திங்கள், 5 மே, 2014

IPO வாங்கும் முன் தெரிந்து கொள்வோம்(ப.ஆ - 13)

பங்குச்சந்தையில் ஒரு பிரபலமான வார்த்தை IPO என்பது. மிகக் குறுகிய காலத்தில் அதிக அளவு லாபம் கொடுக்கும் ஒரு பங்கு முதலீடு முறை என்று அறியப்படுகிறது.


IPO என்பது பங்கு வர்த்தகத்தின் மிக அடிப்படையான ஒன்று என்பதால் இது தொடர்பான விரிவான பதிவை எழுதுகிறோம்.

'பங்குச்சந்தை ஆரம்பம்' என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு காணலாம்.

IPO என்பதன் விரிவாக்கம் "Initial Public Offering".


ஒரு நிறுவனம் தமது விரிவாக்கம் அல்லது பிற தேவைகளுக்காக பொது மக்களிடம் பணத்தினை பெற முயலும்.

இதனை நிதிகளாக வெளியிட்டும் பெற்றுக் கொள்ளலாம். (Debt Funds)

மற்றொரு வழியாக பங்குகளாக வெளியிட்டும் பெற்றுக் கொள்ளும். இவ்வாறு முதன் முதலில் பங்குகளாக வெளியிட்டு தம்மை பொது நிறுவனமாக மாற்றுவதைத் தான் Initial Public Offering(IPO) என்று அழைக்கிறார்கள்.

இவ்வாறு வரும் பங்குகளில் குறிப்பட்ட சதவீதம் பொது மக்களுக்கும், சிறு பகுதி நிதி நிறுவனகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும்.

IPO வெளியீட்டின் போது பங்கு விலை இரு வழிகளில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

முதல் முறையில், பங்கு விலை நிலையான விலையாக(Fixed Price) குறிப்பிடப்படுகிறது.  ஆனால் இந்த முறை அவ்வளவாக பின்பற்றப்படுவதில்லை.

இரண்டாவதாக உள்ள முறையே அதிக அளவு பின்பற்றப்படுகிறது.

இரண்டாவது முறையில், பங்கு விலை குறைந்த பட்சம், அதிக பட்சம் என்ற இடைவெளியுடன் கூடிய விலையாக நிர்ணயம் செய்யப்படுகிறது.

நாம் இந்த இடைவெளியில் உள்ள ஒரு விலையை குறிப்பிட்டு நமது விருப்பத்தை பதிவு செய்யலாம். கிட்டத்தட்ட ஏலம் எடுப்பது போல் உள்ள முறை.
இதில் கட் -ஆப் விலை 26 க்கு மேல் இருக்கும்
(100% க்கு மேல் subscription இருக்குமிடம்)

இந்த முறை Book Building என்று அழைக்கப்படுகிறது.இதில் பங்கிற்கு உள்ள தேவை விகிதத்தைப்(Demand) பொறுத்து இறுதி விலை நிர்ணயம் செய்யப்படும். இந்த இறுதி விலையை Cut-Off Price என்று அழைக்கிறார்கள்.

சில சமயங்களில் தேவை மிக அதிகமாக இருக்கும் பட்சத்தில் இறுதி விலைக்கு மேல் குறிப்பிட்டவர்களுக்கு முழுமையாக விகிதத்தில் ஒதுக்காமல், குறிப்பிட்ட சதவீததில் மட்டும் பங்குகளை ஒதுக்குவார்கள்.

ஒரு நிறுவனம் பங்குச்சந்தை பட்டியலில் இடம் பெற விரும்பும் போது இடைப்பட்ட தரகர்கள், வங்கிகள் என்று பல முறைகளில் அதிக அளவு  செலவிடுகிறது. இது போக தமது நிறுவனத்துக்கு கிடைக்கும் ஒரு விளம்பரமாகவும் IPOவை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது.

இதனால் தங்கள் நிறுவனத்தின் IPO முறை தோல்வி அடைவதை நிறுவனங்கள் பெரிதும் விரும்புவதில்லை.

இதன் காரணமாக IPOவில் தேவையை அதிகரிக்கும் பொருட்டு அதிக அளவு விலையை குறிப்பிடாமல் நியாயமாக குறிப்பிட விரும்புவார்கள். சில சமயங்களில் நல்ல மதிப்பீடலாகவும் இருக்கலாம்.

மிக அதிக தேவை இருக்கும் பட்சத்தில்,  IPO வெளியீடு முடிந்து, நிறுவனம் பங்குச்சந்தை பட்டியலுக்குள் வரும் போது  பங்கு விலை மிகக் குறுகிய காலத்தில் அதிக அளவு ரிடர்ன் கொடுக்கும்.

இதற்காக பலர் IPO முறையை அதிக அளவு விரும்புவார்கள்.

ஆனால் இதிலுள்ள ஒரு முக்கிய பிரச்சினை அதிக அளவு தகவல்கள் கிடைக்கப் பெறாமை. நிறுவனம் தொடர்பான தகவல்கள் அதன் சுருங்கிய Prospectus வடிவத்தில் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. இதனால் நம்பகத்தன்மை சந்தேகத்திற்கு உரியதாகிறது.

பொதுவாக IPOவில் முதலீடு என்பது செய்திகள், பரிந்துரைகள் என்று கேள்வி ஞானம் மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்தே முதலீடு செய்யப்படுகிறது. நிறுவனம் தொடர்பான கடந்த கால செயல்பாடுகள், நிதி நிலை அறிக்கைகள் நம்மிடம் இல்லாதது ஒரு பெரிய குறையாக உள்ளது. இது போக நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி என்பதையும் யூகிப்பது கடினமாக உள்ளது.

இதனால் 'Valuation' என்ற பங்கு மதிப்பீடு சூத்திரங்களை பயன்படுத்த முடியாததால் கிட்டத்தட்ட நம்பிக்கையின் அடிப்படையில் குத்து மதிப்பாகவே பங்கு விலையை நிர்ணயிக்க வேண்டி உள்ளது.

இந்த மதிப்பீடல் பிரச்சினைகளின் காரணமாக பொதுவாக நீண்ட கால முதலீட்டாளர்கள் IPO முதலீடுகளை விரும்புவதில்லை.

2013ல் IPO செயல்பாடுகள் 
கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம் என்று எண்ணுபவர்கள் அந்த துறையில் உள்ள மற்ற நிறுவனங்களின் பங்குகள் மற்றும் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்கள் போன்றவற்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதன் மூலம் IPOவில் முதலீடு செய்யலாம்.

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் அடுத்த பகுதியை இங்கு காணலாம்.

English Summary:
Initial public offers are the first hand stocks selling by promoter. IPOs are in lower price and expected to give better income in shorter time. The lack of financial history is negative thing for IPO. 

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக