புதன், 7 மே, 2014

பங்குச்சந்தையில் ஜோதிடத்தை நம்பலாமா?

எமது தளத்தில் ஒரு கருத்து கணிப்பு கொடுத்து இருந்தோம்.

அதன் தலைப்பு. "பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஜோதிடம் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டா?"


85.7% நண்பர்கள் நம்பிக்கையில்லை என்றும், 9.5% நண்பர்கள் நம்பிக்கை உள்ளது என்றும், 4.7% நண்பர்கள் தெரியவில்லை என்றும் ஓட்டு அளித்து இருந்தார்கள்.

பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஜோதிடம் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டா?

தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமான கேள்வி இது.

ஆனால் எம்மைப் பொறுத்த வரை ஜோதிடம் மீது அவ்வளவான நம்பிக்கை இல்லாதவன்.

இது ஓரளவு கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டை கோழியிலிருந்து வந்ததா? கடவுள் இருக்கிறாரா? இல்லையா ? என்ற விடை தெரியாத கேள்விகளுக்கு ஒப்பானது.

அதனால் எமது கருத்துகளை திணிப்பதைத் தவிர்த்து, மற்றவர் எண்ணங்களை அறியவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.



பங்குச்சந்தையில் ஜோதிடம் பார்ப்பவர்கள் நமது ஜாதகம், நிறுவன ஜாதகம், நிறுவனங்களை நடத்துபவர்கள் ஜாதகம் போன்றவற்றை கலந்து ஆராய்ச்சி செய்து சொல்வதாகக் கூறுகிறார்கள்.

ஏன், ஒரு சில இடங்களில் நாடு பிறந்த தினம், பிரதம மந்திரி, நிதி மந்திரி போன்றவர்கள் ஜாதகத்தையும் சேர்த்து பார்ப்பதாக கூறப்படுகிறது.

அதற்காக, பல கடினமான ஜோதிட கணித சூத்திரங்களையும் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

இவ்வளவு தகவல்களையும், கணித சூத்திரங்களையும் பயன்படுத்திய பிறகும் ஜோதிட கணிப்புகள் சரியானவை என்று நிரூபணம் செய்யப்படவில்லை.

ஆனால் நமது பகுத்தறிவிற்கு உட்பட்டு நிறுவனம், துறைகள் தொடர்பான தகவல்கள் இதனை விட அதிகமாகவே வெளியில் காணப்படுகின்றது.

இந்த கடினமான ஜோதிட கணக்குகளை விட Technical Analysis, Fundamental Analysis போன்றவற்றின் கணிப்புகள் எளிதாகவே உள்ளன. அதனை கணக்கிடுவதற்கும் கணிப்பொறியில் பல மென்பொருள்கள் உள்ளன.

இப்படி பல வசதிகள் இருந்த பிறகும், தெரியாத கற்பனையாகத் தோன்றும் ஒன்றை பங்குச்சந்தை வர்த்தகத்தில் நம்ப வேண்டும் என்று அவசியமில்லை.

'கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள்' பார்வையில் பார்த்தால் கூட, பிரபஞ்சமும் கடவுளாலே இயக்கப்படுகிறது.

அதனால் ஜோதிடத்திற்கு அடிப்படையான கிரகங்களின் செயல்பாடுகள் கூட அவருடைய வேலையாகவே இருக்கும். அதில் நாமும் ஏன் கடவுளின் வேலையை குறுக்கிட வேண்டும் அல்லது ஆராய முற்பட வேண்டும்?



கடவுள் நம்மை விட மஹா அறிவாளி என்றால் நமது எதிர்காலமும், விதியும் நமக்கு தெரியும்படி கண்டிப்பாக எழுதி இருக்க மாட்டார்

இதனால் நமக்கு தரப்பட்ட பகுத்தறிவோடு, கிடைக்கப்பெற்ற தரவுகளை மட்டும் வைத்து பங்கு வர்த்தகம் பண்ணுவோம்.

நிரூபணம் செய்யப்படாத எந்த வித முறைகளையும் பண விடயங்களில் தவிர்ப்பது நல்லது.

நாம் தொழிலாக ஒரு சிறிய கடை ஆரம்பிப்பதாக இருந்தால் கூட  "இந்த கடை இந்த இடத்தில இந்த சூழ்நிலையில் நன்றாக நடக்குமா?" என்று தான் முதலில் ஆராய்வோம். ஜாதகம் போன்ற பிற பலன்கள் இரண்டாம் பட்சமே.

அதே போல் தான் பங்கு நிறுவனங்கள். இந்த சூழ்நிலையில் நன்றாக செயல்படுமா என்பதை முதலில் சிந்தித்தாலே பல கேள்விகளுக்கு விடை கிடைத்து விடும்.

செபியும் கூட ஜோதிட பங்குச்சந்தை வர்த்தகத்தைப் பற்றி எச்சரிக்கை செய்துள்ளது. அதனால் ஜோதிடத்திற்காக அதிக அளவு பணம் பங்குச்சந்தையில் செலவழிக்க வேண்டாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக