண்டு நாள் முன் கேபிள், நேற்று பள்ளி, இன்று கோயம்பேடு மார்க்கெட்..நாளை ?....பேசாம ஒரு பந்த் காலண்டர விநியோகம் செய்தால் சௌகரியமாக இருக்கும்.


நீண்ட நாள்களுக்கு பிறகு பங்குச்சந்தை திறக்கபப்டுவதால் போக்கை கணிப்பது சிரமமாக தான் உள்ளது. ஆறு நாட்களில் நிறைய நிகழ்வுகள் நடந்து இருக்கும். அதனால் ஏதேனும் ஒரு நிகழ்வை அடிப்படையாக வைத்து சந்தையின் போக்கை தீர்மானிக்க முடியாது.

அமெரிக்காவில் டாலர் மதிப்பு கூடி வருகிறது. கடந்த வாரம் அமெரிக்காவில் வெளியான வேலை வாய்ப்பு தொடர்பான் தரவுகளும், வளர்ச்சியும் கிட்டத்தட்ட நான்கு வருடங்களில் இல்லாத அளவு நன்றாக உள்ளது என்பது ஒரு முக்கிய செய்தி. இதனால் ஐடி பங்குகள் இன்று ஏற்றம் காண வாய்ப்பு அதிகம் உள்ளது.

அடுத்து கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்து உள்ளது. டாலர் மதிப்பால் ஏற்பட்ட அந்நிய செலாவணி பற்றாக்குறையை கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி ஓரளவு காப்பாற்ற வாய்ப்புள்ளது. இதனால் எண்ணெய் பங்குகள் நேர்மறையாக இருக்க வாய்ப்பு உள்ளது. அரசின் எரிவாயு விழ உயர்வும், டீசல் விலை உயர்வு அறிவிப்புகள் வந்தால் நீண்ட நாள் சோர்ந்து கிடந்த எண்ணெய் பங்குகளின் தேவை அதிகரிக்கும்.

ஆட்டோ விற்பனை தரவுகள் வந்துள்ளன. டாட்டா மோட்டார் நிறுவனத்தை தவிர மற்ற நிறுவனங்களின் விற்பனை பரவாக இல்லை. அபோல்லோ டயர் நிறுவனத்தின் வெளிநாட்டு முதலீட்டு உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது என்பது பங்கிற்கு சாதகமான விஷயம்.

நிலக்கரி சுரங்கங்களை பொறுத்தவரை அரசு எதோ அவசர சட்டம் இயற்ற முற்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உள்ளன. இதனைப் பொறுத்தே Core Sectors பங்குகள் எதிர்வினை ஆற்றலாம்.

டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் டேட்டா கட்டணத்தை கணிசமாக உயர்த்த உள்ளன. அதனால் டெலிகாம்  பங்குகள் சாதகமாக வர்த்தகம் ஆகலாம். அவர்கள் வற்புறுத்துதல் காரணமாக ஸ்கைப் வாய்ஸ் கால் பேசும் வசதியை நிறுத்த உள்ளது. இதெல்லாம் கொஞ்சம் அநியாயம் தான். கொல்லைப்புறமாக நுழைந்தே வியாபரத்தை பெருக்குவது இந்திய நிறுவனங்கள் கண்டுபிடித்த அருமையான வழி:)

அக்டோபர் 10 முதல் நிறுவனங்களின் நிதி அறிக்கைகள் ஒவ்வொன்றாக வெளிவர உள்ளன. இதனை கூர்ந்து கவனிப்பது அவசியம். மோடி வித்தை எவ்வளவு பலித்து உள்ளது என்பதை கணிக்க இந்த நிதி அறிக்கைகளை ஆரம்பமாக கருதிக் கொள்ளலாம்.

ஆக, இன்று சந்தை ஒவ்வொரு பங்கிற்கு அல்லது அது சார்ந்த துறைக்கு ஏற்றவாறு மாறுவதற்கே வாய்ப்பு அதிகம் உள்ளது.

எமது அடுத்த போர்ட்போலியோ அக்டோபர் 15 அன்று வெளிவருகிறது. நண்பர்கள் விருப்பம் இருந்தால் இந்த இணைப்பில் விவரங்களைப் பார்த்து muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக