வியாழன், 20 நவம்பர், 2014

தவறான வர்த்தகத்தை தடுக்க உதவும் INSIDER TRADING (ப.ஆ - 33)

இந்த கட்டுரை பங்குச்சந்தை ஆரம்பம் தொடரின் ஒரு பகுதி.

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .

பங்குச்சந்தையில் எந்த பங்குகளை வாங்கலாம் என்பதற்கு ஒரு குறிப்பாக அண்மைய காலங்களில் நடந்து இருக்கும் பங்கு பரிவர்த்தனைகளை பார்ப்பது வழக்கம்.

அதாவது நிறுவனத்தை சார்ந்த ஒருவர் பங்குகளை வாங்குகிறார் என்றால் ஏதோ ஒரு நேர்மறை நிகழ்வையும். பங்குகளை விற்கிறார் என்றால் எதிர்மறை நிகழ்வையும் குறிப்பதாக இருக்கும்.

இதற்கு காரணம் மிக எளிதானதே சொந்த வீட்டில் இருப்பவருக்கு அந்த வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் அத்துப்படியாகத் தான் இருக்கும். அது போல் தான் நிறுவனத்தை நடத்துபவருக்கும் அங்கு எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை.



Insider trading


ஆனால் இந்த நிறுவனர்கள் அடிக்கடி பங்குகளை வாங்கி விற்று சூதாட்டம் போல் நடத்திக் கொண்டு இருந்தால் பங்கு வர்த்தகம் என்பது முழுமையான சூதாட்ட கிளப் போன்று மாறி விடும். மற்ற சிறு முதலீட்டாளர்கள் பணத்தை மறைமுகமாக கொள்ளை அடிப்ப்பதற்கு ஒப்பாக இந்த பங்கு விற்பனைகளைக் குறிப்பிடலாம்.

இதனைத் தவிர்ப்பதற்காக செபி சில விதிமுறைகளைக் கொண்டுள்ளது. இதனை INSIDER TRADING என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்த விதி முறைகளின் படி பார்த்தால் INSIDER TRADING என்பது ஒரு மிகப்பெரிய கிரிமினல் குற்றமாகவே கருதப்படுகிறது. இதற்கு கிடைக்கும் தண்டனை என்பது 10 வருட சிறை தண்டனை வரை உள்ளது. மேலும் 25 கோடி வரை அபாராதமும் விதிக்கப்படும்.

இங்கு 5% க்கும் மேல் பங்குகளை வைத்து இருப்பவர்கள், நிறுவனர்கள், சீனியர் அளவில் இருக்கும் அலுவலர்கள் போன்றவர்கள் INSIDER என்று கருதப்படுபவர். இவர்களின் உடனடி சொந்தக்கார்களும் CONNECTING PERSON என்ற முறையில்  INSIDER என்றே கருதப்படுவர்.

சுருக்கமாக சொன்னால், யாரெல்லாம் ஒரு நிறுவனத்தின் முக்கிய தகவல்களை அறிந்து இருக்கும் வாய்ப்பு இருக்கிறதோ அவர்கள் இந்த பிரிவிற்குள் வந்து விடுவார்கள்.

இவ்வாறு இந்த பிரிவிற்குள் வருபவர்கள் சில குறிப்பிட்ட காலங்களுக்கு பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியாது  இதனை TRADING WINDOW என்ற முறையில் கண்காணிக்கிறார்கள்.

விளக்கமாக பார்த்தால், நிதி நிலை முடிவுகள் வரும் போது, டிவிடென்ட் கொடுக்கப்படும் போது, நிறுவனங்களை இணைக்கும் போது  போன்ற முக்கிய நிகழ்வுகளில் TRADING WINDOW ஒரு  குறிப்பிட்ட காலம் (வழக்கமாக ஒரு வாரம்) வரை மூடப்பட்டு இருக்கும். இந்த காலங்களில் INSIDER என்று சொல்லப்படும் நபர் எந்த பங்கு வர்த்தகத்திலும் ஈடுபடக் கூடாது. இதன் நோக்கம் என்னவென்றால் பங்கு விலைகளில் செயற்கை மாற்றங்களை ஏற்படுத்துவதை தடுப்பதே.

இதனால் TRADING WINDOW மூடப்படுகிறது என்றால் ஏதோ ஒரு அறிவிப்பு வர இருக்கிறது என்றும் சில நாள் முன்பு நாம் யூகித்துக் கொள்ளலாம்.

இந்த விதிகள் முழுமையாக பலனைத் தரும் என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல முடியும். பெரிய அறிவிப்புகள் என்பது வெறும் ஒரு வாரத்தில் மட்டுமே எடுக்கப்படுவதில்லை என்பது ஊரறிந்த உண்மை. அதனால் நிறுவனர் அதற்கு முன்னரே ஓரளவு பங்குகளைப் பற்றி திட்டமிட்டு இருப்பார்.

அதே போல் இப்படியான தகவல்களை நிறுவனமே பாதுகாக்கும் என்பது கிட்டத்தட்ட திருடன் கையில் சாவி கொடுத்தது போல் தான். அது எந்த அளவு மற்றவர்களிடம் பரவாமல் உள்ளது என்பதை கண்காணிப்பது மிகக் கடினமான செயல்.

ஆனால் TRADING WINDOW வசதி மூலம் நீண்ட கால நோக்கில் இல்லாவிட்டாலும் ஓரிரு நாளில் பங்கு விலைகளில் ஏற்படுத்தப்படும் செயற்கையான மாற்றங்களை கட்டுப்படுத்த இந்த விதிகள் பெரிதும் உதவும்.

ஒன்றுமே இல்லாததற்கு ஏதோ ஒன்று உள்ளதே என்று திருப்திப்படும் விடயமாக கருதிக் கொள்ள இந்த விதி முறைகள் உதவும்.

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின்அடுத்த பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .
English Summary:
Insider trading is the price manipulations in stocks by promoters. SEBI exchange has trading window system to avoid prevent insider trading in share market.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக