சனி, 17 மே, 2014

தெளிந்த தேர்தல் நீரோடையில் மோடி

கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு ஒரு நிலையான தனிக்கட்சி அரசு அமைய இருக்கிறது. இவ்வளவு இடங்களை மோடியே எதிர்பார்த்திருப்பாரா? என்பது சந்தேகம். அந்தளவு மக்கள் அள்ளிக் கொடுத்து உள்ளார்கள்.


பங்குச்சந்தையைப் பொறுத்த வரை 1000 புள்ளிகள் வரை உயர்ந்து, அதன் பிறகு 200 புள்ளிகள் உயர்வுடன் நிலை பெற்று விட்டது.

அதிக அளவு செண்டிமெண்ட் சந்தையான இந்திய பங்குச்சந்தைக்கு இந்த தேர்தல் முடிவுகள் ஒரு உற்சாக டானிக்கே.

மக்கள் அதீத நம்பிக்கை கொண்டு மோடிக்கும் அவரது பிரச்சாரத்துக்கும் வாக்களித்து இருக்கிறார்கள்.

அதனை நடைமுறையில் செயல்படுத்துவார் என்று நம்புவோமாக!

புதிய அரசுக்கு வாழ்த்துக்கள்!

இயற்கையும் மோடியின் பக்கம் இருக்கிறது என்று கருதலாம்.

அசுர பலத்தில் மோடி 
காங்கிரஸ் அரசு தங்கள் தவறுகளை கடைசி வருடத்தில் நிவர்த்தி செய்து தான் சென்றுள்ளார்கள். அதன் பலன் இனி வரும் வருடங்களில் வெளிவர ஆரம்பிக்கும்.

ஆனால் இதனை சரியான முறையில் எடுத்து சென்று இருந்தால் இந்த அளவு தோல்வியைத் தழுவி இருக்க மாட்டார்கள். காங்கிரஸ் தலைவர்களின் பொறுப்பற்ற தன்மைக்காகவாவது இந்த முறை மாற்றம் தேவை.

ஏற்கனவே ரூபாய் மதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று மாத தரவுகளில் ஏற்றுமதி அதிகரித்தும் இறக்குமதி குறைந்தும் வந்துள்ளது. இதனால் நிதி பற்றாக்குறையும் குறைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்தாலே போதும்!

முப்பது வருடங்களுக்கு பிறகு ஒரு முழு பெரும்பான்மையை அளித்துள்ளார்கள். இனி கூட்டணி பிரச்சினை என்று சொல்லி தப்பி விடவும் முடியாது.

அதனால் எந்த தவறுக்கும் அவர்களே பொறுப்பு என்று உள்ளதால் எச்சரிக்கையாக செயல்பட வாய்ப்பு அதிகம்.

பங்குசந்தையைப் பொறுத்த வரை இது மிக நல்ல செய்தி.  அடுத்த ஐந்து ஆண்டுகளை முதலீட்டாளர்கள் முடிந்த வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏனென்றால் 1991ல் பொருளாதார தாராளமயமாக்கலுக்கு பிறகு இது தான் முதல் மிக அறுதி பெரும்பான்மையுள்ள பார்லிமென்ட்.

இதனால் கொள்கை முடிவுகள் விரைவாக, தெளிவாக எடுக்கப்படும் போது அது நேரடியாக நிறுவனங்களின் செயல்பாடு திறனை உயர்த்தும். முக்கியமாக சுரங்கம், பவர் நிறுவனங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.

அது போக, 2007 முதல் கடந்த ஏழு ஆண்டுகளாக சந்தை 18,000க்கும் 20,000க்கும் இடையில் தான் உழன்று கொண்டிருந்தது.

இதனால் நல்ல முறையில் செயல்பட்ட நிறுவனங்களின் பங்குகள் கூட தொய்வாக இருந்தன. தற்போது மீண்டும் எழுச்சி காண ஒரு நல்ல வாய்ப்பு. நல்ல முறையில் திட்டமிட்டால் முதலீடுகள் மடங்குகளாக மாறி விடலாம்!

பொது சிவில், 356 பிரிவு என்று தேவையில்லாத பிரச்சனைகளை நோக்காமல் வளர்ச்சியை மட்டும் குறிக்கோளாக கொண்டால் இந்த முறை இந்தியாவிற்கு ஒரு நல்ல மாற்றமாக இருக்கலாம்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக