வெள்ளி, 9 மே, 2014

யூக வணிகத்தில் 5500 கோடி மோசடி செய்த NSEL

இந்தியாவைப் பொறுத்த வரை ஊழல் செய்திகள் எங்கு இருந்து வரும் என்று சொல்ல முடியாத அளவிற்கு எங்கிருந்தும் திடீரென்று வந்து விடுகிறது. இதனால் யாரை நம்புவது என்றே தெரியவில்லை.

கடந்த மாதம் தான் சஹாரா ஊழல் பற்றி விரிவாக எழுதி இருந்தோம்.

அந்த பதிவினை இங்கு பார்க்க..
சஹாரா - மற்றொரு இந்திய கார்ப்பரேட் கரும்புள்ளி

அதற்குள் அடுத்த ஊழல் செய்தி வந்து விட்டது.

பங்கு வர்த்தகம் செய்து வரும் பலரும் 'கம்மாடிட்டி' என்று சொல்லப்படும் விவசாய, உலோக பொருட்களின் யூக வணிகத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். அங்கு தான் மோசடியும் நடந்துள்ளது.

இந்தியாவில் கம்மாடிட்டி வணிகத்தின் 90 சதவீத வணிகம் Financial Technologies என்ற நிறுவனம் நடத்தும் MCX எக்ஸ்சேஞ்ச் ((Multi Commodity Exchange) மூலம் நடந்து வருகிறது. இது உலகின் ஆறாவது பெரிய 'commodity exchange' ஆகும்.

அப்படியொரு நினைத்திராத இடத்தில தான் தான் தற்போது மோசடி நடந்துள்ளது. இதனால் சிறு முதலீட்டாளர்களுக்கும் கடுமையான பாதிப்பு.

மாமியார் வீடு செல்லும் ஜிக்னேஷ் ஷா,
MCX நிறுவனர் 
இந்த MCX எக்ஸ்சேஞ்ச் அதன் துணை நிறுவனங்களான Financial Technologies மற்றும் National Spot Exchange Ltd(NSEL) போன்றவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர் ஜிக்னேஷ் ஷா என்ற பிரபலம் தான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இனி இதனைப் பற்றி விவரமாக பார்ப்போம்.

இந்த ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் மூலம் அரிசி, சர்க்கரை போன்ற விவசாய பொருட்களும், தாமிரம், வெள்ளி, தங்கம் போன்ற உலோகப் பொருட்களும் யூக வணிகத்தின் அடிப்படையில், இருந்த இடத்திலிருந்து கொண்டே முன் பேர வர்த்தகம் செய்ய முடியும்.

அதாவது, விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கில் கொடுத்து அதற்கான ரசீதைப் பெற்றுக் கொள்வார்கள்.

அந்த பொருட்களை வாங்குபவர்கள், இணையம் மூலம் வாங்கிக் கொண்டு அதற்கான ரசீதைக் காண்பித்து, அருகிலுள்ள NSEL நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கு மூலம் பெற்றுக் கொள்ளலாம். இந்த விநோயோகம் 11 நாட்களுக்குள் நடக்க வேண்டும். இது தான் நீண்ட நாளைய நாள் வழக்கமாக இருந்து வந்தது.

ஆனால் இரண்டுவருடங்களுக்கு முன், பொருட்களை விநியோகிக்காமாலே வாங்கவும் விற்கவும் இந்த எக்ஸ்சேஞ்ச் அனுமதி அளித்தது.

இதன் மூலம் பொருட்களை வாங்காமலே, கற்பனையாக விலைகளை ஏற்றி, இறக்கி   யூக வணிகம் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம்.

இங்கு தான் பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது, எந்த ஒரு பொருளை வாங்குபவருக்கும் ரசீது கொடுக்கும் முன், அதற்கான பொருளை தமது சேமிப்புக் கிடங்கில் வைத்துக் கொண்டு ரசீது கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், ரசீது என்பது வெறும் காகிதமே. இது கிட்டத்தட்ட தங்கத்தை ஈடாக வைத்துக் கொண்டு ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது போல்.

ஆனால், MCX எக்ஸ்சேஞ்ச் மோசடித்தனமாக 5500 கோடி மதிப்புள்ள பொருட்களுக்கு தமது சேமிப்புக் கிடங்கில் எந்த வித இருப்பும் வைக்காமலே ரசீது கொடுத்துள்ளது. அதாவது அந்த ரசீதிற்கு எந்த மதிப்பும் கிடையாது.


இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி நிறுவனத்தில் உள்ளவர்கள் ஒரு கற்பனையான தேவையை உருவாக்கியும், யூக வணிகத்தின் மூலம்  கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர்.

இதனைத் தான் தற்போது அரசு கண்டுபிடித்துள்ளது.

தற்போதுள்ள நிலவரப்படி, முதலீட்டாளர்களின் 60 சதவீத முதலீடு திருப்பி கிடைக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

60% முதலீடு திருப்பிக் கிடைக்க
வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது 

கடைசி பத்து ஆண்டுகளாக இந்தியாவில் விலைவாசி உயர்விற்கு இந்த மாதிரியான யூக வணிகமும் ஒரு காரணம் என்று நம்பப்படுகிறது. இங்கு தான் இடைத்தரகர்கள் புகுந்து விளையாடுகிறார்கள்.

ஆனால் இந்த எக்ஸ்சேஞ்ச், பிரணாப் முகர்ஜியால் லைசென்ஸ் கொடுக்கப்பட்டு, சிதம்பரம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அப்படி என்றால் எவ்வளவு செல்வாக்கு பெற்றவர்கள் என்பதும் தெரிய வருகிறது.

ஒரு அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாதிரி வர்த்தகங்களை தனியாரிடம் விடாமல் அரசே நிர்வகிப்பது நல்லது. இந்த மாதிரியான ஊழல்கள் முதலீட்டு கட்டமைப்பிற்கும், நாட்டிற்கும் மிகுந்த அவமானம் தரக் கூடியவை.

ஹர்ஷத் மேத்தா, சத்யம், சஹாரா, NSEL என்று தொடர்ந்து வரும் முதலீடு சார்ந்த பெரிய ஊழல்கள் இந்தியாவில் முதலீட்டு நம்பிக்கையை வெகுவாகக் குலைத்து விடும். இதனால் இந்தியா முதலீட்டிற்கு ஏற்ற நாடு இல்லை என்ற சூழ்நிலை வந்தால் கூட ஆச்சரியமில்லை.

சிறு முதலீட்டாளர்களாகிய நாமும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது. நமது முதலீட்டிற்கு தேவையான பாதுகாப்பையும் யோசிக்க வேண்டியுள்ளது. அதனால் சூதாட்டம் போல் செயல்படும் வர்த்தகங்களான Binary Options, Forex Trading போன்றவற்றையும் தவிர்த்து விடுவது நல்லது.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

  1. நீண்டகால முதலீடெனக் கருதி வைத்திருந்த FTIL பங்குகள் தேளாகக் கொட்டிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நிகழ்வும் முதலீட்டாளர்களுக்கு சரியான பாதிப்பு. தங்கள் கருத்துகளுக்கு நன்றி!

      நீக்கு