திங்கள், 24 நவம்பர், 2014

வளர்ச்சியை மகிழ்ச்சியை வைத்து அளவிடும் பூடான் (ப.ஆ - 35)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .

தற்போது சந்தை அதற்கும் மேலே மேலே என்று பறந்து கொண்டு இருப்பதால் சுவாரஸ்யம் கொஞ்சம் குறைந்து தான் உள்ளது. இதனால் நாம் வேடிக்கை தான் பார்க்க வேண்டி உள்ளது.


இந்த இடைவெளியில் சில பொதுவான கட்டுரைகளை எடுத்துக் கொள்ளலாம் என்று தான் நேற்று GDP பக்கம் திசை திரும்பினோம். இன்று அதே GDPயை ஒரு தத்துவ ரீதியாகவே பார்ப்போம்.

கடந்த பத்து வருடங்களில் பார்த்தால் எமது சொத்து மதிப்பு குறைந்தது இரண்டு மடங்காவது கூடி இருக்கும். ஆனால் அதே விகிதத்தில் எமது வாழ்க்கையின் தரம் கூடி இருக்கிறதா என்று பார்த்தால் கூடவில்லை என்றே சொல்லலாம். பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடு வந்து இழந்தது ஏராளம். உறவுகளின் உரையாடல்கள், பிடித்த சாப்பாடு, குறைவான தூக்கங்கள் என்று பல காரணிகளைக் கூறலாம்.


Gross National Happiness


ஆனால் நமது நாட்டை பொறுத்தவரை வாழ்க்கை தரத்தையும், பொருளாதரத்தையும் சமநிலையில் கொண்டு செல்வது என்பது மிகக் கடினமான செயல். ஒன்றை இழந்து தான் ஒன்றை பெற வேண்டி இருக்கிறது.

இது தான் GDPயை வைத்து ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அளவிடும் போது ஏற்படுகிறது. GDPயின் பின்புலத்தைப் பார்த்தால் அமெரிக்காவில் போர் சூழலில் எவ்வளவு பொருட்கள் அடுத்த மாதம் தேவைப்படும் என்பதைக் கண்டறியவே GDP என்ற காரணி கொண்டு வரப்பட்டது.

இதனால் GDPயின் முக்கிய நோக்கம் என்பது வளர்ச்சியைக் குறிப்பதற்காக அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம். எவ்வளவு தேவை என்பதைக் கண்டறியவே GDP பயன்பட்டது.

Paul Hawken என்ற அறிஞர் GDPயை இவ்வாறு குறிப்பிடுகிறார்.
 "At present, we are stealing the future, selling it in the present, and calling it GDP."

இதன் தமிழாக்கத்தை பார்த்தால் "எதிர்காலத்தை திருடி நிகழ்காலத்தில் விற்பது பெயர் தான் GDP". ஆமாம் அப்படித் தான் மாறி விட்டது. அடுத்து ஒரு இலக்கை வைத்துக் கொண்டு, எப்பொழுதும் ஓடிக் கொண்டே இருக்கும் நிலைமைக்கு நம்மை மாற்றி விட்டது GDP.

ஆனால் வளர்ச்சியைக் குறிப்பதற்கு வேறு காரணிகளை எடுத்தால் அது சிக்கலான முறையாக மாறி விடும் என்பதற்க்காக GDPயை எடுத்துக் கொண்டார்கள். நினைத்து இருந்தால் மாற்றி இருக்கலாம் என்பது எமது கருத்து. கார்பரேட் முதலாளிகள் இதற்கு விடுவார்களா என்பது தான் இதில் உள்ள பிரச்சினை.

இந்த சூழ்நிலையிலும் நமக்கு வட திசையில் உள்ள பூடான் நாடு ஒரு புதுமையான முறையை 40 வருடங்களாக பின்பற்றி வருவது ஆச்சரியப்பட வைக்கிறது. இதனை Gross National Happiness(GNH) என்று குறிப்பிடுகிறார்கள்.

பூடான் மன்னரால் 1972ல் புத்த மதத்தை அடிப்படையாக வைத்து GNH என்ற அளவுகோல் உருவாக்கப்பட்டது. இதில் வளர்ச்சியைக் குறிப்பிடும் அளவுகோலாக பொருளாதாரத்துடன் மக்களின் மகிழ்ச்சி நிலையையும் சேர்த்துள்ளார்கள்.

கீழே உள்ள ஆறு காரணிகளும் ஒவ்வொரு வருடமும் வளர்ச்சியின் அளவுகோலாக எடுக்கப்படுகிறது.

1) பொருளாதாரம்         2) உடல் நலம்
3) மன நலம்                    4) பணியிட நிலை
5) சமூக நலம்                 6) அரசியல் நிலை

Gross National Happiness


இந்தக் காரணிகளில் நமது கடன், வரவு, விலைவாசி, மருத்துவம், குழந்தை இறப்பு, வேலை வாய்ப்பு, வேலை பாதுகாப்பு, ஜனநாயகம், தனிமனித சுதந்திரம், கொலை கொள்ளைகள் என்று சமூகத்தின் பல பிரச்சனைகளும் வந்து விடுகின்றன.

இதனால் மக்கள் போன வருடத்தை விட தற்போது சந்தோசமாக இருக்கிறார்களா என்பதை ஓரளவு மதிப்பிட முடிகிறது. அதில் இறக்கங்கள் இருப்பின் கொள்கைகளும் அதற்கேற்றவாறு மாற்றப்படவும் செய்யப்படுகின்றன.

ஆனால் GDP என்பது இந்தக் காரணிகளை மொத்தமாக புறக்கணித்து விடுகிறது என்பதே உண்மை.

இந்த அளவீடுக்காக ஒவ்வொருவரிடம் ஐந்து மணி நேர அளவு நேர்காணல் முறையில் பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

இந்த அளவுகோலில் உள்ள முக்கிய பிரச்சினை என்னவென்றால், மக்கள் விவரங்களை உணமையாக கொடுக்க வேண்டும்  நமது ஊரில் ரேஷன் கார்டுக்கு பொய்களை அடித்து விடுவது போல் இருந்தால் மொத்த அளவீடும் தவறாக போய் விடும்.

அடுத்து, நம்மை ஆளும் அரசு பூடான் மன்னரைப் போல் நியாயமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த அளவீடு மூலம் கிடைக்கும் தரவுகள் எண்களை அடிப்படையாக வைத்து இல்லாததால் இஷ்டத்திற்கு எளிதில் மாற்றி விடலாம்.

இந்த இரண்டையும் தவிர்த்து GNH மூலம் உண்மையான விவரங்கள் பெறப்பட்டால் அதனை விட சரியான அளவுகோல் இருக்க முடியாது.

மன்னராட்சியாக இருந்தாலும் மகிழ்வான ஆட்சியாக இருப்பதால் பூடானை எவ்வளவும் பாராட்டாலாம்!



பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின்அடுத்த பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .

English Summary:
Bhutan is showing innovative method of measuring country's growth factor. Gross National Happiness(GNH) finds out to true alternative for Gross Domestic Product (GDP). Happiness is more important than production.   


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக