புதன், 12 நவம்பர், 2014

குழப்பத்தில் முடிந்த ஏர்டெல்லின் லூப் டீல்

இந்தியாவில் முதன் முதலில் டெலிகாம் தொழிலை ஆரம்பித்தது யாரென்று பார்த்தால் BPL மொபைல் நிறுவனம் தான். ஆனால் அவர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக BPL வளர முடியாமல் பொய் விட்டது.


இதனால் Khaitan Holdings என்ற முதலீட்டு நிறுவனத்தின் கைக்கு BPL மொபைல் பிரிவு மாறியது. 2009ல் பெயரை லூப் மொபைல் (LOOP MOBILE)  என்று மாறிக் கொண்டார்கள்.பெயர் மாற்றிய பிறகும் அது ஒரு தேறாத நிறுவனமாகத் தான் இருந்தது. அதற்கு அனுபவம் இல்லாத நிர்வாகமும் ஒரு காரணம் என்று நம்பப்படுகிறது.

2G வழக்கில் தொடர்பு உடையது என்று கூறி புதிய ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கூட கிடைக்காமல் போய் விட்டது. இதனால் இந்த மாதத்திற்கு பிறகு டெலிகாம் தொழிலையும் தொடர முடியாத நிலைமை.

இருந்தாலும் 30 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டு இருந்ததால் பல நிறுவனங்களுக்கு லூப் மீது ஒரு கண் இருந்தது. இதனால் ஏர்டெல் நிறுவனம் லூப்பின் 'வாடிக்கையாளர்களை மட்டும்' 700 கோடிக்கு வாங்கிக் கொள்வதாக டீலை முடித்தது.

ஆனால் லூப் நிர்வாகம் இந்த டீலுக்காகவோ அல்லது எதிர்காலதிற்காகவோ தன்னை எந்த விதத்திலும் தயார்படுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மையான விடயம்.

இந்த டீலில் 'வாடிக்கையாளர்களை மட்டும்' என்பதை நினைவில் கொள்க. மற்றபடி பணியாளர்கள், உபகரணங்கள், நெட்வொர்க் எல்லாவற்றையும் என்ன செய்வது என்று அவர்களும் திட்டமிட்டுக் கொள்ளவில்லை.

வேலை பாதுகாப்பு இல்லாததால் கடந்த இரண்டு மாதங்களில் 70% பணியாளர்கள் அவர்களாகவே கிளம்பி விட்டனர். இதனால் சேவை கொடுக்க ஆளில்லாமல் போக, கடந்த இரு மாதங்களாக மகா மட்டமாக சேவை கொடுக்க வாடிக்கையாளர்கள் மாறத் தொடங்கி விட்டனர். அவர்களை வோடபோன் போன்ற போட்டியாளர்கள் வாசல் வரை வந்து அழைத்து சென்றனர்.

'வாடிக்கையாளர்களுக்கு மட்டும்' என்று டீலை முடித்த ஏர்டெல் அதே வாடிக்கையாளர்கள் வெளியேறிய போது அதிர்ச்சிக்கு சென்றது. இதனால் 700 கோடி எல்லாம் தர முடியாது என்று கூறி ஏர்டெல் டீலை பல மடங்கு குறைத்தது. அதற்கு லூப்பும் ஒப்புக் கொள்ளாததால் இறுதியில் டீல் முறிந்தது.இங்கு மத்திய அரசு நிறுவனமான ட்ராய்யும் டீலுக்கு முட்டுக்கட்டை போட்டது. மொபைல் நிறுவனந்தை மாற்றுவதாக இருந்தால் ஒவ்வொருவரும் 19 ரூபாய் அரசிற்கு செலுத்த வேண்டும் என்பது விதி. நிறுவனங்கள் தங்கள் இஷ்டத்திற்கு மாறி விட்டால் எங்க வருமானத்திற்கு யார் பொறுப்பு என்று ட்ராய் கேட்டது. அதற்கும் பதில் இல்லை.

இது போக, அக்சிஸ் வங்கி உட்பட சில வங்கிகள் 400 கோடி ரூபாய் அளவு கடனையும் கொடுத்து இருந்தன. அதற்கும் லூப் நிர்வாகம் எந்த வித பதில் சொல்லவில்லை.

வருவதை வாங்கி விட்டு சீட்டுக் கம்பெனி மாதிரி ஓடி விடலாம் என்று நினைத்த லூப் நிர்வாகத்திற்கு ஆப்பு சரியான இடத்தில அடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனுடன் இணைந்த வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படுவது தான் கவலைக்குரிய விடயமாக மாறி உள்ளது.

Anyway, This is not a Professional Deal..

English Summary:
Airtel pulls out of LOOP deal.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

1 கருத்து: