ஞாயிறு, 23 நவம்பர், 2014

GDP என்பதன் விரிவான விளக்கம் (ப.ஆ - 34)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .

கடந்த வாரம் ஒரு கட்டுரையில் பொருளாதார சரிவிற்குள் நுழையும் ஜப்பான் என்ற தலைப்பில் எழுதி இருந்தோம். அதில் GDP தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக எதிர்மறையில் சென்று கொண்டு இருந்தால் பொருளாதாரம் தேக்க நிலைக்கு செல்வதாக கருதலாம் என்று குறிப்பிட்டு இருந்தோம்.


இதே போல் பல விடயங்களில் நாட்டின் சில முக்கிய செயல் திறன்களை மதிப்பிட GDP முக்கிய பங்கு வகிக்கிறது. GDP என்பது அரசியல்வாதிகளாலும், நிதி அமைச்சகத்தாலும் அடிக்கடி உபயோகிக்கப்படும் ஒரு பதம். அதே போல் பங்கு வர்த்தகத்துடனும் நெருங்கிய தொடர்பு உடையது. இதனால் விரிவாக அறிந்து கொள்வது அவசியமானது.

Gross Domestic Product


GDP என்பதன் விரிவாக்கத்தை Gross Domestic Product என்று சொல்கிறார்கள். தமிழில் சொல்வதென்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்று சொல்லலாம்.

ஒரு நாட்டில் வருடத்தில் ஏற்படும் தொழில் வளர்ச்சியைக் குறிப்பிட GDP பயன்படுகிறது. அதாவது அந்த நாட்டில் அந்த வருடத்தில் எவ்வளவு பொருட்கள் உற்பத்தியாகின? என்பதைக் கணக்கிட உதவும் குறியீடு. இதில் பொருள் என்றால் சேவைகளும் உள்ளடங்கும்.

GDPயைக் கணக்கிட பல முறைகள் உள்ளன. இருந்தாலும் கீழ் உள்ள எளிதான முறை பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை மக்கள் செலவு செய்வதை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுகிறது.

GDP = Consumption + Govt. spending + Investment + Net export

தமிழில்,
GDP = மக்களது செலவு + அரசின் செலவுகள் + நாட்டின் முதலீடுகள் + இதர ஏற்றுமதி

Consumption என்பது ஒவ்வொரு மக்களும் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதைக் குறிப்பிடுகிறது. இதில் ஒருவரது செலவு மற்றவருக்கு வரவு. இதனால் நாம் வாழைப்பழம் வாங்க கடைக்கு சென்றால் அதுவும் GDPயில் கணக்கு வைக்கபப்டும். அதே நேரத்தில் அந்த கடைக்காரன் இவ்வாறு சேர்ந்த காசை வைத்து ஒரு டூ வீலரை வாங்கினால் அதுவும் GDPயில் சேர்க்கப்படும். அதாவது பணம் ஒவ்வொருவரிடம் இருந்து கை மாறும் போது GDPயும் மாறும்.

Govt. spending என்பது கட்டமைப்பு மற்றும் திட்டங்களுக்கு அரசு செலவிடும் தொகை. பொருளாதார தேக்க சமயங்களில் இந்த பிரிவு GDPயில் முக்கிய பங்கு வகிக்கும்.

Investment என்பது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட பல முதலீடுகளை சேர்த்து கூட்டபப்டுகிறது.

Net export என்பது மொத்த ஏற்றுமதியை இறக்குமதியிலிருந்து கழித்துக் கிடைக்கும் தொகை. நமக்கு எப்பொழுதுமே இறக்குமதி அதிகமாகவே இருப்பதால் நிகர ஏற்றுமதி எதிர்மறையிலே இருக்கும்.

ஆக, இவ்வளவு தொகையையும் கூட்டிய பிறகு கிடைக்கும் தொகையே GDP. 

ஆனால் கருப்பு பணம், ஹவாலா என்று கணக்கில் வராத தொகை அதிகமாக இருக்கும் போது GDPயில் குறைபாடு இருக்கும். பொதுவாக வளர்ந்த நாடுகளில் இந்த குறைபாடு 10% அளவு இருக்கும். ஆனால் நமது நாட்டில் அதை விட அதிகமாகவே இருக்கலாம்.

ஒவ்வொரு காலான்டிற்கும் GDP கணக்கிடப்படுகிறது. இரண்டு காலாண்டுகள் தொடர்ந்து GDP வளர்ச்சி எதிர்மறையில் சென்றால் நாட்டின் பொருளாதாரம் தேக்கத்தில் உள்ளதாக கருதப்படும். (RECESSION). அதே நேரத்தில் GDP வளர்ச்சி எதிர்மறையில் -10% வரை சென்றால் படு வீழ்ச்சி என்ற அர்த்தத்தில் DEPRESSION என்று அழைக்கப்படுகிறது.

Gross Domestic Product

ஆனாலும் GDP மக்களின் வாழ்வாதாரத்தை சரியாக கணக்கிட உதவும் என்று சொல்ல முடியாது. இதில் கிட்டத்தட்ட 'சராசரி' என்ற முறையில் உள்ள குறைபாடுகள் உள்ளடங்கி வருகின்றன.

அம்பானிக்கு 100 கோடி வருமானம் வந்து, ஒரு ஏழைக்கு 1000 ரூபாய் வந்தால் இரண்டு பேரின் சராசரி வருமானத்தை 50 கோடி என்றே காட்டும். இதனால் தனி மனிதக் குறியீட்டிற்கு பதிலாக நாட்டின் பொருளாதார நிலைமையைக் குறிப்பிடவே இதனை அதிகம் பயன்படுத்தலாம்.

இதில் உள்ள பல குறைபாடுகளை களைந்து GNH, Nominal GDP என்று பல பதங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதனை வரும் கட்டுரைகளில் காணலாம்.

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின்அடுத்த பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .

English Summary:

Brief description about Gross Domestic Product. GDP comprises of Consumption, Govt. spending, Investment and Net export
« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக