சனி, 8 நவம்பர், 2014

இவங்க வேலை பார்த்தால் அவ்வளவு ஆச்சர்யம்

சில வருடங்களுக்கு முன்னர் படித்த செய்தி நியாபகம் வருகிறது. பெங்களூரில் இருந்து கௌஹாத்திக்கு செல்லும் ரயில் இது வரை ஒரு முறை கூட சரியான சமயத்திற்கு சென்றது கிடையாதாம். அதனால் வரலாற்றில் என்றாவது ஒரு நாள் இந்த ரயில் சரியான நேரத்திற்கு சென்று விட்டால் அதனைப் பொறித்து வைப்பதற்கு நாம் ஒரு கல்வெட்டை தேட வேண்டி வரும்.


இது தான் இந்தியன் ரயில்வேயின் செயல்பாடு. பெரும்பாலான செயல்கள் "வரும், ஆனால் வராது" என்பதைப் போன்றே இருக்கும். இது ரயில்வேக்கு மட்டுமல்லாமல் பல அரசு பொதுத் துறை நிறுவனங்களுக்கு பொருந்தும்.



அப்படிப்பட்ட ஒரு நிறுவனம் தான் கோல் இந்தியா என்ற நிலக்கரி தோண்டி எடுக்கும் மத்திய அரசு நிறுவனம். இது வரை இந்தியாவில் கிட்டத்தட்ட மோனோபோலியாக செயல்பட்டு வந்த நிறுவனம். மோனோபாலி என்றால் திறன்பட்டு சந்தையைப் பிடித்தார்கள் என்று சொல்ல முடியாது. இயற்கை வளங்களை தனியாருக்கு எளிதில் பகிர முடியாத அரசின் கொள்கை கோல் இந்தியாவிற்கு சாதகமாக போனது.

இந்திய தொழில் வளர்ச்சியை முடக்கியதிலும் அந்த நிறுவனத்திற்கு பெரும் பங்கு என்றும் சொல்லலாம். ஏனென்றால், இது வரை திட்டமிட்ட அளவு நிலக்கரியை இவர்கள் வெட்டி எடுத்தாலே ஒரு பெரிய செய்தி தான். நாடு இந்த அளவு மின் தடையை சுமப்பதற்கு ஒரு கோல் இந்தியாவின் மந்தமாக வேலையும் ஒரு முக்கிய காரணம்.

அதனால் தான் கடந்த மாதம் திட்டமிட்டஅளவான 40 மில்லியன் டன் நிலக்கரியை தோண்டி எடுத்தார்கள் என்பது பங்குச்சந்தையில் பெரிய அளவு செய்தியாக இடம் பெற்றது.

இத்தகைய மோசமான நிலைக்கு நவீனத்துவம் பெறாத நிலக்கரியை தோண்டி எடுக்கும் பழைய முறைகளும், வேகமில்லாத நடவடிக்கைகளுமே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

கடந்த மாதத்தில் மழை எதுவும் வரவில்லை என்பது காரணமாக குறிப்பிடப்பட்டாலும் தற்போதைய மத்திய அரசின் சில வேக நடவடிக்கைகளும் ஒரு முக்கிய காரணம். கோல் இந்தியாவின் இந்த முன்னேற்றம் நிலக்கரி மற்றும் மின் துறை பங்குகளுக்கு ஒரு நல்ல நம்பிக்கையைக் கொடுக்கிறது என்றும் சொல்லலாம்.

ஆனாலும் இந்த காலாண்டில் கோல் இந்தியாவின் லாபம் கணிசமாக சரியும் என்று சந்தையில் பல கணிப்புகள் வந்துள்ளன. அதனால் இந்த பங்கிலிருந்து கொஞ்சம் ஒதுங்கி இருப்பது நல்லது.

இவ்வளவு நிலக்கரியை தோண்டி எடுத்த பிறகும் அதனை தேவைப்படும் பகுதிகளுக்கு கொண்டு செல்ல சரக்கு ரயில் வசதி இல்லை என்பதும் இன்னொரு செய்தி. இதனால் வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரி ஒரே இடத்தில முடங்கி கிடைக்கிறது. அடிப்படை கட்டமைப்பில் இந்தியா இன்னும் போக வேண்டிய தூரம் மிக அதிகம் உள்ளது.

இதனைப் பார்க்கையில் அருண் ஜேட்லியின் நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்கும் கொள்கை சரியானதே என்று தோன்றுகிறது.

எமது அடுத்த போர்ட்போலியோ நவம்பர் 15 அன்று வெளிவருகிறது. தேவைப்படும் நண்பர்கள் இந்த இணைப்பை பார்க்க..அல்லது muthaleedu@gmail.com என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

தொர்பான கட்டுரைகள்:


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக