செவ்வாய், 16 செப்டம்பர், 2014

ரியல் எஸ்டேட்டில் ஒரு சோகக் கதை

இந்தக் கட்டுரை 'தி இந்து' இதழில் வெளியானது. நம்மைப் போன்ற சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் பயனாக இருக்கும் என்று நம்புகிறோம்.

சென்னைக்கு மிக அருகில்!!

ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பது என் விஷயத்தில் நிரூபணமாகிவிட்டது. நான் ஏமாற்றப்பட்டது வீட்டு மனை வாங்கும் விஷயத்தில்தான். எட்டு வருடங்களுக்கு முன்பு சென்னை வடபழனியிலிருந்த நான், வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுகா, நெமிலிக்கு அடுத்து வேப்பேரி என்ற இடத்தில் மனை வாங்க நேர்ந்தது காலக் கொடுமை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?

ரியல் எஸ்டேட்டைப் பற்றிப் பெரிதாக எதுவும் தெரியாத நிலையில், மென்பொருள் துறை வளர்ச்சி உச்சத்தில் இருந்த காலத்தில் மனையின் விலை ஏறிக்கொண்டிருந்ததாலும், பிற்காலத்தில் மனை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற பயத்தாலும் நெருங்கிய நண்பர் ஒருவர் அந்த இடத்தில் மனை வாங்குகிறார் என்ற காரணத்தாலும் என் கையிலிருந்த சேமிப்பிலும், கொஞ்சம் கடன் வாங்கியும் மேற்படி இடத்தில் மனை வாங்கினேன்.



தனிக் கதை தொடங்குகிறது
முதலில் நண்பர் என்னை அறிமுகப்படுத்தியது அவரது வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு பெண்மணியிடம். அந்தப் பெண்மணி வேறொரு நபரை அறிமுகம் செய்துவைத்தார். அந்த நபர் வரும்போதே தன்னுடன் மேலும் இரண்டு பேரை அழைத்துக் கொண்டு வந்துவிட்டார். இவர்கள் அனைவருமே தரகர்கள். கமிஷனாகக் கிடைப்பதைப் பங்கு போட்டுக்கொள்பவர்கள். ஏமாறுகிறவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பொறுத்து இவர்களது கமிஷன் அளவு வேறுபடும் என்பது அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

நீங்கள் எந்த இடத்தில் நிலமோ, வீடோ, அடுக்குமாடி குடியிருப்போ வாங்குவதானாலும் விற்பதானாலும் அல்லது வாடகைக்குப் பிடிப்பதானாலும் தனியாக ஒரு தரகருக்கு மட்டும் கமிஷன் கொடுத்து நீங்கள் வேலையை முடிக்க முடியாது. இவர்கள் 3, 4 பேர்களாவது இருப்பார்கள். என் வாழ்க்கையில் இதுவரை வாடகைக்கு வீடு பிடித்ததில் மட்டுமே 50 ஆயிரம் ரூபாய் அளவுக்குத் தரகர்களுக்குக் கொடுத்திருக்கிறேன் என்பது தனிக்கதை.

‘தம்பி’யான தரகர் இப்படியாக ஒரு குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமையில் ரியல் எஸ்டேட்காரர்களுடன் நானும் என் நண்பரும் மேலும் சிலரும் மனையைப் பார்வையிடுவதற்காக அரக்கோணம் செல்லத் தயாரானோம். நாங்கள் இருந்த வீட்டைக் கடந்துதான் நெடுஞ்சாலைக்குச் செல்ல வேண்டும் என்பதால் என்னை வீட்டுக்கே வந்து பிக்அப் செய்துகொண்டார்கள். தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், பனப்பாக்கம் கடந்து எங்களது கார் மனை இருக்கும் இடத்திற்குச் சென்றுகொண்டிருந்தது.

இதற்கிடையில் அவர்கள் வழக்கமாக அக்கவுண்ட் வைத்திருக்கும் ஹோட்டலில் மதிய உணவும், மாலையில் தேநீரும் கிடைக்கப் பெற்றது. அதிகபட்சம் ஒன்றரை மணி நேரத்துக்குள்ளாக மனையை அடைந்துவிட்டோம். இத்தனை நெருக்கத்தில் நமது மனை இருக்கிறதே, அடிக்கடி வந்து பார்த்துச் செல்வதற்கும் சுலபமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அரை கிரவுண்ட் மனையை 65,000 ரூபாய்க்கும் மேலும் 5 ஆயிரத்தை பத்திரப்பதிவுக்கும் செலவு செய்தேன். இதுபோக தரகர் கூட்டணிக்கு ஐந்தாயிரம். மொத்தமாக 75 ஆயிரம் ரூபாய் செலவானது.

இடத்தை வாங்குவதற்கு முன்பு அந்தத் தரகர் பெண்மணியும் அதில் எனக்குத் தெரிந்த மற்றொரு தரகரும் என்மீது காட்டிய அன்பையும் பாசத்தையும் உறுதிமொழியாகக் கொடுத்த வார்த்தைகளையும் இன்றளவும் மறக்க முடியாது. அவர்களது வீடுகளிலும் அப்படி ஒரு உபசரிப்பு. அதில் ஒரு தரகர், என்னிடம் “உங்கக் கூடப் பொறந்த தம்பி மாதிரி என்னை நினைச்சுக்குங்க.
அங்க போய், இங்க போய் யார்கிட்டயும் ஏமாந்துடாதீங்க. நான் இருக்கேன் உங்களுக்கு... இன்னும் ரெண்டே வருஷத்துல இதே இடம் 5 லட்சத்துக்குப் போகப் போகுது. இதோ இப்ப நீங்க நிக்கிற இடத்துல இருந்து 4 கிலோ மீட்டர்ல சிறப்புப் பொருளாதார மண்டலம் வரப்போகுது. நம்ம இடத்துல இருந்து 200 மீட்டர் ஒரு அட்டை ஃபேக்டரி வரப்போகுது. இப்ப தவற விட்டுட்டு அப்புறமா வந்து கேட்டீங்கன்னா கிடைக்காது ” என்று இதையே மந்திரம் போல உச்சரித்துக் கொண்டே இருந்தார்.

ஆளில்லாக் காட்டுக்கு...
இவர்கள் செய்த மூளைச் சலவையில் யோசிப்பதற்குள் மனை வாங்கி, பத்திரப்பதிவும் முடிந்து, 15 நாள் இடைவெளியில் பத்திரமும் கைக்கு வந்து சேர்ந்தது. மூன்று மாதம் கழித்து ஒருமுறை மனையை நேரில் சென்று பார்த்துவிடலாமே என்று நானும் என்னோடு நிலம் வாங்கிய நண்பரும் புறப்பட ஆயத்தமானோம். ஒரு நாள் காலை 8.00 மணியளவில் கோயம்பேடு சென்று அங்கிருந்து நெமிலிக்கு நேரடி பஸ் இல்லாததால் காஞ்சிபுரத்திற்கு பஸ் பிடித்து அங்கிருந்து பனப்பாக்கம் என்ற இடத்திற்கு வேறொரு பஸ் மாறி, அங்கிருந்து நெமிலிக்கு ஒரு மினி பஸ் பிடித்துப் போய்ச் சேர்ந்தோம்.

நெமிலியிலிருந்து ஒரு ஷேர் ஆட்டோ பிடித்து வேப்பேரி போய்விடலாம் என்று ஆட்டோவுக்கு விசாரித்தால் அந்த வழியாக ஷேர் ஆட்டோ எந்தக் காலத்திலும் சென்றதில்லை என்ற தகவல் கிடைத்தது. ஏன், டவுன் பஸ்ஸே காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றும் என இரண்டு வேளைதான் இயங்கும் என்றும் சொன்னார்கள். சரி சாதாரண ஆட்டோவில் சென்றால் போய்விடலாம் என்று ஆட்டோவுக்குக் கேட்டால் தனியாகச் சவாரி செய்தால் 150 ரூபாய் ஆகும் என்று கறாராகச் சொல்லிவிட்டார்கள். நாங்கள் சென்னையிலிருந்து நெமிலி வரை வந்து செல்லும் செலவுகூட 100ஐக் கடக்காதபோது நெமிலியில் இருந்து 5 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் வேப்பேரிக்கு 150 ரூபாய் கேட்டது பகீரென்றது. சரி வந்தாகிவிட்டது. செலவைப் பார்க்காமல் இடத்திற்குப் போய்விடலாம் என்று முடிவு செய்து குண்டும் குழியுமான சாலைகளைக் கடந்து எங்கள் மனைக்கு வந்து சேர்ந்தோம்.

நாங்கள் வாங்கிய இடத்தைச் சுற்றியுள்ள தடுப்புக் கற்களுக்கு கையில் கொண்டு சென்ற பெயிண்டை அடிப்பதற்குள் மணி 4ஐக் கடந்திருந்தது. பின்னர் வீடு திரும்புவதற்காக ஆட்டோ பிடிக்கலாம் என்றால் அந்த இடத்திற்கு ஆட்டோக்களே அதிகமாக வராது என்றும் உள்ளூர்க்காரர்கள் சைக்கிளிலோ டவுன் பஸ்ஸிலோதான் நெமிலிக்குச் சென்று வருவார்கள் என்றும் அங்கிருந்த முதியவர் சொன்னார். சரி 5 கிலோ மீட்டர் தூரம் இனி நடக்க வேண்டியதுதான் என்று நடக்க ஆரம்பித்து சிறிது நேரத்தில் அந்தப் பக்கமாகச் சென்றுகொண்டிருந்த ஒரு மாட்டுவண்டியில் லிஃப்ட் கேட்டு ஏறி ஒரு வழியாக நெமிலி வந்து சேர்ந்தோம்.

பின்னர் மறுபடியும் பனப்பாக்கம், காஞ்சிபுரம் கோயம்பேடு என்று சுற்றி வீடு வந்து சேரும்போது இரவு 10.30 மணி ஆகியிருந்தது. மனையைப் பார்வையிடச் சென்றபோதும் பத்திரப்பதிவின்போதும் அதிகபட்சம் 3லிருந்து 4 மணி நேரத்துக்குள்ளாக காரில் சென்று வந்த ஒரு இடத்திற்குப் பேருந்து பிடித்துச் சென்றபோது கிட்டத்தட்ட 14 மணி நேரத்துக்கு மேலானது எங்களுக்கு ஆயாசத்தைத் தந்தது.

சரி ஆனது ஆயிற்று. முதன்முதலாக மனை ஒன்றை வாங்கியாயிற்று. நமக்கென்று ஒரு சொத்து இருக்கிறது, இரண்டு மூன்று வருடங்கள் கழித்து இதை நல்ல விலைக்கு விற்று அருகிலேயே வேறு எங்காவது மனை ஒன்றை வாங்கிக் கொள்ளலாம் என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டேன்.

நானும் நண்பரும் மனையைப் பார்வையிட 6 மாதங்களுக்கு ஒருமுறை, பின்னர் அதுவே வருடத்திற்கு ஒருமுறை என்று போய் வந்து பணிகள் காரணமாக நண்பருக்கும் எனக்கும் நேரம் சரியாக அமையாததால் இப்போது ஒன்றரை வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. இதற்கிடையே அதை விற்பதற்குப் பலரிடமும் சொல்லி வைத்தும் வாங்க ஆளில்லை.

வாங்கும்போது உடனிருந்த நட்புத் தரகர்களின் போன்கள் முதல் இணைப்புக்குப் பிறகு இரண்டாவது காலில் சுவிட்ச் ஆஃப் ஆகிவிடுகின்றன. அதில் ஒரு குடிகாரத் தரகரிடம் எப்போது போன் செய்து விற்றுத் தரச் சொன்னாலும் “செஞ்சுடலாம் சார், வித்துடலாம் சார், பண்ணிடலாம் சார். நீங்க ரெண்டு நாள் கழிச்சு போன் பண்ணுங்க” என்று ஒரே பாட்டையே இன்று வரை சொல்லிக் கொண்டிருக்கிறார். இன்னும் விற்றபாடில்லை.

இதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் நான் வாங்கிய மனையிலிருந்து 15 கிலோ மீட்டர் தள்ளியிருக்கிற அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வெகு அருகில் இப்போதும் 35,000க்கு அரை கிரவுண்ட் மனை கிடைக்கிறது என்பதுதான்.

இப்போது டிவியில் அடிக்கடி வரும் ‘சென்னைக்கு மிக அருகில்’ விளம்பரங்களைப் பார்க்கும்போது ஆளில்லாக் காட்டுக்குள் நான் வாங்கிப் போட்டிருக்கும் வீட்டு மனைதான் என் ஞாபகத்திற்கு வரும்.

நிதிஷ்குமார், 

தொடர்புடைய பதிவு: 


English Summary:
The real estate agents are making difficulties to investor buy a house/land by giving false information in India.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்:

  1. பகிர்வுக்கு மிக்க நன்றி நிதிஷ் குமார். பணம், மண், பொன் வியாபார விடயங்களில் யாரையும் நம்பக்கூடாது என்பது நன்றாகவே புரிந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  2. நான் பெங்களுரிலேயே outskirts-l ஒரு அபார்ட்மெண்ட் வாங்கி ஏமாந்து விட்டேன்.

    பதிலளிநீக்கு