ஞாயிறு, 2 நவம்பர், 2014

வீட்டு லோன் மூலம் பங்குச்சந்தையில் சரியான நேரத்தில் முதலீடு செய்வது எப்படி?

பங்குச்சந்தையில் LIQUIDITY என்ற ஒரு பிரபலமான வார்த்தை உண்டு. இதனை கையிருப்பு பணம் என்று கருதிக் கொள்ளலாம்.


பங்குச்சந்தையில் சிறு முதலீட்டாளர்கள் முதலில் சந்திக்கும் பிரச்சனை இது தான். அதாவது தேவையான நேரத்தில் அவர்கள் கையில் பணம் இருப்பதில்லை. அவர்கள் பணம் வந்து முதலீடு செய்யும் போது வேளையில் சந்தை உயர்ந்து விடுகிறது. இதனால் அவர்களுக்கு எதிர்பார்ப்பிற்குரிய பலன் கிடைப்பதில்லை. பங்குச்சந்தையை பொறுத்த வரை நேரம் என்பது மிக முக்கிய காரணியாகவே உள்ளது.

பெரிய நிறுவனங்களைப் பொறுத்த வரை இந்த பிரச்சினை வருவதில்லை. தமது மொத்த மதிப்பின் ஒரு பகுதியினை கையிருப்பு பணமாகவே வைத்து இருப்பார்கள். இதனை LIQUIDITY RATIO என்று குறிப்பிடுவர். இதனை வைத்து தங்கள் முதலீட்டை அங்கும் இங்கும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.ஆனால் ஒரு தனி மனிதனாக நமக்கு கையிருப்பு பணம் என்பது பெரும்பாலும் அவசர தேவைக்கு வைத்து இருப்பதே. அதாவது மருத்துவ செலவுகளுக்குத் தான் வைத்து இருப்போம். அதையும் FDயில் இவ்வளவு வருடங்களுக்கு என்று வைத்து இருப்போம். அதனால் பணப்புழக்கம் என்பது குறைவாகவே இருக்கும்.

இந்த பணப்புழக்கத்தை அதிகரிக்க "ஒரே கல்லில் பல மாங்காய்கள்" என்பது போன்ற ஒரு வழிமுறையை இந்தக் கட்டுரையில் பகிர்கிறோம். இது ஒரு தனிப்பட்ட அனுபவமே. ஆனால் நல்ல பலனை நான்கு ஆண்டுகளாக கொடுத்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகள் முன்பு பிளாட் வாங்கியபோது சில நண்பர்கள் SBI Max gain என்ற வங்கி கடனைப் பற்றி எமக்கு தெரிவித்து இருந்தார்கள். ஒரு அரைகுறை அறிவுடனே அந்த திட்டத்திற்கு SBIயில் விண்ணப்பித்து இருந்தோம். ஆனாலும் அரசு வங்கி என்பதால் தேவையற்ற கட்டணங்களைத் தவிர்க்கலாம் என்பதே ஒரு முக்கிய எண்ணமாக இருந்தது.

கடன் கிடைத்த பிறகு சில முறைகளை அங்கும் இங்கும் ஆராய்ந்த பிறகு அதிக பலன்கள் இருப்பதை உணர முடிந்தது.

முதலில் எல்லா வீட்டுக் கடன்கள் போல நமக்கு சொந்த வீடு கிடைத்து விடுகிறது. ஆனால் அதன் பிறகு கிடைக்கும் சில மறைமுக பலன்கள் தான் இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்று சொல்லலாம்.

வங்கிக் கடனின் அசல் பகுதியை தேவைப்படும் போது எந்தக் கட்டணம் இல்லாமல் செலுத்திக் கொள்ளலாம். இந்த செலுத்திய தொகைக்கு வட்டியை நம்மிடம் வசூலிக்க மாட்டார்கள்.. இதனால் மறைமுகமாக பார்த்தால் FDயில் இருக்கும் பணத்தை விட இங்கு வட்டிஅதிகமாக கிடைக்கிறது..

அதே சமயத்தில் தேவைப்படும் போது அந்த பணத்தை எப்பொழுது வேண்டுமானாலும் எடுக்கவும் செய்து கொள்ளலாம். இதனால் அவசர தேவைக்கும் பயன்படுத்த முடிந்தது.

அப்படி அவசர தேவைக்கும் அதிகமான பணத்தை பங்குச்சந்தையில் போர்ட்போலியோவில் உள்ள பங்குகள் எப்பொழுது எல்லாம் குறைகிறதோ உடனடியாக வாங்கி போட முடிந்தது. இதனால் சரியான நேரத்தில் முதலீடு செய்ததன் மூலம் சில சதவீத லாபங்களை அதிகமாக பெற முடிந்தது.

மற்ற வங்கிகளில் குறைந்தது மூன்று மாத EMI தொகை நம்மிடம் இருந்தால் தான் அசலின் ஒரு பகுதியை கட்டுவதற்கு அனுமதிப்பார்கள். ஆனால் இந்த கடன் திட்டத்தில் 500 ரூபாயைக் கூட உங்களால் செலுத்த முடியும் .இதனால் ஒரு சேமிப்பு போலும் செயல்படுகிறது.

இறுதியாக, கடந்த நான்கு ஆண்டுகளாக கையில் காசு இல்லாமல் இருந்தால் இருக்கும் ஒரு படபடப்பும், மன உளைச்சலும் மிகவும் குறைந்ததை உணர முடிந்தது.. ஒரு மணி நேரத்தில் தேவைப்படும் பணம் ஒரு சிறிய ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் கிடைத்து விடும் என்றதொரு நம்பிக்கை இருந்து கொண்டே இருக்கும்.

SBI Max Gain Loan scheme
வட்டி குறையும் ஒரு செயல்முறை விளக்கம் 


அதனால் கூடிய வரைக்கும் இந்த கடனை நீண்ட நாள் வைத்து இருக்கவே விருப்பம் ஏற்படுகிறது. மனதளவில் கடனாளியாக இருந்தாலும் மற்ற முறைகளில் செல்வத்தை நிர்வகிக்க இந்த கடன் பெரிதும் உதவுகிறது.

உதாரணத்திற்கு 25 லட்சம் கடன் வாங்கி விட்டு ஒரு லட்ச ரூபாயை முன்பே எந்த வித கட்டணமின்றி நீங்கள் அடைத்து விடலாம். அந்த ஒரு லட்ச ரூபாய்க்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அதே நேரத்தில் தேவைப்படும் போது அந்த ஒரு லட்ச ரூபாயை எடுத்துக் கொள்ளலாம். புதிய கடன்களுக்கு செல்வதை இந்த முறை பெரிதும் தவிர்க்கும்.

அதனால் வீட்டுக் கடன்களுக்கு செல்லும் போது முடிந்த வரை இந்த கடன் திட்டத்தில் செல்ல விரும்புங்கள். மறைமுக பலன்கள் மிகவும் அதிகமாகவே உள்ளன.

அரசு வங்கியாக இருப்பதால் இந்த கடனை பெறுவதில் கொஞ்சம் சிரமம் இருந்தது. ஆனால் தேவைப்படும் ஆவணங்களை சரியாக வைத்து இருந்தால் லோன் கிடைப்பதில் அவ்வளவு பிரச்சினை இல்லை என்றே கருதுகிறேன்.

English Summary:
Home loan helps to manage equitity investment with more liquidity. SBI Max Gain Loan scheme acts as savings account in which we can deposit and withdraw money at any time. 

தொடர்புடைய பதிவுகள்:

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக